Wednesday, December 12, 2012

9 வது அரங்காடல் பற்றிய விமர்சனம்

2002 இல் கனடாவில் நடந்த அரங்காடல் நாடகங்கள் தொடர்பான அறிக்கை.
                                                                  

சமீபத்தில் (2002) நடந்தேறிய நாடகங்கள் இரண்டும் பல நாள் விளம்பரங்களின் பின்னர் விமரிசையாக மேடையேற்றப்பட்டுள்ளது. இவைகளைப் பார்வையிட்ட பார்வையாளர்களை முதலில் பாராட்டவேண்டும். மணிரத்தினம் திரைப்படம், தொடர்நாடகம் என்ற பொதுப்புத்தி மட்டத்திலிருந்து நேரத்தையும் பணத்தையும் செலவிட்டு வருபவர்களைப் பாராட்டாமலிருந்தால் எப்படி?.

இயானன்ஸ்கோவின்- அயனன்ஸ்கோவின்- ஈயானன்ஸ்கோவின் நாற்காலிகள் நாடகம், முதலாவதாக, நான் பார்த்த நிகழ்வில் மேடையேற்றப்பட்டது. நாடகத்தின் கதை என்ன என்பதை சொல்லமுடியாது. ஏனென்றால் ஒரு கோட்டில் இல்லாத தொடக்கம் முடிவு இடையில் ஒரு உச்சக்கட்டம் எதுவுமில்லாத அபத்த நாடகம் என்று முன்னரேயே எழுத்தில் தந்துவிடுகின்றார்கள்.

இரண்டு வயோதிபர்கள் 'செலினிற்றி' தொட்டுக்கொண்டிருக்கும் பருவத்தில் உரையாடுகிறார்கள். உரையாடல் யாரோ ஒரு பேச்சாளர் வீட்டுக்கு வரவிருப்பதைச் சொல்கின்றது. அத்துடன் அவர்களின் கடந்த காலங்களை மீட்டல் வழக்கமான 'நொஸ்ரால்ஜிக்' சோகம் முதலியவைகளும் இதனால் மனைவியே தாயாக கணவனைத் தேற்றும் கண்றாவியும் நிகழ்கின்றது. எங்கள் ஊரில்தான் பெண்கள் மீது இப்படித் தந்திரமாக பொறுப்புக்களைச் சுமத்தித் தப்பிக்கும் ஆண்கள் என்றால் பிரான்ஸிலும் ஆதுதான் நிலைபோலிருக்கிறது. ஒரு போதும்கூட அவன், தான் அவளுக்குத் தந்தை என்றோ அவள் அவனை நீ எனக்குத் தந்தைபோல என்றோ சொன்னதாக நினைவில் இல்லை. ஈயானன்ஸ்கோவென்றால் என்ன கொம்பா முளைத்திருக்கிறது?

இப்படியான புராணங்களின் பின் அவர்கள் பேச்சு நிகழ்ச்சியைக் கேட்கும் விருந்தாளிகள் ஒவ்வொன்றாக வருகின்றார்கள். அதில் முதலில் வந்த பெண்ணும் ஒரு இராணுவ அதிகாரியும் சல்லாபத்தில் ஈடுபடுகின்றார்கள். இதை சமூக நடைமுறைக்கு ஒவ்வாதது, கூடாதது எனக்கண்டிக்கும் முதிய கணவன், மனைவியும் பின்னர் தொடர்ந்து வரும் விருந்தாளிகளிடம் மாறி மாறி சபலம் கொள்கின்றார்கள். பின்னர் அதை விட்டும் விடுகின்றார்கள்.

தொடர்ந்து ஆட்கள் பேச்சுக்கேட்க வருவது வேகமாகி பார்வையாளரை நுனி இருக்கiயில் இருக்கவைத்ததாக நினைத்துக் கொண்டு இசை ஒலியெளுப்புதலுடன் 'ட்ரான்ஸ்' அந்த முதிய கணவனும் மனைவியும் கூப்பாடு போட்டுப் பிரசங்கம் செய்கின்றார்கள். பேச்சு நிகழ்த்த வருபவர் எப்படிப்பட்டவர் என்பது குறித்த புனைவுகளை உருவாக்குவதே அவர்களின் நோக்கம்.

இறுதியில் பேச்சாளர் வந்து பிறருக்கு கையெளுத்துப் போட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே இவர்கள் இருவரும் எல்லாரும் எதிர்பார்த்த படியே, அவர்கள் வீடு ஒரு பாழ் நீர்நிலைக்குப் பக்கத்தில் இருந்ததால் அதற்குள் யன்னல் வழியாக விழுந்து இறந்துவிடுகின்றார்கள். எல்லாரும் எப்படி எதிர்பார்க்கமுடியும் என்றா கேட்கிறீர்கள் - நாடகம் தொடங்கிய நேரம் முதலே காட்சி மாறாதிருக்கும் 'கொட்டைப்பாக்கு வைக்கும் பெட்டிபோன்ற' அரங்கத்தில், இரு யன்னல்களும் அவற்றின் அருகே இரு வெள்ளைப் பிளாஸ்டிக் 'ஸ்ரூல்களும்' போட்டு வைத்திருந்தது பிறகு எதுக்காம்? ஏறிக் குதிக்கத் தானே.

இப்படி ஒரு நாடகத்திற்கு அபத்த நாடகம் என்றால் என்ன என்று புனைவு உருவாக்க, வெளியே கொடுக்கும் துண்டுப்பிரசுரத்தில் விளக்கக் கட்டுரை வேறு. அதைவிட நாடகத்தை ஏற்கனெவே வாசித்து தெரிந்து வைத்து வந்தவர்கள் தொலைந்தார்கள். நான் தெரியாத்தனமாக இருக்கையின் ஒரு கரையில் போய் மாட்டிக் கொண்டதால் வெளியேயும் வரமுடியாமல் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்து பக்கத்திலிருந்தவர்களின் வெறுப்பைத் தேடியதுதான் மிச்சம்.

ஐயன்மீர், அபத்த நாடகமோ வேறு 'என்ன கோதாரி வந்து குறுக்காலை போகுதோ' (மகாகவி நாடகத்தின் வசனம்.) அரங்கம், நிகழ்த்துதல் என்பதெல்லாம் இயக்குனரின் கைத்திறமை ஒன்றில்தான் இருக்கிறது. ஏற்கனெவே பெட்டி போன்ற சதுர மேடை அமைப்பில் வெறுத்துப்போயிருக்கும் நாடக ரசிகர்களினதும் நடிகர்களினதும் பெரு வெறுப்பை விரும்புகிறாப்போல இருந்தது - அந்த மேடையை அவர்கள் கையாண்ட விதம். அடுத்த முறை 'மிகைலக்கோவ்ஸ்கி' எழுதிய 'எறும்புப் புற்று' நாடகத்தைப் போட்டால் வட்டமான காகிதக்குளாய் செய்து அதற்குள்ளால்தான் நாடகம் காட்டுவார்கள் போலிருக்கிறது!

'... ஊடகமாகத் தொழிற்படுவதில் மொழி பெருமளவு தோற்றுப்போய்விட்டது என்ற கருத்தே அயனெஸ்கோவிடம் வலுப்பெற்றுவிட்டது.' அரங்காடல் நினைவு மலர் பக்கம் 2.

நாங்கள் என்ன சொல்கிறோம் மொழி பெரு மளவு தோற்றுப்போகவில்லை. முழுமையாகத் தோற்றுப்போய் நாடகத்துறையைப் பொறுத்தவரை ஒரு நூற்றாண்டாகிவிட்டது. எனவே இனியாவது அதைப்புரிந்துகொண்டு நிகழ்த்துதலை மையமாகவைத்த நாடகங்களை அணுகப்பாருங்கள் என்கின்றோம். இது 'ஐயோ' னெஸ்கோ சொன்னது.

தயவுடன், தயவுடன் உங்களுக்கொரு வேண்டுகோள். அபத்த நாடகங்கள் உருவானதற்கு ஒரு வரலாற்றுக் காலகட்டமும் தேவையும் இருந்தது அது நாடக உத்தி ரீதியாகவும் அந்நேரத்துக் கலைவெளிப்பாட்டு முறையாகவும் கூட. ஜெனே, பெக்கற் போன்றோரின் ஓரங்க நாடகங்கள் அபத்த நாடகங்களை அறிமுகப்படுத்துவதற்கு மிகவும் உகந்தவை. ஜெனேயின் பிற்கால நாடகங்கள் நம்மைப் போன்றோரால் இப்போதும்கூட நிகழ்த்த முடியாதளவு கலகம் வாய்த்தவை.

ஆனால் மேற்சொன்ன அந்த இரு நடிகர்களையும் எத்துணை பாராட்டினும் தகும். அவர்களின் நடிப்புத்திறனும் இல்லையெனில் திண்டாட்டம் 100 சதவீதமாக இருந்திருக்கும். இவர்கள் சுமதி ரூபன் என்பவரும் சபேசன் என்பவரும். மிகச் சிறப்பாகத் தங்கள் பாத்திரத்தை சிலவேளைகளில் நீண்ட வசனங்களில் இடர்ப்பட்டாலும் செய்து முடித்தார்கள். பதிவு பெறவேண்டிய நடிகர்கள்.

அடுத்தமுறை நீங்கள் மிகவும் நல்லதொரு அபத்த நாடகத்தை முறையான இயக்கத்துடன் எங்களுக்கு வழங்குவீர்கள் என எதிர்பார்க்கின்றோம். ஆனால், இதுவும்கூட உண்மையில் ஒரு'யடிளரசன pநசகழசஅயnஉந'தான்.

போதுமடாசாமி என்றிருந்த பார்வையாளப் பலியாடுகளை காப்பாற்றிவிட்டது மகாகவியும் தாசீசியசும்தான்.

மகாகவியினுடைய 'புதியதொரு வீடு'. இந்த நாடகம் எல்லோருக்கும் தெரிந்தது போலவே பலமுறை மேடை ஏற்றப்பட்டாலும் சலிக்காத நாடகம். பொதுவாக ஒரே நாடகம் பல விதமான இயக்குனர்களினால் நெறியாள்கை செய்யப்படும்போது அதில் திரிபுகள், மாறுபட்ட வெளிப்பாடுகள் தென்படுவது இயல்பு. ஆனால் இந்த நாடகத்தைப் பொறுத்தவரை அதற்கு இடமில்லை. பலதடவைகள் பார்த்தாயிற்று. பாத்திரங்கள் மேடையில் நகர்வதிலிருந்து பொருட்கள் இடம்பெறுவதென்பதுவரை எல்லா இயக்குனர்களின் கையாள்கையிலும் ஒரேமாதிரியாகவே இருக்கின்றது.

இதுகுறித்து மகாகவியிடம் முறையிடுவதா? தாசீசியசிடம் சொல்லுவதா என்பதுதான் தெரியவில்லை.
முதலாவது மகாகவி தான் எழுதும்போதே பல 'குறிப்பான' குறிப்புக்களுடனும் செயல் முறைகளுடனும் எழுதியுள்ளார். அதன்பிறகு நாடகத்தை மேடையேற்றிய தாசீசியஸ் தனது அப்போதைய ஆழுமையின் விளைவாகப் பலரின் மீது தனது நாடகப் பாணியின் தாக்கத்தைச் செலுத்தியுள்ளார் என்றே தோன்றுகின்றது.

எது எப்படியிருப்பினும் இந்த நாடகம் தந்த அநுபவம் புலம்பெயர்ந்த இடத்தில் புதிது. வேறு புலம் பெயர்ந்த இடங்களிலும் நாடகங்கள் பார்க்கக்கூடியதாக இருந்தது. அவற்றின் ஒப்பிடலுடனான இதன் அனுபவமே!

சமகாலத்திலும் சாத்தியக் குறைவான மறுமணம் பற்றிய கருத்தை, பெரியார் போன்றவர்கள் திருமணமே வேண்டாம் என்ற சொல்லும் ஒருநிலை இருந்தபோதிலும்கூட, அந்த நேரத்தில் மஹாகவி எழுதிய விதம். அதில் பொதிந்து வைத்துள்ள இலைமறையான பல சீர்திருத்தக் கருத்துக்கள் இன்றைக்கும் பிரியமான பல பொது சனங்களுக்குச் செமியாக்குணம் ஏற்படுத்தவல்லவை. நாடகம் அப்பிடியென்றால் நாடகம் நடித்தவர்களும் சோடைபோனவர்களில்லை.

பொதுவாக மாயன் பாத்திரம் நடிப்புக்குப் பலவாய்ப்புக்கள் உரியதாகவே இருந்திருக்கிறது. ஏனோ இவர் சோபிக்கவி;ல்லை. மயிலி, கண்ணாத்தை பாத்திரங்கள் அவ்வவற்றின் வசனம், சோகநிகழ்வு வெளிப்பாட்டுத் தன்மையையும் தாண்டி நன்றாகவே செய்தார்கள்.

மயிலி பாத்திரம் மேடையில் நடக்கின்ற விதம் மட்டுமே போதும். அவர் அந்தப் பாத்திரத்தை தேவையானபடி உணர்ந்து நடித்தார் என்பதை உணர்த்தும். இடைக்காடர் -முதியவர் பாத்திரமும் அவரால் (மு.ளு.பாலச்சந்திரன் என்று நினைக்கின்றேன்.) பழுதில்லாமல் செய்யப்பட்டதுதான்.

மகாகவியின் பாத்திரப் படைப்புப்படி மன்னவன் இன்னும் சின்னவனாக இருந்திருக்க வேண்டுமென நினைக்கின்றேன். மாசிலன் பாத்திரத்துக்கு பொதுவாகவே வாய்ப்புக் குறைவானது. இருந்தும் அதை அவர் நடித்திருக்கிறார்.

'காற்றுக் கடலை மத்தாய்க் கடைகிறது' எனக் நடித்துக் காட்ட வேண்டியவர்கள் போதிய பயற்சியின்மையினால் சரியாகக் கடையவி;;ல்லை. அவர்களில் பலரைப் பார்க்கும்போது எனக்கு 'எல்விஸ்'தான் நினைவுக்கு வந்தார்- எல்லாருடைய சிகையலங்காரத்தையும் சொல்கிறேன். அடுத்தது றுறுகு போட்டியும் நினைப்புக்கு வந்ததது - அவர்களது உடலைச் சொல்கிறேன். அரங்குக்கென்று எங்கள் உடலைப் பழக்கிக் கொள்வேண்டியதையும் உரியபடிக்கு மறிக்கொள்ள வேண்டியதையும் கவனத்தில் கொள்ளத்தான் வேண்டியிருக்கின்றது.

நாடகம் கலை. பரதம் கலை. நாட்டியம் கலை. எனவே ஒரு தவம். அததற்குச் சில தகுதிகளைக் கலை கொருகின்றது. நீங்கள் வேறு பாத்திரங்களை நடிக்கலாம். நாடகத்தின் சூத்திரமான சூத்திரதாரிகளாக வருபவர்கள் தயாரிப்புமின்றி பயிற்சியுமின்றி இப்படி வரும்போது மிகவும் இரசிக்கும் படியாக இல்லாமல் இருக்கின்றது. இப்படிக் காட்டமாக எழுதுவதற்காக என்னை மன்னிக்க - உங்களுடைய தயவைவிட நாடகத்தின் தயவு எனக்கு மிகவும் தேவை.

பரதம் ஆடிய பெண்கள் என்பதால் தங்கள் பயிற்சித்திறனைக் காண்பிக்கவே செய்தார்கள் துணை நடிகர்களாகியபோதும். அதிலும் ஒரு பெண்பிள்ளை நான் பார்த்த காட்சியில் அங்குமிங்கும் ஓடியது. மட்டுமல்லாமல் இன்னொருதரம் கடல் மின்னலடிக்கும் காட்சியில் சரியான படிக்குப் புடவையையோ - கருவித்துணியை - தாவணியையோ பிடித்துக் கொள்ளாமல்கூட ஓடியது.

புயலடித்து மாயன் கடலுக்குள் இழுக்கப்படும்காட்சிகள் மிகத் தெளிவாகவும் அழகுணர்ச்சியோடும் இதற்கு முன்பான இதே நாடகத்தின் நிகழ்வுகளில் செய்து காட்டியிருக்கிறார்கள். இதில் அதைப்பற்றிக் கவலை கொள்ளவைக்கும் படியாக இருந்தது நிகழ்த்துதல். பாடல்களில் -மெட்டில்- கொஞ்சம் நளினம் கூடியிருக்கின்றது. அது இந்த நாடகத்தோடு எவ்வளவு பொருத்தமானது என்பதும் தெரியவில்லை.

இந்த நாடகத்தின் இயக்குனர் நம்பிக்கை தரக்கூடியவராய்த்தான் இருக்கிறார். இவ்வளவு விளம்பரங்களுக்கும் கால அவகாசத்திற்கும் முறையான பயிற்சியும் வெளிப்பாட்டு அக்கறையும் இருந்திருக்குமானால் இன்னும் அருமையாக வந்திருக்கும் நாடகம். முன்பே சொன்னது போலநாடகம் என்பது கலை. எனவே அது ஒரு தவத்தைக் கோரிநிற்கி;ன்றது.

இந்நிகழ்வுகள் தொடர்பாக மகாகவிக்கு மலர்தூவுகிறேன். தாசீசியசுக்கு பூச்செண்டைக் கையில் கொடுக்கின்றேன்.


'அரங்காடல்' என்பது நாடகத்திற்கான ஒரு அமைப்பு. கனடாவில் புலம் பெயர்ந்திருக்கின்ற தமிழர்களால் நடத்தப்படும் சீரிய நாடக முயற்சிகளில் ஒன்று. மனவெளி என்னும் பெயரில்இருக்கும் குழுவினரின் பணி. இதைப்போல வேறு சில முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. 'நாளை நாடக அரங்கப்பட்டறை', என்பதும் கனடியத் தமிழ் கலைஞர்கள் கழகம் போன்றனவும் இதைப்போன்ற சீரிய முயற்சிகள் செய்கின்றன.

இது தவிர தனிப்பட்ட முயற்சிகள் பலவும் உண்டு. ஞானம் லம்பேட் போன்றவர்கள் கவனத்திற்குரியவர்கள். இவர்கள் முதல் வகையில் அடங்குவர்.

இரண்டாவது வகையாகத் தனிப்பட்ட நாடகத்திற்கு மட்டுமான முயற்சிகளாயில்லாமல் பொதுவான ஊர் விழாக்களும் நாடகங்களை நல்ல விதமாக வழங்குகின்றன. சிலவேளைகளில்

சொர்ணலிங்கம், கேதீஸ்வரன் போன்ற தனிப்பட்டவர்களும் இந்துக் கல்லூரி, கலையரசி -உடு;பிட்டி அமெரி;க்கமிசனால் நடத்தப்படும் வானவில் நிகழ்வுகள் போன்றனவும் புங்குடுதீவு பூவரசம் பொழுது, உருத்திரபுரம் -மருதம் விழா போன்றனவும் இந்தவகையில் அடங்கும். இங்கு குறிப்பிடப்படாத முயற்சிகளும் இருக்கலாம். அறிந்தவர்கள் தகவல் தரவும். ( அடிப்படைத் தகுதியாக குறைந்த பட்சம் நாடகத்திற்கு ளுஉசipவ இருக்கவேண்டும். எத்தனை தரம் நடத்தினாலும் நாடகத்தில் ஒரே பாடம்(text) இருக்கவேண்டும்.)

கனடிய நாடக முயற்கள் பற்றிய விரிவான தகவல், தரவுகளைச் சேகரித்து அடுத்துத் தருகின்றோம்.
(நன்றி - பொய்யும் மெய்யும் இணையத்தளம்)

No comments: