Friday, December 14, 2012

15வது அரங்காடல் பற்றிய விமர்சனம்

பல காலம் தவமிருந்ததற்கு பலன் கிடைத்தது போலிருந்தது மனவெளியினரின் அரங்காடல் மேடையேறுகிறது என்ற செய்தி.

அன்றைய நாளை தப்பவிடாமல் ரெலிபோன் கலண்டரில் பதியவைத்ததால் மறக்காமல் மார்க்கம் தியேட்டருக்கும் வந்துவிட்டேன். ஏகப்பட்ட கூட்டம். ரிக்கற் கிடைக்குமா என ஏக்கத்தோடு போனேன். ரிக்கற் கிடைத்தது மிக சந்தோசம். முன்வரிசையில் இருந்து நாடகங்களை பார்க்க வேண்டுமென நான் நினைத்து கதவு திறந்தவுடன் முதல்ஆளாய் உள்ளே போனால் முன் இருக்கைகள் முழுவதுமே ஒதுக்கப்பட்டிருந்தது. விசாரித்ததில் அவர்கள் விஐபி யாம். கடைசியிலிருந்து இரண்டாவது வரிசையில் இருந்தேன். 5 மணிக்கு ஆரம்பமாகும் என்று சொல்லியிருந்தாலும் 5.15 க்குத்தான் விளக்குகள் அணைந்தது.

செல்வனின் விளக்கத்தின் பின் முதல் நிகழ்வு ஆரம்பமானது. இது கவிதாநிகழ்வல்ல, கவியரங்கல்ல , ஒரு கவிமொழிவு என்றார்கள். பாத்திரங்கள் பிரதியை பார்;த்து வாசித்ததும், தாளத்தோடு போன இசையும் நிகழ்வை பார்வையாளர்களிடமிருந்து அன்னியப்படுத்தியது. மேடைக்கு வந்துவிட்டால் எதையாவது நிகழ்த்தி காட்ட வேண்டாமா?

அடத்த நிகழ்வு செழியனின் பிரதியை து~p இயக்கிய நாடகம். இல்லாத ஒன்றை எப்படியெல்லாம் விற்பனை செய்கிறார்கள் என காட்டினார்கள். து~p பல உத்திகளை கையாண்டிருந்தார். மேடையின் பிற்பகுதியில் காட்சிப் பொருட்களை வைத்துவிட்டு பாத்திரங்கள் மாறும்போது தம்மை மாற்றிக்கொள்வதும். ரிவி சனலை மாற்றுவது என நுட்பமாக கையாண்டிருந்தார். போலிச் சாமியார்களின் புரட்டும் அதைவைத்து பணம் புரட்டுவது போல் காட்டியிருந்தாலும் மக்களின் முட்டாள்தனத்தை எப்படி அரசியல் வாதிகள்; தமக்கு சாகமாக்குகிறார்கள் என காட்டியிருந்தார்.

நடித்தவர்கள் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். நீராவின் நடிப்பு அருமை. எனக்கு உடனே நினைவுக்கு வந்தது நிர்மலாதான். எப்படி பாலேந்திராவின் நாடகப்பயணத்திற்கு நிர்மலா துணையாக இருந்தாரோ அதேபோல் து~pக்கு நீரா அமைந்திருக்கின்றார். நிச்சயம் து~p நாடக உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்வார்.

அடுத்த நிகழ்வாக மேடையேறியது மதிவாசனின் இயக்கத்தில் சகாப்தனின் பிரதி. ஏதோ காரணத்திற்காக தற்கொலை செய்ய துணிந்தவர்களுக்கும் வாழவேண்டும் என்ற ஆசை உள்ளது என்பதை பல தரப்பட்ட வித்தியாசமான வயதுள்ள பாத்திரங்களை வைத்து வெளிக்கொணரப் பட்டிருக்கிறது. மதிவாசன் ஒரு சிறந்த நடிகன். தன்னால் திறமையாக இயக்கவும் முடியும் என நிரூபித்திருக்கிறார். குமாரின் நடிப்பை பாராட்டத்தான் வேண்டும். மற்றவன் தாக்கும்போது நிலத்தில் வீழ்வது மிக யதார்த்தமாக இருந்தது.

அடுத்ததாக ஒரு நடனம். நடனம் என்றால் ஒரு கதையை சொல்ல வேண்டும். அல்லது இனிமையான இசைக்கு எடுப்பாக அசைந்து அபிநயிக்க வேண்டும். இங்கே எடுத்துக்கொண்ட கரு முரண்மூளை நோய். அதற்கான இசையின் ஆரம்பம் அதிலே செருகப்பட்ட நககநஉவள வித்தியாசமான உணர்வை தந்தது. நடனமும் அவர்களின் அவஸ்தையை வெளிக் கொணர்ந்தது. அற்புதமான ஒளியமைப்பு. ஆனால் அதிகநேரம் பார்க்க முடியவில்லை. அப்படியான நோயாளியை ஒரு கதைக்குள் பாத்திரமாக கொண்டு வந்திருக்கலாம். ஆனாலும் ஒரு இளைய தலைமுறையின் தரமான முயற்சி. நடனமாடியவாகள் ஒன்றாக இணைந்து ஆடியது ரசிக்கக் கூடியதாயிருந்தது.

இறுதியாக வந்த நாடகம் பார்வையாளர்கள் எல்லோரையும் தன்னுள்வாங்கியிருந்ததை அவதானிக்க முடிந்தது. அதற்கு காரணம் செழியனின் காத்திரமான எழுத்தா? பாத்திரங்களாக தோன்றியவர்களின் இயல்பான நடிப்பா? அல்லது அவர்களை இயக்கிய விதமா? நாடகம் எங்கள் நிகழ்கால அரசியலை பகுத்தாய்ந்திருக்கிறது. பாத்திரங்கள் ஒவ்வொன்றும் வரும்போது எங்குளுக்கு ஏற்கனவே தெரிந்த ஒரு சம்பவத்தோடு இணைத்துப்பார்த்து விடைதேட தெண்டித்திருக்கிறோம். சுதந்திரமாக திரியும் எழுத்தாளன் சுதந்திரமற்று நிற்பதை படம் பிடித்து காட்டுகிறது. அனைவருமே இயல்பாக நடித்தபோதும் ஒளியமைப்பு கைகொடுக்கவில்லை. அதையும்மீறி பார்வையாளர்களின் பாராட்டை பெற்றவர்கள் இருவர். மலையாளத்தில் பேசிக்கொண்டு தன் மகளை பறிகொடுத்ததை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்திய வரகுணனும், தனது காதலை வெளிப்படுத்திய நர்த்தனனும் எல்லோராலும் பேசப்பட்டார்கள்.

மொத்தத்தில் இம்முறை அரங்காடல் பார்வையாளர்களிடம் பெரியதோர் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காத்திரமான நாடகங்கள் என்றால் அரங்காடல் மேடைதான் என மீண்டும் நிரூபித்திருக்கின்றது. நாடகம் முடிந்ததும் வாசலில் நடிகர்களையும் படைத்தவர்களையும் பாராட்டிவிட்டு காரில் ஏறி புறப்பட்டேன். எம்முள் எத்தனை திறமைகள் மறைந்து கிடக்கிறது. எத்தனை தரமான எழுத்தாளர்களும், இயக்குனர்களும், நடிகர்களும் எமக்குள் இருக்கிறார்கள். தரமான படைப்புக்களை ஒரு குடைக்கு கீழ் செயற்பட்டு வெளிக்கொணர்வார்களேயானால் மக்களும் நம்பிக்கையோடு ரசிக்க முன்வருவார்கள்.

அரசியலில் மட்டும்தான் பிரிந்திருக்கின்றோமா என்று பார்த்தால் எல்லாத் துறைகளிலும் நாம் பிரிந்துதான் நிற்கிறோம். நாம் இணையவே முடியாதா? தரமான படைப்புக்களை இணைந்து உருவாக்கினால் ஒன்று இரண்டு மூன்று என எத்தனையோ தடவைகள் மேடையேற்றலாமே. எமக்கென ஒரு பெரு வட்டத்தை உருவாக்கலாமே. ஊர்ச் சங்க மேடைகளில் மேடையேறும் கலைஞர்கள் எவரும் அரங்காடல் படைப்புக்களை ரசிக்க வராததற்கு என்ன காரணம்? தப்பான அபிப்பிராயமா? தாழ்வு மனப்பான்மையா? இந்த மேடையை பார்த்தால் இன்னமும் வளரலாம் என ஏன் உணரவில்லை.

தனக்கு தெரியாதென்பதை தெரியாதவன் மூடன். அவனை ஒதுக்கிவிடுங்கள் தனக்கு தெரியாதென்பதை தெரிந்தவன் மாணவன். அவனுக்கு சொல்லி கொடுங்கள். தனக்கு தெரியும் என்பதை தெரிந்தவர் குரு. அவரிடம் தாழ் பணியுங்கள். for more pictures click here

No comments: