Friday, December 14, 2012

15வது அரங்காடல் பற்றிய விமர்சனம்

பல காலம் தவமிருந்ததற்கு பலன் கிடைத்தது போலிருந்தது மனவெளியினரின் அரங்காடல் மேடையேறுகிறது என்ற செய்தி.

அன்றைய நாளை தப்பவிடாமல் ரெலிபோன் கலண்டரில் பதியவைத்ததால் மறக்காமல் மார்க்கம் தியேட்டருக்கும் வந்துவிட்டேன். ஏகப்பட்ட கூட்டம். ரிக்கற் கிடைக்குமா என ஏக்கத்தோடு போனேன். ரிக்கற் கிடைத்தது மிக சந்தோசம். முன்வரிசையில் இருந்து நாடகங்களை பார்க்க வேண்டுமென நான் நினைத்து கதவு திறந்தவுடன் முதல்ஆளாய் உள்ளே போனால் முன் இருக்கைகள் முழுவதுமே ஒதுக்கப்பட்டிருந்தது. விசாரித்ததில் அவர்கள் விஐபி யாம். கடைசியிலிருந்து இரண்டாவது வரிசையில் இருந்தேன். 5 மணிக்கு ஆரம்பமாகும் என்று சொல்லியிருந்தாலும் 5.15 க்குத்தான் விளக்குகள் அணைந்தது.

செல்வனின் விளக்கத்தின் பின் முதல் நிகழ்வு ஆரம்பமானது. இது கவிதாநிகழ்வல்ல, கவியரங்கல்ல , ஒரு கவிமொழிவு என்றார்கள். பாத்திரங்கள் பிரதியை பார்;த்து வாசித்ததும், தாளத்தோடு போன இசையும் நிகழ்வை பார்வையாளர்களிடமிருந்து அன்னியப்படுத்தியது. மேடைக்கு வந்துவிட்டால் எதையாவது நிகழ்த்தி காட்ட வேண்டாமா?

அடத்த நிகழ்வு செழியனின் பிரதியை து~p இயக்கிய நாடகம். இல்லாத ஒன்றை எப்படியெல்லாம் விற்பனை செய்கிறார்கள் என காட்டினார்கள். து~p பல உத்திகளை கையாண்டிருந்தார். மேடையின் பிற்பகுதியில் காட்சிப் பொருட்களை வைத்துவிட்டு பாத்திரங்கள் மாறும்போது தம்மை மாற்றிக்கொள்வதும். ரிவி சனலை மாற்றுவது என நுட்பமாக கையாண்டிருந்தார். போலிச் சாமியார்களின் புரட்டும் அதைவைத்து பணம் புரட்டுவது போல் காட்டியிருந்தாலும் மக்களின் முட்டாள்தனத்தை எப்படி அரசியல் வாதிகள்; தமக்கு சாகமாக்குகிறார்கள் என காட்டியிருந்தார்.

நடித்தவர்கள் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். நீராவின் நடிப்பு அருமை. எனக்கு உடனே நினைவுக்கு வந்தது நிர்மலாதான். எப்படி பாலேந்திராவின் நாடகப்பயணத்திற்கு நிர்மலா துணையாக இருந்தாரோ அதேபோல் து~pக்கு நீரா அமைந்திருக்கின்றார். நிச்சயம் து~p நாடக உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்வார்.

அடுத்த நிகழ்வாக மேடையேறியது மதிவாசனின் இயக்கத்தில் சகாப்தனின் பிரதி. ஏதோ காரணத்திற்காக தற்கொலை செய்ய துணிந்தவர்களுக்கும் வாழவேண்டும் என்ற ஆசை உள்ளது என்பதை பல தரப்பட்ட வித்தியாசமான வயதுள்ள பாத்திரங்களை வைத்து வெளிக்கொணரப் பட்டிருக்கிறது. மதிவாசன் ஒரு சிறந்த நடிகன். தன்னால் திறமையாக இயக்கவும் முடியும் என நிரூபித்திருக்கிறார். குமாரின் நடிப்பை பாராட்டத்தான் வேண்டும். மற்றவன் தாக்கும்போது நிலத்தில் வீழ்வது மிக யதார்த்தமாக இருந்தது.

அடுத்ததாக ஒரு நடனம். நடனம் என்றால் ஒரு கதையை சொல்ல வேண்டும். அல்லது இனிமையான இசைக்கு எடுப்பாக அசைந்து அபிநயிக்க வேண்டும். இங்கே எடுத்துக்கொண்ட கரு முரண்மூளை நோய். அதற்கான இசையின் ஆரம்பம் அதிலே செருகப்பட்ட நககநஉவள வித்தியாசமான உணர்வை தந்தது. நடனமும் அவர்களின் அவஸ்தையை வெளிக் கொணர்ந்தது. அற்புதமான ஒளியமைப்பு. ஆனால் அதிகநேரம் பார்க்க முடியவில்லை. அப்படியான நோயாளியை ஒரு கதைக்குள் பாத்திரமாக கொண்டு வந்திருக்கலாம். ஆனாலும் ஒரு இளைய தலைமுறையின் தரமான முயற்சி. நடனமாடியவாகள் ஒன்றாக இணைந்து ஆடியது ரசிக்கக் கூடியதாயிருந்தது.

இறுதியாக வந்த நாடகம் பார்வையாளர்கள் எல்லோரையும் தன்னுள்வாங்கியிருந்ததை அவதானிக்க முடிந்தது. அதற்கு காரணம் செழியனின் காத்திரமான எழுத்தா? பாத்திரங்களாக தோன்றியவர்களின் இயல்பான நடிப்பா? அல்லது அவர்களை இயக்கிய விதமா? நாடகம் எங்கள் நிகழ்கால அரசியலை பகுத்தாய்ந்திருக்கிறது. பாத்திரங்கள் ஒவ்வொன்றும் வரும்போது எங்குளுக்கு ஏற்கனவே தெரிந்த ஒரு சம்பவத்தோடு இணைத்துப்பார்த்து விடைதேட தெண்டித்திருக்கிறோம். சுதந்திரமாக திரியும் எழுத்தாளன் சுதந்திரமற்று நிற்பதை படம் பிடித்து காட்டுகிறது. அனைவருமே இயல்பாக நடித்தபோதும் ஒளியமைப்பு கைகொடுக்கவில்லை. அதையும்மீறி பார்வையாளர்களின் பாராட்டை பெற்றவர்கள் இருவர். மலையாளத்தில் பேசிக்கொண்டு தன் மகளை பறிகொடுத்ததை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்திய வரகுணனும், தனது காதலை வெளிப்படுத்திய நர்த்தனனும் எல்லோராலும் பேசப்பட்டார்கள்.

மொத்தத்தில் இம்முறை அரங்காடல் பார்வையாளர்களிடம் பெரியதோர் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காத்திரமான நாடகங்கள் என்றால் அரங்காடல் மேடைதான் என மீண்டும் நிரூபித்திருக்கின்றது. நாடகம் முடிந்ததும் வாசலில் நடிகர்களையும் படைத்தவர்களையும் பாராட்டிவிட்டு காரில் ஏறி புறப்பட்டேன். எம்முள் எத்தனை திறமைகள் மறைந்து கிடக்கிறது. எத்தனை தரமான எழுத்தாளர்களும், இயக்குனர்களும், நடிகர்களும் எமக்குள் இருக்கிறார்கள். தரமான படைப்புக்களை ஒரு குடைக்கு கீழ் செயற்பட்டு வெளிக்கொணர்வார்களேயானால் மக்களும் நம்பிக்கையோடு ரசிக்க முன்வருவார்கள்.

அரசியலில் மட்டும்தான் பிரிந்திருக்கின்றோமா என்று பார்த்தால் எல்லாத் துறைகளிலும் நாம் பிரிந்துதான் நிற்கிறோம். நாம் இணையவே முடியாதா? தரமான படைப்புக்களை இணைந்து உருவாக்கினால் ஒன்று இரண்டு மூன்று என எத்தனையோ தடவைகள் மேடையேற்றலாமே. எமக்கென ஒரு பெரு வட்டத்தை உருவாக்கலாமே. ஊர்ச் சங்க மேடைகளில் மேடையேறும் கலைஞர்கள் எவரும் அரங்காடல் படைப்புக்களை ரசிக்க வராததற்கு என்ன காரணம்? தப்பான அபிப்பிராயமா? தாழ்வு மனப்பான்மையா? இந்த மேடையை பார்த்தால் இன்னமும் வளரலாம் என ஏன் உணரவில்லை.

தனக்கு தெரியாதென்பதை தெரியாதவன் மூடன். அவனை ஒதுக்கிவிடுங்கள் தனக்கு தெரியாதென்பதை தெரிந்தவன் மாணவன். அவனுக்கு சொல்லி கொடுங்கள். தனக்கு தெரியும் என்பதை தெரிந்தவர் குரு. அவரிடம் தாழ் பணியுங்கள். for more pictures click here

Wednesday, December 12, 2012

11வது அரங்காடல் பற்றிய விமர்சனம்

மனவெளி கலையாற்று குழுவினரின் 11வது அரங்காடலின் தோல்விக்குக் காரணம் என்ன ?

சுமதி ரூபன்

ஜீலை 18ம் திகதி இடம்பெற்ற 11வது அரங்காடல் நிகழ்வைத் தொடர்ந்து 25ம் திகதி மாலை அந்நிகழ்விற்கான விமர்சனக்கூட்டம் இடம் பெற்றது. கடந்த அரங்காடல் நிகழ்வுகளின் விமர்சனக்கூட்டத்திற்கு சமூகமளிக்கும் விமர்சகர்களை விட மிகக்குறைவான விமர்சகர்களே 11வது அரங்காடல் விமர்சனக்கூட்டதில் கலந்து கொண்டிருந்தார்கள். கலைஞுர்களின் பங்களிப்பே அதிகமாக இருந்தது.

கனடாவில் கோயில்களைப் போலவே கலை நிகழ்வுகளும் தடக்கி விழும் இடமெல்லாம் இடம்பெற்ற வண்ணம் இருக்கின்றன. இந்நிகழ்வுகள் அனைத்தும் ஜனரஞ்சகமாக ஒருநாள் பொழுதைக் களிக்கும் கேளிக்கை நிகழ்வுகளாக இடம் பெறுவதால்> முற்போக்குச் சிந்தனை கொண்ட இளைஞுர்கள் சிலர் கூடி மக்கள் சிந்திக்கும் வகையில் சீரிய நாடகங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் ஆரம்பிக்கப்பட்டது இந்த மனவெளி கலையாற்று குழு. ஆரம்பத்தில் சிறிய மண்டபத்தில் குறைந்த பார்வையாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட அரங்காடல் காலப்போக்கில் ஜனரஞ்சகக் கலைஞுர்களையும் சீரிய நாடகம் பார்க்கத் தன் வசம் கவர்ந்து இழுத்துக் கொண்டு பிரமாண்டமான மண்டபத்தில் நிகழ்வுகளை நடாத்தத் தொடங்கி வெற்றியும் கண்டது. இருந்தும் கெடந்த சில ஆண்டுகளாக மனவெளி கலையாற்று குழுவிற்குள் விஷக்கிருமிபோல் அரித்துக்கொண்டிருக்கும் உள் அரசியல் பல நல்ல கலைஞுர்களை இந்த அமைப்பில் இருந்து விலக்கியும்> விலகவும் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து சீரிய நாடக அமைப்பு என்ற தரத்தில் இருந்து சிறிது சிறிதாக விலகி ஓர் இரு ஜனரஞ்சக நாடகங்களையும் இணைத்துக்கொள்ளத் தொடங்கியது. பல பார்வையாளர்கள் விமர்சகர்கள் கொதித்துக்கொண்ட போதிலும் மனவெளி கலையாற்று குழுவின் உறுப்பினர்கள் தாம் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பதாய் தமக்குச் சார்ந்த வண்ணம் விளக்கங்கள் கொடுக்கத் தொடங்கினர்.

கடந்த ஆண்டு உள் அரசியல் உச்சம் கண்டு பல கலைஞுர்கள் வெளியேறி விட 11வது அரங்காடல் நிகழுமா என்ற சந்தேகம் பலருக்கு. இருந்தும் எஞ்சியிருந்த சிலர் நாடகத்தை நடாத்திக் காட்டுகிறோம் பார் என்பதாய் அவசரஅவசரமாக தமக்கு எட்டியவர்களை அழைத்து மொத்தமாக 5நாடகங்களையும் ஒரு நடன நிகழ்வையும் இரு காட்சிகளாக மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் நடாத்தி முடித்தனர். இது மணவறையில் திருமணம் நின்று விட்டால் பெண்ணின் பெற்றோர் பெயர் கெட்டு விடக்கூடாது என்பதற்காய் தமது பெண்ணிற்கு சிறிதும் பொருந்தாத ஒரு வயதானவனையோ> அல்லது ஒரு குடிகாறனையோ அவசரஅவசரமாகப் கட்டிக் கொடுப்பது போல் இருக்கிறது.

மோதல் காரணமாக 11வது அரங்காடலை நிகழ்த்திக் காட்டுகிறோம் பார் என்பதாய் நிகழ்வு இருந்ததால்> மனவெளி கலையாற்று குழு ஏன் ? எதற்காக ? ஆரம்பிக்கப் பட்டது என்பதை உறுப்பினர்கள் மறந்து பத்தோடு பதினொன்றாக நிகழும் நிகழ்வுகளைப் போல் நடாத்தியது மட்டுமல்லாமல் தாம் பெரிதாகச் சாதித்து விட்டோம் என்ற உவப்பில் திளைப்பதுதான் கவலைக்கிடமாக உள்ளது.

11வது அரங்காடல் முற்றிலும் தோல்வியாக அமைந்திருந்திருந்தும்> விமர்சனக்கூட்டத்தில் பல காரசாரமான விமர்சனங்கள் வைக்கப்பட்டிருந்தும்> வழமைபோல் குழுவினர் புன்சிரிப்புடன் இவையனைத்தும் தனிப்பட்ட தாக்குதல் என்பதாய் விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு> விமர்சனங்கள் பலவிதமாய் வரும்> ஆனால் நாங்கள் நல்ல ஒரு நிகழ்வை வெற்றிகரமாக நாடாத்திவிட்டோம் என்பது போல் அமர்ந்திருந்தது வேதனையாகவே இருந்தது. அதுமட்டுமல்லாது பல மூத்த கலைஞுர்கள் இந்த நாடகநிகழ்விற்குப் பின்னர் பலரின் கடுமையான உழைப்பு இருக்கிறது.. அதை நாம் பாராட்ட வேண்டும்> எவ்வளவோ சிரமத்திற்கு மத்தியில் இவர்கள் இந்த நிகழ்வை நாடாத்தி முடிந்திருக்கின்றார்கள்> விமர்சகர்கள் எழுந்தமானமாய் ஒட்டு மொத்தமான தோல்வி என்று கூறிவிடக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்கள். கனடாவில் 'கானமும் காட்சியும '>; 'மின்னலே '> 'வசீகரா ' என்று சினிமா பாடலுக்கு நடனமாடும் பல நிகழ்வுகளும் இரண்டாந்தர நகைச்சுவை நாடகங்களும் வருடா வருடம் மண்டபம் நிறைந்த பார்வையார்களுடன் மேடையேறிவண்ணம் இருக்கின்றன. அவர்கள் நிகழ்வுகளுக்குப் பின்னாலும் பலரின் உழைப்பு இருக்கத்தான் செய்கின்றது.. அவர்களையும் நாங்கள் ஊக்கு வித்து வேண்டுமானால் ஒரு சினிமா பாடலுக்கு நடனம் ஆடவிட்டுப் போகலாமே.. முற்போக்காக> மனிதர் சிந்திக்கும் வகையில் சீரிய நாடகங்களை மேடையேற்ற வேண்டும் எற்ற எண்ணம் எதற்கு ?

மனதிற்று ஆறுதல் தரும் வகையில் விமர்சனக் கூட்டத்தின் நிறைவில் மனவெளி கலையாற்று குழுவின் உறுப்பினர் ஒருவர்> நல்ல தரமான சீரிய நாடகங்களைப் பார்க்கவேண்டும் எனில் நீங்கள் பா.அ.ஜெயகரனின் நாடகங்களையும்> ஞுானம் லம்பேட்டின் நாடகங்களையும் பாருங்கள்> நாங்கள் இப்படியான ஜனரஞ்சக நாடகங்களைத்தான் தொடர்ந்து மேடை ஏற்ற உள்ளோம் என்று தன் இயலாமையை மனம் திறந்து கூறியது வரவேற்றகக் கூடியதாக இருந்தது. 'சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும் ';. ஆனால் தொடர்ந்து வரும் நிகழ்வுகளின் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் அறிவிப்பாளருக்கு நாம் வித்தியாசமான சீரிய நாடகங்களை மேடை ஏற்றுகிறோம் என்ற குறிப்பை அறிவிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

சுமதி ரூபன் (கனடா) (நன்றி - திண்ணை)

9 வது அரங்காடல் பற்றிய விமர்சனம்

2002 இல் கனடாவில் நடந்த அரங்காடல் நாடகங்கள் தொடர்பான அறிக்கை.
                                                                  

சமீபத்தில் (2002) நடந்தேறிய நாடகங்கள் இரண்டும் பல நாள் விளம்பரங்களின் பின்னர் விமரிசையாக மேடையேற்றப்பட்டுள்ளது. இவைகளைப் பார்வையிட்ட பார்வையாளர்களை முதலில் பாராட்டவேண்டும். மணிரத்தினம் திரைப்படம், தொடர்நாடகம் என்ற பொதுப்புத்தி மட்டத்திலிருந்து நேரத்தையும் பணத்தையும் செலவிட்டு வருபவர்களைப் பாராட்டாமலிருந்தால் எப்படி?.

இயானன்ஸ்கோவின்- அயனன்ஸ்கோவின்- ஈயானன்ஸ்கோவின் நாற்காலிகள் நாடகம், முதலாவதாக, நான் பார்த்த நிகழ்வில் மேடையேற்றப்பட்டது. நாடகத்தின் கதை என்ன என்பதை சொல்லமுடியாது. ஏனென்றால் ஒரு கோட்டில் இல்லாத தொடக்கம் முடிவு இடையில் ஒரு உச்சக்கட்டம் எதுவுமில்லாத அபத்த நாடகம் என்று முன்னரேயே எழுத்தில் தந்துவிடுகின்றார்கள்.

இரண்டு வயோதிபர்கள் 'செலினிற்றி' தொட்டுக்கொண்டிருக்கும் பருவத்தில் உரையாடுகிறார்கள். உரையாடல் யாரோ ஒரு பேச்சாளர் வீட்டுக்கு வரவிருப்பதைச் சொல்கின்றது. அத்துடன் அவர்களின் கடந்த காலங்களை மீட்டல் வழக்கமான 'நொஸ்ரால்ஜிக்' சோகம் முதலியவைகளும் இதனால் மனைவியே தாயாக கணவனைத் தேற்றும் கண்றாவியும் நிகழ்கின்றது. எங்கள் ஊரில்தான் பெண்கள் மீது இப்படித் தந்திரமாக பொறுப்புக்களைச் சுமத்தித் தப்பிக்கும் ஆண்கள் என்றால் பிரான்ஸிலும் ஆதுதான் நிலைபோலிருக்கிறது. ஒரு போதும்கூட அவன், தான் அவளுக்குத் தந்தை என்றோ அவள் அவனை நீ எனக்குத் தந்தைபோல என்றோ சொன்னதாக நினைவில் இல்லை. ஈயானன்ஸ்கோவென்றால் என்ன கொம்பா முளைத்திருக்கிறது?

இப்படியான புராணங்களின் பின் அவர்கள் பேச்சு நிகழ்ச்சியைக் கேட்கும் விருந்தாளிகள் ஒவ்வொன்றாக வருகின்றார்கள். அதில் முதலில் வந்த பெண்ணும் ஒரு இராணுவ அதிகாரியும் சல்லாபத்தில் ஈடுபடுகின்றார்கள். இதை சமூக நடைமுறைக்கு ஒவ்வாதது, கூடாதது எனக்கண்டிக்கும் முதிய கணவன், மனைவியும் பின்னர் தொடர்ந்து வரும் விருந்தாளிகளிடம் மாறி மாறி சபலம் கொள்கின்றார்கள். பின்னர் அதை விட்டும் விடுகின்றார்கள்.

தொடர்ந்து ஆட்கள் பேச்சுக்கேட்க வருவது வேகமாகி பார்வையாளரை நுனி இருக்கiயில் இருக்கவைத்ததாக நினைத்துக் கொண்டு இசை ஒலியெளுப்புதலுடன் 'ட்ரான்ஸ்' அந்த முதிய கணவனும் மனைவியும் கூப்பாடு போட்டுப் பிரசங்கம் செய்கின்றார்கள். பேச்சு நிகழ்த்த வருபவர் எப்படிப்பட்டவர் என்பது குறித்த புனைவுகளை உருவாக்குவதே அவர்களின் நோக்கம்.

இறுதியில் பேச்சாளர் வந்து பிறருக்கு கையெளுத்துப் போட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே இவர்கள் இருவரும் எல்லாரும் எதிர்பார்த்த படியே, அவர்கள் வீடு ஒரு பாழ் நீர்நிலைக்குப் பக்கத்தில் இருந்ததால் அதற்குள் யன்னல் வழியாக விழுந்து இறந்துவிடுகின்றார்கள். எல்லாரும் எப்படி எதிர்பார்க்கமுடியும் என்றா கேட்கிறீர்கள் - நாடகம் தொடங்கிய நேரம் முதலே காட்சி மாறாதிருக்கும் 'கொட்டைப்பாக்கு வைக்கும் பெட்டிபோன்ற' அரங்கத்தில், இரு யன்னல்களும் அவற்றின் அருகே இரு வெள்ளைப் பிளாஸ்டிக் 'ஸ்ரூல்களும்' போட்டு வைத்திருந்தது பிறகு எதுக்காம்? ஏறிக் குதிக்கத் தானே.

இப்படி ஒரு நாடகத்திற்கு அபத்த நாடகம் என்றால் என்ன என்று புனைவு உருவாக்க, வெளியே கொடுக்கும் துண்டுப்பிரசுரத்தில் விளக்கக் கட்டுரை வேறு. அதைவிட நாடகத்தை ஏற்கனெவே வாசித்து தெரிந்து வைத்து வந்தவர்கள் தொலைந்தார்கள். நான் தெரியாத்தனமாக இருக்கையின் ஒரு கரையில் போய் மாட்டிக் கொண்டதால் வெளியேயும் வரமுடியாமல் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்து பக்கத்திலிருந்தவர்களின் வெறுப்பைத் தேடியதுதான் மிச்சம்.

ஐயன்மீர், அபத்த நாடகமோ வேறு 'என்ன கோதாரி வந்து குறுக்காலை போகுதோ' (மகாகவி நாடகத்தின் வசனம்.) அரங்கம், நிகழ்த்துதல் என்பதெல்லாம் இயக்குனரின் கைத்திறமை ஒன்றில்தான் இருக்கிறது. ஏற்கனெவே பெட்டி போன்ற சதுர மேடை அமைப்பில் வெறுத்துப்போயிருக்கும் நாடக ரசிகர்களினதும் நடிகர்களினதும் பெரு வெறுப்பை விரும்புகிறாப்போல இருந்தது - அந்த மேடையை அவர்கள் கையாண்ட விதம். அடுத்த முறை 'மிகைலக்கோவ்ஸ்கி' எழுதிய 'எறும்புப் புற்று' நாடகத்தைப் போட்டால் வட்டமான காகிதக்குளாய் செய்து அதற்குள்ளால்தான் நாடகம் காட்டுவார்கள் போலிருக்கிறது!

'... ஊடகமாகத் தொழிற்படுவதில் மொழி பெருமளவு தோற்றுப்போய்விட்டது என்ற கருத்தே அயனெஸ்கோவிடம் வலுப்பெற்றுவிட்டது.' அரங்காடல் நினைவு மலர் பக்கம் 2.

நாங்கள் என்ன சொல்கிறோம் மொழி பெரு மளவு தோற்றுப்போகவில்லை. முழுமையாகத் தோற்றுப்போய் நாடகத்துறையைப் பொறுத்தவரை ஒரு நூற்றாண்டாகிவிட்டது. எனவே இனியாவது அதைப்புரிந்துகொண்டு நிகழ்த்துதலை மையமாகவைத்த நாடகங்களை அணுகப்பாருங்கள் என்கின்றோம். இது 'ஐயோ' னெஸ்கோ சொன்னது.

தயவுடன், தயவுடன் உங்களுக்கொரு வேண்டுகோள். அபத்த நாடகங்கள் உருவானதற்கு ஒரு வரலாற்றுக் காலகட்டமும் தேவையும் இருந்தது அது நாடக உத்தி ரீதியாகவும் அந்நேரத்துக் கலைவெளிப்பாட்டு முறையாகவும் கூட. ஜெனே, பெக்கற் போன்றோரின் ஓரங்க நாடகங்கள் அபத்த நாடகங்களை அறிமுகப்படுத்துவதற்கு மிகவும் உகந்தவை. ஜெனேயின் பிற்கால நாடகங்கள் நம்மைப் போன்றோரால் இப்போதும்கூட நிகழ்த்த முடியாதளவு கலகம் வாய்த்தவை.

ஆனால் மேற்சொன்ன அந்த இரு நடிகர்களையும் எத்துணை பாராட்டினும் தகும். அவர்களின் நடிப்புத்திறனும் இல்லையெனில் திண்டாட்டம் 100 சதவீதமாக இருந்திருக்கும். இவர்கள் சுமதி ரூபன் என்பவரும் சபேசன் என்பவரும். மிகச் சிறப்பாகத் தங்கள் பாத்திரத்தை சிலவேளைகளில் நீண்ட வசனங்களில் இடர்ப்பட்டாலும் செய்து முடித்தார்கள். பதிவு பெறவேண்டிய நடிகர்கள்.

அடுத்தமுறை நீங்கள் மிகவும் நல்லதொரு அபத்த நாடகத்தை முறையான இயக்கத்துடன் எங்களுக்கு வழங்குவீர்கள் என எதிர்பார்க்கின்றோம். ஆனால், இதுவும்கூட உண்மையில் ஒரு'யடிளரசன pநசகழசஅயnஉந'தான்.

போதுமடாசாமி என்றிருந்த பார்வையாளப் பலியாடுகளை காப்பாற்றிவிட்டது மகாகவியும் தாசீசியசும்தான்.

மகாகவியினுடைய 'புதியதொரு வீடு'. இந்த நாடகம் எல்லோருக்கும் தெரிந்தது போலவே பலமுறை மேடை ஏற்றப்பட்டாலும் சலிக்காத நாடகம். பொதுவாக ஒரே நாடகம் பல விதமான இயக்குனர்களினால் நெறியாள்கை செய்யப்படும்போது அதில் திரிபுகள், மாறுபட்ட வெளிப்பாடுகள் தென்படுவது இயல்பு. ஆனால் இந்த நாடகத்தைப் பொறுத்தவரை அதற்கு இடமில்லை. பலதடவைகள் பார்த்தாயிற்று. பாத்திரங்கள் மேடையில் நகர்வதிலிருந்து பொருட்கள் இடம்பெறுவதென்பதுவரை எல்லா இயக்குனர்களின் கையாள்கையிலும் ஒரேமாதிரியாகவே இருக்கின்றது.

இதுகுறித்து மகாகவியிடம் முறையிடுவதா? தாசீசியசிடம் சொல்லுவதா என்பதுதான் தெரியவில்லை.
முதலாவது மகாகவி தான் எழுதும்போதே பல 'குறிப்பான' குறிப்புக்களுடனும் செயல் முறைகளுடனும் எழுதியுள்ளார். அதன்பிறகு நாடகத்தை மேடையேற்றிய தாசீசியஸ் தனது அப்போதைய ஆழுமையின் விளைவாகப் பலரின் மீது தனது நாடகப் பாணியின் தாக்கத்தைச் செலுத்தியுள்ளார் என்றே தோன்றுகின்றது.

எது எப்படியிருப்பினும் இந்த நாடகம் தந்த அநுபவம் புலம்பெயர்ந்த இடத்தில் புதிது. வேறு புலம் பெயர்ந்த இடங்களிலும் நாடகங்கள் பார்க்கக்கூடியதாக இருந்தது. அவற்றின் ஒப்பிடலுடனான இதன் அனுபவமே!

சமகாலத்திலும் சாத்தியக் குறைவான மறுமணம் பற்றிய கருத்தை, பெரியார் போன்றவர்கள் திருமணமே வேண்டாம் என்ற சொல்லும் ஒருநிலை இருந்தபோதிலும்கூட, அந்த நேரத்தில் மஹாகவி எழுதிய விதம். அதில் பொதிந்து வைத்துள்ள இலைமறையான பல சீர்திருத்தக் கருத்துக்கள் இன்றைக்கும் பிரியமான பல பொது சனங்களுக்குச் செமியாக்குணம் ஏற்படுத்தவல்லவை. நாடகம் அப்பிடியென்றால் நாடகம் நடித்தவர்களும் சோடைபோனவர்களில்லை.

பொதுவாக மாயன் பாத்திரம் நடிப்புக்குப் பலவாய்ப்புக்கள் உரியதாகவே இருந்திருக்கிறது. ஏனோ இவர் சோபிக்கவி;ல்லை. மயிலி, கண்ணாத்தை பாத்திரங்கள் அவ்வவற்றின் வசனம், சோகநிகழ்வு வெளிப்பாட்டுத் தன்மையையும் தாண்டி நன்றாகவே செய்தார்கள்.

மயிலி பாத்திரம் மேடையில் நடக்கின்ற விதம் மட்டுமே போதும். அவர் அந்தப் பாத்திரத்தை தேவையானபடி உணர்ந்து நடித்தார் என்பதை உணர்த்தும். இடைக்காடர் -முதியவர் பாத்திரமும் அவரால் (மு.ளு.பாலச்சந்திரன் என்று நினைக்கின்றேன்.) பழுதில்லாமல் செய்யப்பட்டதுதான்.

மகாகவியின் பாத்திரப் படைப்புப்படி மன்னவன் இன்னும் சின்னவனாக இருந்திருக்க வேண்டுமென நினைக்கின்றேன். மாசிலன் பாத்திரத்துக்கு பொதுவாகவே வாய்ப்புக் குறைவானது. இருந்தும் அதை அவர் நடித்திருக்கிறார்.

'காற்றுக் கடலை மத்தாய்க் கடைகிறது' எனக் நடித்துக் காட்ட வேண்டியவர்கள் போதிய பயற்சியின்மையினால் சரியாகக் கடையவி;;ல்லை. அவர்களில் பலரைப் பார்க்கும்போது எனக்கு 'எல்விஸ்'தான் நினைவுக்கு வந்தார்- எல்லாருடைய சிகையலங்காரத்தையும் சொல்கிறேன். அடுத்தது றுறுகு போட்டியும் நினைப்புக்கு வந்ததது - அவர்களது உடலைச் சொல்கிறேன். அரங்குக்கென்று எங்கள் உடலைப் பழக்கிக் கொள்வேண்டியதையும் உரியபடிக்கு மறிக்கொள்ள வேண்டியதையும் கவனத்தில் கொள்ளத்தான் வேண்டியிருக்கின்றது.

நாடகம் கலை. பரதம் கலை. நாட்டியம் கலை. எனவே ஒரு தவம். அததற்குச் சில தகுதிகளைக் கலை கொருகின்றது. நீங்கள் வேறு பாத்திரங்களை நடிக்கலாம். நாடகத்தின் சூத்திரமான சூத்திரதாரிகளாக வருபவர்கள் தயாரிப்புமின்றி பயிற்சியுமின்றி இப்படி வரும்போது மிகவும் இரசிக்கும் படியாக இல்லாமல் இருக்கின்றது. இப்படிக் காட்டமாக எழுதுவதற்காக என்னை மன்னிக்க - உங்களுடைய தயவைவிட நாடகத்தின் தயவு எனக்கு மிகவும் தேவை.

பரதம் ஆடிய பெண்கள் என்பதால் தங்கள் பயிற்சித்திறனைக் காண்பிக்கவே செய்தார்கள் துணை நடிகர்களாகியபோதும். அதிலும் ஒரு பெண்பிள்ளை நான் பார்த்த காட்சியில் அங்குமிங்கும் ஓடியது. மட்டுமல்லாமல் இன்னொருதரம் கடல் மின்னலடிக்கும் காட்சியில் சரியான படிக்குப் புடவையையோ - கருவித்துணியை - தாவணியையோ பிடித்துக் கொள்ளாமல்கூட ஓடியது.

புயலடித்து மாயன் கடலுக்குள் இழுக்கப்படும்காட்சிகள் மிகத் தெளிவாகவும் அழகுணர்ச்சியோடும் இதற்கு முன்பான இதே நாடகத்தின் நிகழ்வுகளில் செய்து காட்டியிருக்கிறார்கள். இதில் அதைப்பற்றிக் கவலை கொள்ளவைக்கும் படியாக இருந்தது நிகழ்த்துதல். பாடல்களில் -மெட்டில்- கொஞ்சம் நளினம் கூடியிருக்கின்றது. அது இந்த நாடகத்தோடு எவ்வளவு பொருத்தமானது என்பதும் தெரியவில்லை.

இந்த நாடகத்தின் இயக்குனர் நம்பிக்கை தரக்கூடியவராய்த்தான் இருக்கிறார். இவ்வளவு விளம்பரங்களுக்கும் கால அவகாசத்திற்கும் முறையான பயிற்சியும் வெளிப்பாட்டு அக்கறையும் இருந்திருக்குமானால் இன்னும் அருமையாக வந்திருக்கும் நாடகம். முன்பே சொன்னது போலநாடகம் என்பது கலை. எனவே அது ஒரு தவத்தைக் கோரிநிற்கி;ன்றது.

இந்நிகழ்வுகள் தொடர்பாக மகாகவிக்கு மலர்தூவுகிறேன். தாசீசியசுக்கு பூச்செண்டைக் கையில் கொடுக்கின்றேன்.


'அரங்காடல்' என்பது நாடகத்திற்கான ஒரு அமைப்பு. கனடாவில் புலம் பெயர்ந்திருக்கின்ற தமிழர்களால் நடத்தப்படும் சீரிய நாடக முயற்சிகளில் ஒன்று. மனவெளி என்னும் பெயரில்இருக்கும் குழுவினரின் பணி. இதைப்போல வேறு சில முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. 'நாளை நாடக அரங்கப்பட்டறை', என்பதும் கனடியத் தமிழ் கலைஞர்கள் கழகம் போன்றனவும் இதைப்போன்ற சீரிய முயற்சிகள் செய்கின்றன.

இது தவிர தனிப்பட்ட முயற்சிகள் பலவும் உண்டு. ஞானம் லம்பேட் போன்றவர்கள் கவனத்திற்குரியவர்கள். இவர்கள் முதல் வகையில் அடங்குவர்.

இரண்டாவது வகையாகத் தனிப்பட்ட நாடகத்திற்கு மட்டுமான முயற்சிகளாயில்லாமல் பொதுவான ஊர் விழாக்களும் நாடகங்களை நல்ல விதமாக வழங்குகின்றன. சிலவேளைகளில்

சொர்ணலிங்கம், கேதீஸ்வரன் போன்ற தனிப்பட்டவர்களும் இந்துக் கல்லூரி, கலையரசி -உடு;பிட்டி அமெரி;க்கமிசனால் நடத்தப்படும் வானவில் நிகழ்வுகள் போன்றனவும் புங்குடுதீவு பூவரசம் பொழுது, உருத்திரபுரம் -மருதம் விழா போன்றனவும் இந்தவகையில் அடங்கும். இங்கு குறிப்பிடப்படாத முயற்சிகளும் இருக்கலாம். அறிந்தவர்கள் தகவல் தரவும். ( அடிப்படைத் தகுதியாக குறைந்த பட்சம் நாடகத்திற்கு ளுஉசipவ இருக்கவேண்டும். எத்தனை தரம் நடத்தினாலும் நாடகத்தில் ஒரே பாடம்(text) இருக்கவேண்டும்.)

கனடிய நாடக முயற்கள் பற்றிய விரிவான தகவல், தரவுகளைச் சேகரித்து அடுத்துத் தருகின்றோம்.
(நன்றி - பொய்யும் மெய்யும் இணையத்தளம்)

Monday, September 24, 2007

14வது அரங்காடல் பற்றிய விமர்சனங்கள் - 3

அரங்காடல் - 14 (2007)
- குரு அரவிந்தன் (கனடா) -

கிரேக்க நாட்டில்தான் முதன்முதலாக நாடகக்கலை வளர்ந்ததாகப் பழைய இலக்கியங்களில் இருந்தும், வரலாற்று ஆய்வாளர்களின் கட்டுரைகளில் இருந்தும் தெரியவருகிறது. கூத்து, நாடகம், நடனம் போன்ற கலைநிகழ்ச்சிகளை மக்கள் கண்டு களிக்கும் பொதுவிடத்தை முன்னாளில் அம்பலம் என்று அழைப்பர். அதுவே பின்னாளில் அரங்கமாயிற்று. அந்த அரங்கத்தில் ஆடுவதால், இந்த நிகழ்ச்சிக்கு அரங்காடல் என்ற பெயரை மனவெளி கலையாற்றுக் குழுவினர் சூடியிருக்கலாம். வருடாவருடம் நடக்கும் வித்தியாசமான இந்த அரங்காடல் நிகழ்ச்சியை பதினான்காவது தடவையாக மனவெளி கலையாற்றுக் குழுவினர், நாடகரசிகர்களுக்காக அரங்கேற்றிக்காட்டினர்.

யூலை மாதம் எட்டாம் திகதி 2007, ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒருமணிக்கும், மாலை ஆறுமணிக்குமாக இரண்டு காட்சிகள் மார்க்கம் தியேட்டர் அரங்கில் நடைபெற்றன. அருமையான இந்த நிகழ்ச்சியைத் தவறவிட்ட நாடகரசிகர்கள், தவறவிட்டதற்காக நிச்சயமாக பின்பு வருத்தப்பட்டிருப்பார்கள் என்றே நான் நினைக்கின்றேன்.

எங்கவூரிலே வி.வி.வைரமுத்துவின் காத்தவராயன் கூத்தை, குறிப்பாக மயானகாண்டத்தை சின்னவயதிலே விடியவிடியப் பார்த்து ரசித்திருக்கிறேன். அதன்பின் பள்ளிப்பருவத்தில் காங்கேயன்துறை நடேஸ்வராக்கல்லூரியில் கலையரசு ஏ.ரி.பொன்னுத்துரை, தெல்லிப்பளை மகாஜனக்கல்லூரியில் கதிரேசம்பிள்ளைமாஸ்டர் ஆகியோரின் நாடகங்களை கண்டு வியந்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் மேடையில் தோன்றி நடித்தவர்களைப் பாராட்டத் தோன்றியதே தவிர அவர்களது வெற்றிக்குப் பின்னால் ஒருகூட்டமே இயங்கிக் கொண்டிருந்ததையோ, திரைமறைவில் நின்று, நாடகத்தின் வெற்றிக்குப் பாடுபட்ட அவர்களையும் பாராட்டவேண்டும் என்றோ நாங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை.

தாசீசியஸ்சின் நாடகங்கள் வெளிவந்தபோதுதான் கதை, நெறியாள்கை, அரங்கஅமைப்பு, குறிப்பாக ஒலி, ஒளி அமைப்பு, நடிகர்களின் தேர்வு, பொருளாதார வசதி போன்ற பல காரணிகள் ஒரு நாடகத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களாய் அமைகின்றன என்பதை உணரமுடிந்தது. மிகக்குறைந்த வசதிகளோடு நடேஸ்வராக்கல்லூரி மைதானத்தில் அன்று பார்த்த மயானகாண்டத்தையும், நவீனவசதிகளோடு கூடிய, குளிரூட்டிய சொகுசு இருக்கைகள் உள்ள மார்க்கம் தியேட்டரில் நடந்த அரங்காடலையும் என் மனம் ஏனோ அந்தநிமிடம் ஒப்பிட்டுப்பார்த்தது.

காலத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு துறைகளிலும் ஏற்பட்ட நவீன, தொழில்நுட்ப மாற்றங்களும், நாடகத்துறையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாய் அமைந்தன என்பதை என்னால் அப்போது புரிந்து கொள்ளமுடிந்தது. யாரும் யாருக்கும், எந்தவிதத்திலும் சோடை போகவில்லை என்பதையும் என்னால் உணரமுடிந்தது. நாங்கள் புகலிடம்தேடி வந்தபோது, எம்மவர்களால் அரும்பாடுபட்டு வளர்த்த இந்த நாடகக்கலை மெல்ல அழிந்து விடுமோ என்ற பயம் எல்லோர் மனதிலும் இருந்ததென்னவோ உண்மைதான்.

ஆனால் இந்த நாடகக்கலை, இந்த மண்ணில் ஒருபோதும் அழியாது என்பதை அரங்காடல் நிகழ்ச்சிகளைப் பார்த்தவர்கள் நிச்சயமாகப் தெட்டத்தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பார்கள். காவியம் செய்வோம், ஓவியம் செய்வோம், நல்ல கலை வளர்ப்போம் என்றெல்லாம் புதுமைக்கவி பாரதி கண்டகனவுகள் இந்த மண்ணில், இளைய தலைமுறையினரால் நினைவாக்கப் படுவதைப்பார்க்கும் போது, புகலிடம் தேடிவந்த தமிழர்களாகிய எங்களுக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது.

நாங்கள் மார்க்கம் தியேட்டருக்குச் சென்றபோது, அரங்கவாசலில் நடிகர் கதிர் துரைசிங்கம் சிரித்த முகத்தோடு; நின்று, எல்லோரையும் அன்போடு வரவேற்றார். நிகழ்ச்சி ஆரம்பமானதும், எழுத்தாளரும், சமூகசேவகருமான க.நவம் மேடையில் தோன்றி சிறந்தமுறையில் நிகழ்ச்சிகளை அவ்வப்போது அறிமுகம் செய்து வைத்தார். அவரது அமைதியான, கணீரென்ற குரல் மூலம் பார்வையாளர்களைக் கவர்ந்தது மட்டுமல்ல, ஆரம்பத்திலேயே எல்லோரையும் தனது பேச்சு வன்மையால் கட்டிப்போட்டுவிட்டார் என்றே சொல்லவேண்டும்.

இப்பொழுதும் எப்பொழுதும்: என்ற குறியீட்டு நாடகம் முதலில் அரங்கேறியது. குறியீடுகளின் பலம், பலவீனம் இரண்டுமே அவற்றை நோக்குபவர்கள், தத்தமது பட்டறிவுக்கும் அறிதலுக்கும் ஏற்ப, அவற்றை வௌ;வேறு விதமாக புரிந்து கொள்வதுதான் என்ற விளக்கத்தோடு பார்வையாளர்களின் முடிவிற்கே விடப்பட்டது. ஹரல்ட் பின்றரின் மூலக்கதை பிரதியாக்கம் செய்யப்பட்டு, துஷி ஞானப்பிரகாசகத்தின் நெறியாள்கையில், நீரா சிற்சபைஈசனின் உதவியோடு இந்த நாடகம் அரங்காடலில் மேடையேற்றப்பட்டது. முல்லையூர் கே.பாஸ்கரன், கீர்த்தனன் திவ்வியராஜன், கஜஜெபன் பரராசசேகரம் ஆகியோரின் உதவியோடு சிறப்பாக இசையமைத்திருந்தார். சிவம் இந்த நிகழ்ச்சிக்கு ஒளி அமைப்புச் செய்திருந்தார். கிங்ஸ்லி செபஸ்ரியாம்பிள்ளை, சேகர் தம்பிராஜா, துவாரகா முனீஸ்வரராஜா ஆகியோர் மிகவும் சிறப்பாக நடித்திருந்தனர். வளர்ந்துவரும் நடனதாரகை துவாரகாவின் நடனநிகழ்ச்சியைப் பலதடவைகள் பார்த்து ரசித்திருக்கிறேன். நடிப்புத்துறையிலும் அவருக்குச் சிறந்த எதிர்காலம் காத்திருப்பது, அவரது அன்றைய நடிப்பில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.

நிறங்களின் நிஜங்கள்: - பச்சை என்றால் சம்மதம், சிகப்பென்றால் கிட்ட நெருங்காதே, மஞ்சள் என்றால் புனிதம், வெள்ளை என்றால் துக்கம், சமாதானம் கறுப்பென்றால் எதிர்ப்பு இப்படித்தான் நாங்கள் இதுவரை நிறங்களைப் பற்றி நினைத்திருந்தோம். நிறங்கள் வெறும் நிறங்கள் மட்டுமல்ல, அவை அர்த்தம் நிறைந்தவையும்கூட என்று அரங்காடல் மேடையில் மங்கியதோர் விளக்கினிலே, ரெட்ணம் சசிதரனின் இசைத்தேர்வில் அன்று நிரூபித்துக் காட்டினார் ஆனந்தி சசிதரன். ஆடைத்தேர்வும் ஒளியமைப்பும் நிறையவே ரசிகர்களைக் கவர்திழுத்தன. சீனநடனம் போன்ற பல்வேறு கலாச்சார விழுமியங்களில் இருந்தும் சிலவற்றைத் தெரிந்தெடுத்து நடனமாக்கியிருந்தார்கள். இந்த நடனத்தில் தர்ஷினி சிவதாசன், எலிசபெத் இலக்குமணநாதன், பிரான்சினி இலக்குமணநாதன், சௌமியா தயாளன், கஜேந்தினி ஆதவன், அனுசியா சயந்தன், தீபிகா ஸ்ரீதரன், மிதுனா நாகநாதன், சோபிகா நாகேஸ்வரன், ஜானுகா ஸ்ரீதரன், நிவேக்கா ஸ்ரீதரன், கௌரி நகுலேந்திரன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர். ஒளியமைப்பை சிவம் பொறுப்பேற்றிருந்தார். எலிசபெத் இலக்குமணநாதன், பிரான்சினி இலக்குமணநாதன் இருவரும் கே. எஸ். பாலச்சந்திரனின், பாரதியாரின் கயிறு என்ற நாட்டிய நாடகத்திலும் மிகவும் சிறப்பாகச் செய்திருந்ததை அப்போது என்னால் நினைவுகூரமுடிந்தது.

சாகாத சரித்திரங்கள்: - தாயகக் கவிஞர் சி.சிவசேகரத்தின் கவிதைகளைத் தொகுப்பாக்கி அரங்காடல் மேடையிலே, கவிநாயகர் வி. கந்தவனம், வயிரமுத்து திவ்வியராஜன், கணபதி ரவீந்திரன், ராஜ்மீரா இராசையா, கந்தையா ராஜன் போன்ற புகழ்பெற்ற நடிகர்கள் ஒன்று சேர்ந்து அந்தக் கவிதையை, மேடையில் வரையாத ஓவியமாக்கியிருந்தார்கள். உலகிலே நடக்கும் அடக்குமுறைகள், அட்டூழியங்கள், கொலைகள் போன்ற அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் தாயகக் கவிஞர் சி. சிவசேகரத்தின் சிலகவிதைவரிகள் சித்திரமாக்கப்பட்டு, கவிநாயகர். வி. கந்தவனத்தின் நெறியாள்கையில், சிவத்தின் ஒளியமைப்போடு மேடையேற்றப்பட்ட இந்தப் புதுமையான முயற்சியைக் கட்டாயம் பாராட்டவேண்டும். இசைக்கு முல்லையூர் கே. பாஸ்கரனும், வைரமுத்து திவ்வியராஜனும் பொறுப்பாக இருந்தனர். சிவம் ஒளி அமைப்புச் செய்திருந்தார்.


இரண்டுக்கும் நடுவே : மலரப்போகும் மெட்டுக்களுக்காய் இதழ்கள் இரையாகலாம், இதழ்கள் உயிர் தாங்குவதற்கு மலரும் மொட்டுக்கள் இரையானால்..? என்ற கேள்வியோடு நாடகம் தொடங்குகிறது. சிவமணியால் பிரதியாக்கம் செய்யப்பட்ட கருப்பொருளை, மிகவும் கவனமாக, எந்த ஒரு தொய்வும் இல்லாமல் இளையபாரதி நெறியாள்கை செய்திருக்கின்றார். இந்த நாடகத்தில் சாந்தா சோமஸ்கந்தர், சுமுதினி சக்திவடிவேல், ரெட்ணம் சசிதரன், வேணுஷா கலாதரன், சுஜீபன் கலாநாதன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர். எல்லா நடிகர்களும் தமது பாத்திரங்களை உணர்ந்து நன்றாகவே நடித்தார்கள். குறிப்பாக அப்பம்மாவாக நடித்த, அவ்வப்போது எனக்கருகே இருந்த சில பார்வையாளர்களைக் கண் கலங்கவைத்த சாந்தாக்காவும், மிகவும்திறமையாக நெறியாள்கை செய்த இளையபாரதியும் பாராட்டப்பட வேண்டியவர்கள். முல்லையூர் கே. பாஸ்கரன் இசை அமைக்க, துமிந்தன் சிவா ஒளி அமைப்புச் செய்திருந்தார்.

ஆரி ஓம் நம : புராந்தகனின் நாடகம் என்றாலே பொதுவாக அதற்கு ஒரு தனித்துவம் இருக்கும். இயூஜின் அயனஸ்கோவின் மூலக்கதையை, பென்னேஸ்வரனின் தழுவலில் புராந்தகன் நெறியாள்கை செய்து, மேடையேற்றியிருந்தார். நினைவூட்டுகை அனுஜா ஜெயந்தன், இசை வயிரமுத்து திவ்வியராஜன், முகர்சிங் ச.சுரேந்தர். அரங்கில், குரும்பசிட்டி இ.இராசரத்தினம், விமலேஸ்வரி விஸ்வலிங்கம், ஷாளினி சண்முகநாதன் ஆகியோர் இந்த நாடகத்தில் நடித்திருந்தனர். நடிப்பதற்கென்றே பிறந்தவர் இராசரத்தினம், எனவே அவரது நடிப்பைப் பற்றிச் சொல்லித் தெரியவேண்டுமென்பதில்லை. அடுத்து தனது நடிப்பால் மேடையில் எல்லோரையும் கவர்ந்தவர் சாளினி சண்முகநாதன். அவரது நடிப்புத் திறமையை முதன்முதலாக அரங்காடல் மேடையில் பாக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. அலட்டிக் கொள்ளாத பக்குவமான நடிப்பு. நடிப்புத்துறையில் நல்லதொரு எதிர்காலம் அவருக்குகாகக் காத்திருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. வாழ்த்துக்கள்.

நாடக ரசிகர்களின் ஆவலைப் பூர்த்தி செய்யச் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்த மனவெளி கலையாற்றுக்குழுவின் இந்த அரங்காடல் முயற்சிக்கும், அவர்களுக்குப் பக்கப்பலமாக நின்று, எல்லா வகையிலும் பாடுபட்டவர்களுக்கும் கனடிய நாடக ரசிகர்களின் சார்பில் எமது மனமார்ந்த பாராட்டுக்கள். சிகரத்தை நோக்கிச் செல்லமுடியும் என்ற நம்பிக்கையோடு, மனம்தளராது உங்கள் முயற்சிகள் மேலும் தொடர, எங்கள் வாழ்த்துக்கள்!

kuruaravinthan@hotmail.com

(நன்றி - பதிவுகள்)

Saturday, September 22, 2007

14வது அரங்காடல் பற்றிய விமர்சனங்கள் - 2

கனடாவில் ரொரன்ரொவில் மார்க்கம் அரங்கில் 2007 ஜுலை மாதம் 8ந்திகதி (1மணி, 6மணி) இரு காட்சிகளாக நடைபெற்ற 14வது அரங்காடல் பற்றிய ஒரு பார்வையாக இக்கட்டுரை பிரசுரமாகின்றது.


மனவெளியின் 14வது அரங்காடல்
(கே. எஸ். பாலச்சந்திரன்
)

எல்லைகள் கடந்த தேடலும், அதன் அளிக்கையும், பார்வையாளர்கள்; அதை எதிர்கொள்ளும்; பக்குவம் பெறவைப்பதுமான ஒரு ஆரோக்கியமான நாடகச்சூழலை உருவாக்கும் முனைப்புடன் கனடாவில் ரொரன்ரொவில் 1996ல் ஆர்வமுள்ள இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட மனவெளி கலையாற்றுக்குழு கடந்த ஒரு தசாப்தகாலத்தில் பல பிறமொழி நாடகாசிரியர்களையும், நமது படைப்பாளிகளையும் அரங்குக்கு கொண்டு வந்ததோடு, திறமையுள்ள கலைஞர்களை இனம் கண்டு அவர்தம் ஆற்றலை வெளிக்கொணர்ந்ததோடு, உற்சாகமளிக்கும் பரந்துபட்ட பார்வையாளர்களையும் சம்பாதித்திருக்கிறது.

இப்பொழுதும் எப்பொழுதும்

கண்கள் கட்டப்பட்ட ஒரு பெண். (அது ஆணாகவும் இருக்கலாம்). அதுவே பெண்ணாக இருப்பதினால் அவளுக்கு இழைக்கப்படக்கூடியது இன்னமொரு பரிமாணத்தையும் தொடலாம்.
அவளின் இரு மருங்கிலும் இருவர். அதிகாரம் தந்த பலத்தைப் பெற்றவர்கள். என்னவெல்லாமோ அவளுக்கு நடக்கபோகின்றது என்பதை சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். அது என்னவென்று திட்டவட்டமாக சொல்லப்படாதபோதிலும், அவர்கள் சொன்னதையே திருப்பி திருப்பி வேறு சொற்களில் சொன்னாலும் அவர்கள் செய்வது ஒன்றைத்தான். துன்புறுத்தல் நிகழ்கிறது. ஆனால் எதிர்ப்பைக்காட்டும் வலுவை அந்தப்பெண் அல்லது அவள் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகம், மக்கள்கூட்டம் கொண்டிருக்கவில்லை என்பதை நாம் உணர்கிறோம்.

அரசியல் ரீதியாக அது அண்மைக்கால அரசியலாக இருந்தாலும் தெளிவான தீர்க்கமான சுய அபிப்பிராயம் கொண்ட பிரித்தானிய நாடக எழுத்தாளரான ஹரோல்ட் பின்ரரின் The New orld Order என்ற நாடகத்தை து~p ஞானப்பிரகாசம் மொழிபெயர்;த்து “இப்பொழுதும் எப்பொழுதும்” என்ற பெயரில் அரங்கேற்றியபோது, அவரது முந்திய நாடகமான “வதை” யின் ஒரு நீள் தொடர்பாகவே இது எனக்குப்பட்டது.

ஒரு யூகத்தை இயக்குனர் மேல் சுமத்துவது என் நோக்கமல்ல. இருப்பினும் சனநாயகத்தின் காவலர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு ஏகாதிபத்தியத்தின் அடாவடித்தனமான தலையீடுகளே இரண்டு நாடகங்களினதும் ஆதாரப்பொருளாக இருப்பதாக நான் நினைக்கிறேன். இதனால் இவரது நாடகப்பிரதிகளின் தேர்வு தனிப்பட்டரீதியிலும், பொதுவாகவும் மிகவும் தாக்கமுடையதாகவே இருப்பதாகக் கருதுகிறேன்.

“வதை” நாடகம் வரலாற்றின் ஒரு நிகழ்வை, நம்மிடையே வாழ்ந்தவர்களையே பாத்திரங்களாகக்கொண்டு அடக்குமுறையின் வன்மத்தை நிகழ்த்திக் காட்டியது. இந்த நாடகம் அதைக்குறியீடாக பின்ரரின் தனித்துவமான நாடகமொழியில், மௌனங்களுடன், இடைநிறுத்தல்களுடன், இன்னும் தீவிரமாகவே உணர்த்தியது.

மீண்டும், மீண்டும் இங்த இரண்டு நாடகங்களுக்கும் இடையில் நான் உலாவ முயற்சிப்பதை இயக்குனர் மன்னிப்பாராக. ஆனால் என்னால் அதைத் தவிர்க்கமுடியவில்லை. பப்லோ நெருடா என்ற தனிமனிதரும் அவர் சார்ந்த சமூகமும் பாதிக்கப்பட்ட ஒரு வரலாற்று நிகழ்வாகவே பார்வையாளர்கள், “வதை” நாடகத்தை ; பார்க்க முனையலாம். அது இயக்குனரின் நோக்கமாக இல்லாமல் இருந்தாலும் கூட. ஆனால் நாடு, சமூகம், தனிமனிதன் என்று பல தளங்களில் துன்புறுத்தல், அடக்குமுறை, என்பனவற்றை அதிகாரடையவர்கள் - அவர்கள் யாராகவிருந்தாலும், எந்த வடிவத்தில் இருந்தாலும், அவர்களிடமிருந்து எதிர்நோக்குவதையும், அவற்றை எதிர்க்கும் திராணியற்று இருப்பதையும் உணர்த்துகின்ற காரணத்தால் இந்நாடகம் அதிகமான பொதுமைப்பண்பு பெறுகிறது.

இந்நாடகத்தில் வரும் பாத்திரங்களைப்பற்றி, நடிகர்களைப்பற்றிச் சொல்வதற்கு முதல், சென்ற ஆண்டு இத்தாலியில், ருறின் நகரில் ஐரோப்பிய நாடக அரங்க விருதைப் பெற்றபின் ஹரோல்ட் பின்ரர் வழங்கிய நேர்முகத்தில் சொன்ன குறிப்பை சொல்வது சுவையாகவிருக்கும்.

“ உங்கள் பாத்திரங்கள் உங்களையே மறுதலித்து, தங்களுக்கான வாழ்க்கைப்போக்கை நிர்ணயித்துக் கொள்வதாக சொல்லியிருக்கிறீர்கள், பிரக்ஞைபூர்வமாக நாடகத்தில் நிகழ்வதையும், பாத்திரங்களையும் ஒழுங்குபடுத்துவது நீங்கள் இல்லையா? “

“ ஒரு நாடகத்தை எழுதத்தொடங்கும்போது அப்படி பிரக்ஞைபூர்வமாக நான் சிந்திப்பதில்லை. பாத்திரங்கள் சுயமாக செயற்படும். ஆனால் ஏதோ ஒரு தருணத்தில் எனது படைப்பைப்பற்றி பிரக்ஞையுடன் சிந்திக்கத் தலைப்படுவேன். பாத்திரங்களுக்கும் படைப்பாளியான எனக்கும் போராட்டம் நடக்கத்தான் செய்யும். ஆனால் வெற்றி பெறுவது யார்? எழுத்தாளன்தான். என் பேனையை எடுத்து (வெட்டுவது போல சைகை செய்கிறார்) – பாத்திரம் தான் மிக விரும்பும் தனது ஒரு வசனத்தை இழந்துவிடும். (சபையில் சிரிப்பு) ”

இவ்வாறே பின்ரரின் படைப்பை இயக்குனரின் பார்வையில் வெளிக்கொணரும் பாத்திரங்களாக கிங்ஸ்லி செபஸ்தியாம்பிள்ளையும், சேகர் தம்பிராஜாவும், துவாரகாவும் இயங்கினார்கள். வழக்கமாகவே து~pயின் நாடகங்களில் காணும் துல்லியமான அரங்க அசைவுகள், கட்டுக்கோப்பு இந்நாடகத்திலும் இருந்தன.

முடிவாக ஒரு குறிப்பு. சமகால அரசியல் சார்ந்த இந்த நாடகத்தைப் பார்க்கும்போது பின்ரரின் வாதங்களோடு முரண்படுபவராக இருந்தால், பார்வையாளர் வலிந்த ஒரு புரியாப்போர்வையை போர்த்துக்கொள்பவர்களாகி, உள்நுழைய முடியாமல் போகலாம்.


நிறங்களின் நிஜங்கள்

மொழியற்ற, வெறும் இசைக்கோலங்களின் பின்னணியில் நிகழ்த்தப்படும் நடனத்திலிருந்து நாம் பெறுவது என்ன? ஒரு சிலிர்ப்பு. ஒரு அனுபவம். தெரியாப்பொருளை கண்டுபிடிப்பதைவிட தெரிந்ததொன்றை இனங்காணும் சந்தோசம். வெட்டி மறையும் மின்னல் கீற்றை பொந்துக்குள் நுழையும் அணிற்குஞ்சின் வால் நுனிக்கு ஒப்பிடும் ஒரு கவிதை கூறும் விந்தை. புலன்களை கிளர்ச்சி பெறவைக்கும் ஒரு ஆச்சரியம்;. இப்படி சொல்லிக்கொண்டு போகலாம்.

இவற்றை முழுமனே பெறமுடியாமல் போனதில் தப்பொன்றுமில்லை. ஆனால் இசைத்தேர்வும் பெருமளவில் அதற்கு உறுதுணையாக இருக்கவில்லை என்ற காரணமாக இருக்கலாம். பச்சை வர்ணத்திற்கான இசையைத்தவிர.

வர்ணங்களின் குணாதிசயங்கள் அறிமுகவுரையில் குறிப்பிடப்பட்டபோது, மலையாள இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் தனது “எலிபதாயம்” திரைப்படம் சம்பந்தமான கருத்தரங்கில் சொன்னது நினைவுக்கு வந்தது.

“எலிபதாயம்” படத்தில் வரும் மூன்று சகோதரிகளும் அணியும் ஆடைகளின் வர்ணங்களை ஒவ்வொருவருக்கும் தனித்துவமாக, பச்சை, நீலம், சிவப்பு என்று எதற்காக தேர்ந்தெடுத்தீர்கள் ?”

“ நான் கதகளியாடும் கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்தவன். கதகளி ஆட்டத்தில் ஒப்பனை, ஆடை, அணிகலன்கள் இவற்றின் வர்ணங்கள் பாத்திரங்களின் குணாதிசயங்களை ஒத்ததாகப்பார்த்துக் கொள்வார்கள். நானும் எனது படத்தில் - பாசம், பிள்ளைகள், இரக்கம் உள்ள மூத்த பெண்ணுக்கு பசுமையான பச்சை வர்ணத்தையும், கடல், வானம் போன்ற நிச்சலனமான, அமைதியான இரண்டாவது பெண்ணுக்கு நீல வர்ணத்தையும், நெருப்பு, இரத்தம் என்பனவற்றின் சிவப்பு வர்ணத்தை ஆக்ரோசமான தனது எதிர்ப்புணர்வை வெளிக்காட்டும் இளைய பெண்ணுக்கும் தேர்ந்தெடுத்தேன் “ என்று பதில் கூறினார்.

பல நடனவகைகளின், (மேற்கத்தைய நடனங்கள் உட்பட்ட) சாயல்கள் தெரிந்தன, துள்ளல்களும், ஒத்திசைவும் நன்றாகவே இருந்தன. வர்ணங்களின் பேதங்களைக்காட்ட இன்னும் அதிகமான நடனமணிகளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று தொன்றியது.

எது எவ்வாறிருப்பினும், ஆனந்தி சசிதரன் முன்பொருமுறை வழங்கிய “ஐந்திணைகள்” பற்றிய நடன வடிவம் எனக்கு மிகுந்த மகிழ்வைத்தந்தது என்று சொல்வேன்.



சாகாத சரித்திரங்கள்

கரைமீது அலை வந்து அடி பதித்த மணற்சுவடு
காற்றடித்து மணல் வீசும்
கடல் இருந்தோர் அலை வந்து
அலை பதித்த அடிச்சுவட்டை அழித்து அங்கோர் சுவடமைக்கும்

உச்சஸ்தாயியை தொடமுயற்சிக்காத திவ்வியராஜனின் குரலில் இந்த அழகான கவிதை வரிகள் மெல்லிய இசைப்பின்னணியில் மிக இனிமையானதோர் பாடலாக விரிந்து பரவியது.

தொடரப்போகும் சுடுசரங்களுக்கு, வானைக்கிழித்து மேவும் ஒளிகொண்ட வாணவேடிக்கைகளுக்கு, “சுளீர்..சுளீர்” என்ற ஓசையுடன் ஒவ்வொரு முறையும் மடங்கி நிமிரும் சாட்டையின் வீச்சுகளுக்கு, அதாவது சிவசேகரத்தின் ஏனைய கவிதைகளுக்கு முன்னால் வரவேற்பு வாசல் அமைத்ததுபோல முற்குறித்த இசைப்பாடலாக உருவெடுத்த அவரது கவிதை வந்து பொருந்தியது.

கவிதைகளின் தெரிவும் தொகுத்தமுறையும் மிகவும் சிறப்பாகவிருந்தன. அதற்காகவும், ஒரு இளைஞனின் உற்சாகத்துடன். தன் பங்களிப்பை வழங்கியமைக்காகவும் கவிஞர் கந்தவனம் அவர்களை மிகவும் பாராட்டலாம்.

எங்கோ ஒரு வீடு சூறையாடப்படுகிறது
எங்கோ அச் செய்தி வெளிவருகிறது
எங்கோ ஒரு குடிசை தீக்கிரையாகிறது
எங்கோ அச் செய்தி வெளிவருகிறது
எங்கோ ஒரு மனிதன் கடத்தப்படுகிறான்
எங்கோ அச் செய்தி வெளிவருகிறது

என்று தொடங்கும் கவிதை கூறும் சேதிகள் இன்றோடு முடிந்து போகப்போவதில்லை. ஆனால் வல்லாதிக்கங்களைப் போல அவையும் சாஸ்வதமானவையல்ல. உடைந்துவிழும் சிகரங்களைப் போல என்றோ முடிவு பெறும்.;.

மாண்புமிகும் அமெரிக்கச் சனாதிபதி அவர்களே
திடுமென வந்த ஒரு பேரிடி போல
ஒரு விமானம் மோதியதால் அதிர்ந்து
இப்போது எரிகின்ற கோபுரமொன்றுள்
சட்டென மின்சாரம் நின்று போன
அறையொன்றின் உள்ளிருந்து ஒரு
அமெரிக்கக் குடிமகன் பேசுகிறேன்.

சற்றேனும் மிகைத்தன்மை தலைகாட்டாமல் இந்த நீண்ட கவிதையை சிறப்புற வழங்கிய கணபதி ரவீந்திரனும், நிகழ்வில் பங்கு கொண்ட ராஜன், இராஜ்மீரா ராசையா ஆகியோரும் வாழ்த்துக்குரியவர்கள்;.

சிவசேகரத்தின் கவிதைகள் எல்லைகளைக் கடந்து, ஒலிக்கும் மனிதாபிமாளத்தின் குரலாகவும், தேவையான பொழுதுகளில் தட்டிக்கேட்கும் வல்லமை உடையனவாகவும் இருக்கின்றமையால் உயிருள்ள கவிதைகளாக இயங்குகின்றன.

ஆங்காங்கே தலைகாட்டிய தடுமாற்றங்கள் கவிதாநிகழ்வின் வீச்சை சற்றே தளரச்செய்தன. அவ்வளவே.



இரண்டுக்கும் நடுவே

மண(மன)முறிவினால் பிரிந்தபோன ஒரு தம்பதி. அவர்களிடையே தவணை போட்டு பந்தாடப்படும் இரண்டு பிள்ளைகள். அவர்களின் தந்தைவழிப் பாட்டி. எல்லாமே சட்டம் வகுத்த வழியில் சரியாகவே நடக்கின்றதாகத் தோன்றினாலும், சரியாகவே இல்லை என்கின்றனர் பிள்ளைகள். பிழை என்பதாகவே வாதாடும் பாட்டி.

“உங்களுக்கும் அம்மாவுக்கும் ஒத்துப்போகவில்லையென்றதால் பிரிந்து விட்டீர்கள்.. எனக்கும் உங்களுக்கும் ஒத்துப்போகாமல் விட்டால் நான் என்ன செய்வது..?”

இந்த நியாயமான கேள்வியின் முன்வைப்போடு நாடகம் முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன.

அந்தக்கேள்விக்கான விடையை பிரிந்து போனவர்கள் தேடுவது போல பார்வையாளர்களாகிய நாங்களும் தேட முனைந்திருப்போம். சட்டம் என்ற வலைப்பின்னலில் பாட்டியுடன இப்படி தன்னிச்சையாகப போக இடம்கொடுக்கப்படுமா என்ற சந்தேகத்தையும் தவிர்த்திருக்கலாம்.

சிறந்ததோர் நாடகப்பிரதி. Counselling சம்பந்தமான குறிப்புகள் சற்று அதிகமாகப் படவில்லையா? குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்படவேண்டியவர்கள் அவர்களா?

மகனாக நடித்த சிறுவன் சுஜீபன் கலாநாதன் புள்ளிகளை அள்ளிக்கொண்டு போய்விட்டான். அபாரம் என்பது போதாது.

காட்சிக்கான பகைப்புலம் எம் கவனத்தை ஈர்க்காமல் பார்த்துக்கொண்டிருக்கலாம். பலம்தான் சிவமணியின் பிரதியில் இருக்கின்றதே !


அரி ஓம் நம

“ ஒரு குறிப்பிட்ட சமூகம் மாத்திரம் விசித்திரமாகத் எனக்கு தெரியவில்லை. மனித இனமே எனக்கு அப்படித்தான் தெரிகிறது.”

அபத்த நாடகங்களின் முன்னோடிகளில் ஒருவராகக்; கருதப்படும் றொமேனிய- பிரான்சிய நாடகாசிரியரான இயுஜின் அயனஸ்கோவின் மேற்குறித்த பார்வை அவர் எழுதிய நாடகங்களில் பிரதிபலித்தது.

மிகச்சாதாரணமான வழக்கமான நிகழ்வுகளை அபத்தமானவை யாகச் சித்தரிப்பதோடு நின்றுவிடாமல், மனிதர்கள் தனிமைப்பட்டுப்போவதையும் அவர்களது இருத்தலே கேள்விக்குறியாக விளங்குவதையும் அவரது நாடகங்கள் சித்தரித்தன.

வழக்கமான சம்பவக்கோவைகளுடன் ஒரு கதைக்கரு, அக்கதையின் ஓட்டம், உச்சக்கட்டம், தொடர்ந்து வரும் தீர்மானமான முடிவு, இந்த அமைப்பில் நாடகங்களைப்பார்த்து பழகிப்போன ஒரு பார்வையாளர் என்ற இவை சேர்ந்த ஒரு கட்டுக்கோப்பில் இருந்து விடுபட்டு இவையொன்றுமில்லாத ஒரு Anti-theatre என்று சொல்லப்படும் அபத்தநாடக வடிவில் அவரது ஆரம்பநாடகங்கள் அமைந்தன.

20களில், 30களில் நிலவிய பரிட்சார்த்த நாடகங்களை ஒட்டியதாக அபத்த நாடகங்கள் தொடங்கியதாக கருதப்பட்டாலும் இரண்டாவது உலக மகாயுத்தத்தின் பின்னரே இத்தகைய நாடகப்போக்கு தீவிரமடைந்தது. அடிப்படையில் மனிதவாழ்வின் நிலையற்ற தன்மையை உணர்த்துவதோடு, காலம் காலமாக நிலவிய பெறுமதிகள் அர்த்தமற்றவையாக போய்விட்ட, யுத்தத்திற்கு பின்; தொடர்ந்த காலத்தில் எல்லாம் வழக்கமாக நடப்பதுபோலவே நடக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கும் பார்வையாளர்களை உலுக்கி, வெளியே கொண்டு வருவதுதான் இந்நாடகங்களின் நோக்கமாக இருந்தது.

அயனஸ்கோ தனது ஆரம்பகால ஓரங்க நாடகங்களில் பார்ரவையாளர்களை நாடகத்தோடு ஒன்றிப்போகாமல் பார்த்துக்கொள்ளும் வகையில் அன்னியப்படுத்தல் தன்மையுடன், பாத்திரங்கள் தங்களுக்குள் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளல் சிரமமானதும் பயனற்றவையும் என்பதாக காட்டினார். பாத்திரங்களுக்கு மேலாக சொற்களும், ஜடப்பொருட்களும் தங்களுக்கென்ற தனித்துவத்தன்மை பெறும் வகையில் இந்நாடகங்கள் விளங்கின.

அயனஸ்கோவின் ஆரம்பகால நாடகங்களில் ஒன்றான The Lesson மிகுந்த சிக்கலானதும், அரங்கேற்றத்தில் சிரமத்தையளிக்ககூடியது என்றும் நான் கருதியதுண்டு. ஆனால் பென்னேஸ்வரன் என்பவர் இதைத் தழுவி நேரடிநாடகம் என்று நினைக்குமளவிற்கு வெகுசிறப்பான பிரதியை உருவாக்கியிருக்கிறார்.

மிகுந்த உற்சாகத்துடன் புதிய ஆசிரியரைத் தேடிவரும் ஒரு இளம்பெண், ஏதோ நடக்கப்போவதாக அபாய அறிவித்தல் கொடுத்துக் கொண்டிருக்கும் பணிப்பெண், சித்தசுவாதீனமற்றவரான ஒரு பேராசிரியர்.

ஆரம்பத்தில் புத்திசாலியான மாணவி போலத்தோன்றினாலும், போகப்போக அவள் புத்திக்கூர்மையற்றவள் என்று தெரியவருவதும், கொஞ்சம் கொஞ்சமாக பேராசிரியர் மனம் பிறழ்ந்து போய், பணிப்பெண் எதிர்பார்த்த முடிவை அடைவதுமான இந்நாடகத்தை பார்வையாளர்களும் மிகுந்த வரவேற்புடன் ஏற்றுக்கொண்டமைக்கு பல காரணிகள் உண்டு.

பென்னேஸ்வரனின் மிகச்சிறப்பான பிரதி. புராந்தகன் இயக்குனராக அப்பிரதியின் வலுக்களை புரிந்து கொண்டு கலைஞர்களை ஆற்றுப்படுத்திய சீர்ச்சிறப்பு. பேராசிரியராக நடித்த குரும்பசிட்டி ராசரத்தினத்தின் நடிப்பு.

சொல்வதையே திருப்பச்சொன்னாலும் அதை ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு தொனியில் சொல்வதும், சொல்லிக்கொடுப்பதே ஒரு வெறியாக மாறுவதும், இடையிடையே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதும் - அவரது ஆளுமை முழுமையாகப் தெரியவந்த ஒரு அற்புதமான நடிப்புச் சாதனை.

இவற்றைப்போலவே மாணவியாக வந்த ஷாளினி சண்முகநாதன் தன் அறிவுக்குறைவை வெளிப்படுத்தியதும், பேராசிரியரின் மனப்பிறழ்வினால் பாதிக்கப்பட்டு தன் நோய்களைச்சொல்லும் இடங்களிலும், இறுதியில் வெடித்துச் சிதறுவதிலும் தன்பங்கை சிறப்பாகவே ஆற்றியிருக்கிறார்.

பணிப்பெண்ணாக வந்தவரின் நடிப்பு போதுமானதாக இருந்தது.

அரங்காடலின் வரலாற்றில் அரி ஓம் நம மிகநீண்டகாலத்திற்கு நினைவில் வைத்திருக்கக்கூடிய நாடகம்.

அதுமாத்திரமல்ல 14வது அரங்காடலே ஒரு திருப்புமுனைதான்.

Sunday, September 16, 2007

14வது அரங்காடல் பற்றிய விமர்சனங்கள் - 1

நம்பிக்கைகளும் நம்பிக்கையீனங்களும்!
கனடாத் தமிழ் நாடக அரங்கு (2007) குறித்த ஒரு கண்ணோட்டம்!
-
-தேவகாந்தன்-

(மனவெளி கலையாற்றுக் குழுவினரின் 14வது அரங்காடல் பற்றிய கருத்தினை மட்டும் இணத்திருக்கிறோம்.)

(3) மனவெளி கலையாற்றுக் குழுவினரின் 14வது அரங்க அளிக்கை முக்கியமானது. ஏனெனில் அதன் 13 ஆண்டின் வெற்றிகள், தோல்விகள் யாவும் அனுபவமாகிய ஒரு கூட்டிசைவில் இம்முறை அளிக்கைகள் வெளிவந்திருந்தன என்று கொள்ளமுடியும்.

மனவெளியின் 13வது அரங்காடலில் ‘ மீண்டும் தொடங்கும் மிடுக்கு ’ நாடகத்தை மிக்க கட்டிறுக்கமானதாக, நேர்த்தியானதாக, ரசிக, கலா அம்சங்கள் நிறைந்ததாகத் தந்திருந்த துஷி ஞானப்பிரகாசத்தின் ‘இப்பொழுதும் எப்பொழுதும்’ அளிக்கை பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை ஈடுசெய்யவில்லையென்பது பரவலான அபிப்பிராயமாக இருந்தது. நான் அவ்வபிப்பிராயத்தினுடன் மாறுபடக் காரணமில்லை.

படிமமாய்க் காட்சிகளையும் பாத்திரங்களையும் அமைத்து, தனித்துவமான முறையில் அதை நெறிப்படுத்தியிருந்தாலும், அம் மொழிபெயர்ப்பாக்கம் வலுவின்றியிருந்தது. பார்வையாளன் மனத்தில் ஒரு பாதிப்பினை ஓரளவேனும் கூடத் தந்துவிடவில்லை அது. எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய ஒரு அரசியல் ப+டகத்துள் நாடகப் பிரதி இயங்கியிருப்பினும் அது வெளிப்பாட்டு முறைமையில் முழுமையற்றுப்போனமை துர்ப்பாக்கியமே. ஹரோல்ட் பின்ரர் இங்கிலாந்தின் நவீன நாடகத்தின் தந்தையெனப் போற்றப்படுபவர். அவரது நவீன நாடகப் பிரதிகள் உலகமெங்கணும் மெச்சி வாசிக்கப்படுபவை. நடிக்கப்படுபவை. மொழியாக்கத்தில் அல்லது தழுவலில் அவ்வரசியலின் அதிகாரத்தை, அதிகாரத்தின் வன்முறையை அளிக்கையாக்கக்கூடிய சொல்லாடல் பலஹீனமாக இருந்தது.

‘ சாகாத சரித்திரங்கள் ’ சி.சிவசேகரத்தின் கவிதைகள் மூன்றினைக் காட்சியாக்கும் முயற்சியாகவிருந்தது. முதலிரு கவிதைகளின் காட்சியளிக்கைகளும் குறிப்பிடக்கூடியளவு இருந்தவேளையில், மூன்றாம் கவிதையின் காட்சியளிக்கை அருமையாகவிருந்தது. மேடையை நோக்கி நிற்றல் என்கிற மரபார்ந்த நாடக மரபினைத் தூக்கியெறிந்துவிட்டு மிக அற்புதமாகக் காட்சியமைப்பைச் செய்திருந்த நெறியாளுகைக்காக வி.கந்தவனத்தையும், அதை அருமையாக நடிப்பில் வெளிப்படுத்திய கணபதி ரவீந்திரனையும் இந்த இடத்தில் பாராட்டவே வேண்டும். தமிழ் நாடக மேடைகளில் கவிதையினைக் காட்சிப்படுத்தும் முயற்சிகள் குறைவு. மிகமிகக் குறைவு. அதை துணிச்சலாக முயற்சியாக்கம் செய்தமையை மனவெளியின் முக்கிய அம்சமாகக் கருதுகிறேன்.

புராந்தகனின் ‘ அரி ஓம் நம! ’ என்ற யூஜின் அனஸ்கோவின் பிரதியது மொழிமாற்ற நாடகமானது, அபத்த நாடக வகையைச் சேர்ந்தது. அபத்த இலக்கிய, கலை முயற்சிகள் நாடகம் மேற்குலகில் நவீனம் பெறத் துவங்கிய காலத்தைச் சேர்ந்தவை. அந்த அபத்த வகைக்கான தேவை இன்றும் நம் நாடக அரங்க, சமூகத் தேவையாக இருப்பினும், அதை மனப்பிறழ்வின் அங்கமாக வாசகன் அனுபவமாய் அடையும் சாத்தியத்தை ஏற்படுத்தாமற் போனமை ஏன் ? பிரதியின் அதிநீளம் அவ்வாறான நிலையை ஏற்படுத்தியிருக்க முடியுமா? அப்படியென்றுதான் தோன்றுகிறது. ஒரு தனி அரங்க நிகழ்ச்சியாக இதை நன்கு ரசிக்க முடிந்திருக்குமென்பது என் நிலைப்பாடு.

இடம், காலம் போன்றவைகூட பல்நாடக அளிக்கை அரங்கில் முக்கியமானவை என்பது ஞாபகம் கொள்ளப்படவேண்டும்.

‘இரண்டுக்கும் நடுவே’ என்ற இளையபாரதியின் நாடகம் சாதாரண பார்வையாளனுக்கானது. ஆனாலும் அது நடிப்பினாலும், எடுத்துக்கொண்டிருந்த கருப்பொருளினாலும் கனடாத் தமிழ்ச் சமூகத்திடையே நிலவும் குடும்ப உறவுகளுக்கிடையேயான அவலங்களை, அழுத்தங்களை வலுவாகச் சொல்லியிருந்தது. இதில் பெண்ணின் நிலைநின்ற நியாயம் - அவள் தனியே வாழவேண்டி நேர்ந்தமைக்கான காரணத்தையும் அதற்கான உரிமையையும் வெளிப்படுத்தும் அக்கறை காட்டப்படவில்லையெனினும், பெண்ணாக அல்லாமல், பெண்ணை பெற்றாரில் ஒருவராகக் கொண்டு, பிள்ளைகளின் நலன்கள் பேணப்படவேண்டும் என்ற வன்மையான கருத்தைக் கொண்டிருந்தவகையில், பார்வையாளன் சாந்தமாகிப்போக முடிந்திருந்தது.

இறுதியாகச் சொல்ல விரும்புவது ‘ நிறங்களின் நிஜங்கள் ’ பற்றி... நிறங்களுக்கும் மனித உணர்வுகளுக்கும் பாரிய தொடர்புகள் இருக்கின்றன. கீழ்த் திசை மரபிலேயே மதம், கலை சார்ந்து பல்வேறு விளக்கங்கள் உள்ளன. இந்த விளக்கங்களை மீறிய விஞ்ஞான ரீதியான தொடர்பாடல்களையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

வறுமையின் நிறம் சிவப்பு என்று ஒரு சினிமாப் படத்தின் தலைப்பு சொல்கிறது. சிகப்பு விளக்குப் பகுதி என்பது மும்பையில் விபச்சாரிகள் தொழில் நடத்தும் அனுமதிப் பத்திரம்பெற்ற ஸ்தலம். இதையே தென்கொரியாவில் மஞ்சள் வீட்டுப் பகுதி என்பர். சாலைகளில் வாகன நிறுத்தத்திற்கான அடையாள விளக்கும் சிகப்புதான். சிவப்பு எதற்காக அவ்வாறு வைக்கப்பட்டதென்பதற்கு, விஞ்ஞான ரீதியான விளக்கமுண்டு. அந்த நிறம்தான் நீண்டதூரம் தெரியக்கூடிய நிறமென்பது நிறுவப்பட்ட உண்மை. அதுபோல் சிவப்பு, நீலம் என்பன மின்சார நேர்த் திசை, மாறுதிசை மின் வலுக்களின் நிறமாகக் கணிக்கப்பட்டிருக்கின்றன. பச்சை ‘ஏர்த்’ எனப்படும் நிலக்கடத்தல் பகுதியாக நிற்கும். நாடுகளிடையே நிறம் சார்ந்து வித்தியாசமான விளக்கமுண்டு. ஆனாலும் அவை நிறம்பற்றி ஏதோ ஒருவகையில் அர்த்த அமைப்புக்களைக் கொண்டிருக்கின்றன.

தமிழ்ச் சூழலில் மஞ்சள் அதுபோல் மரபார்ந்து மங்களகரத்துக்கானதென்றும், கறுப்பு அமங்கலத்துக்கும், வெள்ளை வெறுமைக்கும் அடையாளங்களென்றும் நாம் சொல்லித்தரப்பட்டிருக்கிறோம். இந்த நிறங்கள் மனித உணர்வுகளுடன் மிகநெருங்கிய தொடர்புடையன. பச்சை நீலம் மஞ்சள் சிவப்பு என்பன அதுபோல் ஒவ்வொரு மனித உணர்வுகளைக் குறிக்க சினிமாக்களில் மட்டுமில்லை, சினிமாக் காலத்துக்கு முன்பிருந்தே கூத்துகளிலும் தெருநாடகங்களிலும் பாவனைக்கெடுத்துக் கொள்ளப்பட்டுள்ள வர்ணங்களே. இதை ஆடல் கலையில் உணர்வுகள் பீறிட அரங்காக்கப்பட்ட நிகழ்வுதான் ‘ நிஜங்களின் நிறங்கள்’.

இப்போது உடல்மொழி வகையான இந்த நவீன நடனத்தைப் பற்றி நான் சொல்லலாமென நினைக்கிறேன். தமிழில் சதிர் புராதனமானது. இதை ஒருவகையில் தமிழ் நடனவகையாகக் கொள்ளலாம்தான். பரதம் அதிலிருந்து செழுமைப்படுத்தப்பட்ட நடன வகையென்பது ஆய்வாளர்களால் இப்போது ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிற முடிவு. இந்த பரதத்தை தமிழ்ப் பரப்பில் நவீன வடிவமாக்க முயன்று வெற்றிபெற்றவராக மறைந்த சந்திரலேகாவைச் சொல்லவேண்டும். பரதத்துடன் பல்வேறு நடன வகைகளைக் கலந்து இந்த நவீன நடன வகையை தமிழுலகுக்கு அறியத் தந்தவர் அவர்தான் எனவே நினைக்கிறேன். இதில் பரதம் மட்டுமல்லாது, யோகாசன முறைமை, பாலே நடனம் போன்றவற்றின் கூறுகளும் கலந்துள்ளன. மட்டுமில்லை. தப்பாட்டம்போன்ற இசைகளையும், களரிக்காரர்களின் ஆட்டவகைகளையும்கூட இது கொண்டிருக்கும். வெறும் அசைவுகள் மூலம் மனித மன உணர்வுகளைப் பிரதிபலிக்க முடியுமென நிறுவியதோடு மட்டுமல்லாது, அதை நிகழ்விலும் நிகழ்த்திக் காட்டியவர் சந்திரலேகா. அவருக்கு உடலென்பது ஒருவகை மொழி. ஓவ்வொரு அசைவிலும் சொல் பிறக்கிறது. இந்த உடம்பு கொண்டிருக்கும் ரகசியங்கள்போல், அதன் மொழியும் ரகசியமானது. அந்த மொழிமூலம் நவீனம் புனையும் முயற்சியே உடல்மொழி நடனவகையான இதன் முக்கியமான அம்சம்.

இது இந்தியாவில் எண்பதுகளில் வீச்சுப்பெற்று வளர ஆரம்பித்த ஒரு நடனவகை என்றால் தப்பில்லை. ஆனால் சமீப காலமாகத்தான் இந்த நவீன நடன வகை கனடாவில் பயில்வுபெற ஆரம்பித்திருக்கிறது. இது சந்திரலேகாவின் மாணவர்களுள் ஒருவரான சுதர்சன் துரையப்பாவின் கனடா வருகையுடன் ஆரம்பித்ததெனக் கூற முடியாவிட்டாலும், இக்காலகட்டத்துக்கு முன்பின்னாக மிகுந்த கவனம்பெற்றிருக்கிறது என்று சொன்னால் மிகையில்லை.

உடல்மொழி வகையான இந் நவீன நடன வகைக்கு அசைவுகளே போதுமானவைதாம். இசை அதற்கும் கூடுதலான ஒரு அம்சம். ‘நிறங்களின் நிஜங்கள்’ அளிக்கையில் இசையின் வலுவைவிட அசைவுகள் காத்திரமானவையாக இருந்தன என்பது என் எண்ணம். நடனத்துக்கு இசையானது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததென்பது சிறந்த நடன ஆசிரியை திருமதி வசந்தா டானியலின் கருத்தாகும். உடல்மொழி வகை நடனத்திலும் இசை முக்கியமானதே. ஆனாலும் வேறெந்த நடனவகையைவிடவும் இவ்வகை நடன முறைமைக்கு பாடல் மட்டுமன்றி, இசையும் தீவிரத் தேவையை இழந்தே நிற்கிறதென பல நவீன நடனகாரர் வாயிலாக அறிய முடிகிறது. இதை ஒரு நவீன நடனம் என்பதற்காக மட்டுமின்றி, அதன் அறுதியான உணர்ச்சி வெளிப்பாட்டுத் திறனுக்காகவும் நமது நடனகாரர் இதை முன்னெடுக்க முன்வரவேண்டுமென்பது எனது ஆவல்.

இவ்வாண்டு நாடக அளிக்கைகளில் இன்னுமொன்றை அவதானிக்க முடிந்தது. முந்திய ஆண்டுகளைவிட இம்முறை ஒளியமைப்பில் வெகுவான கவனம் செலுத்தப்பட்டிருந்ததைச் சொல்லவேண்டும். ஓலியமைப்பும் கூடுதலான கவனத்தைப் பெற்றிருந்ததையிட்டு என்போன்றவர்களுக்கு மகிழ்ச்சியே. மிக்க முக்கியத்துவம் வாய்ந்த ஒளி, ஒலி அமைப்புக்கள் அண்மைக்காலம்வரை நமது நாடக மேடைகளில் கவனிப்பற்றிருந்ததைப்பற்றி, அவ்வப்போது நாடக அளிக்கைகள் குறித்த என் கருத்துரைகளின்போது நான் குறிப்பிட்டே வந்திருக்கிறேன்.

இன்னொன்று குறிப்பிடப்படவேண்டியது. அதுதான் பிரதியாக்கம். இந்தத் தடவை அதிகமான மொழிபெயர்ப்பு நாடகங்கள் மேடையேறியிருந்தன. ஓவ்வொரு ஆண்டுகளிலும் இது நிகழ்ந்தே வந்திருக்கிறது என்பது ஞாபகம்கொள்ளப்படவேண்டியது. தமிழில் நாடகப் பிரதியாக்கங்கள் குறைவு. குறிப்பாக கனடாத் தமிழ்ப் புலத்தில் மிகக் குறைவு. இதை ஈடுசெய்ய பிறமொழியாக்கங்களைநோக்கி நகரவேண்டிய துர்ப்பாக்கியம் நமது நாடக நெறியாளுநர்களுக்கு ஏற்பட்டதாயிருக்கலாம். ப.அ.ஜயகரன், புராந்தகன், சகாப்தன், செழியன் போன்றோரின் ஈடுபாட்டினால் கனடா மண்ணில் தமிழ் அரங்கு எதிர்கொண்டிருக்கும் இக்குறைபாட்டை நிவர்த்திக்க முடியும்.

வருங்காலங்களில் தமிழ் நாடக அரங்கில் இன்னும் வலுவான அளிக்கைகள் பார்வையாளனை அடைய முடியுமென்ற நம்பிக்கை எவருக்கும் ஏற்பட இவ்வாண்டு அளிக்கைகள் போதுமானவையே.

bdevakanthan@yahoo.com.

(நன்றி - பதிவுகள்)

Saturday, September 15, 2007

14வது அரங்காடல் தொடர்பான கட்டுரை

ஹரல்ட் பின்றரின் அரசியலும் நாடகங்களும் - (பரபரப்பு)

துஷி ஞானப்பிரகாசம்

2005ம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 15 திகதி, அந்த ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் விருது, இங்கிலாந்தை சேர்ந்த நாடகாசிரியர் ஹரல்ட் பின்றருக்கு வழங்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு வெளியான கணமே அதைப் பற்றிய சர்ச்சையும் ஆரம்பமானது. ஹரல்ட் பின்றர் இலக்கியத்திற்கான நோபல் விருதுபெறுவதற்கு தகுதியானவர் என்பதில் மாற்றுக்கருத்து இருந்துவிட முடியாது. ஆகவே சர்ச்சை அதைப்பற்றியதல்ல. அந்த விருது வழங்கப்பட்ட காலம்தான் சர்ச்சைக்குரியதாக இருந்தது.

விருது அறிவிக்கப்பட்ட 2005ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், தான் நாடகங்களை எழுதுவதை நிறுத்திவிட்டதாக பி.பி.சி.யுடனான நேர்காணல் ஒன்றில் பின்றர் தெரிவித்திருந்தார். “நான் இதுவரை 29 நாடகங்களை எழுதிவிட்டேன் என நினைக்கிறேன். அது போதுமானது” என அவர் கூறினார். “நான் நாடகங்களை எழுதுவதை நிறுத்திவிட்டாலும், கவிதைகள் எழுதுவதை நிறுத்திவிடவில்லை” என்றும் அவர் கூறினார். பின்றர் ஒரு கவிஞராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும், கட்டுரையாளராகவும்கூட அறியப்பட்டிருக்கிறார் என்றாலும், இலக்கியத்திற்கான அவரின் முக்கிய பங்களிப்பு அவரது நாடகங்களாகவே இருக்கிறது. இந்நிலையில், ஒரு நாடக ஆசிரியருக்கு, அவர் நாடகங்கள் எழுதுவதை நிறுத்திவிட்டபின் எதற்காக விருது வழங்கவேண்டும் என்ற கேள்வி எழுந்தது.

இந்த கேள்வியின் பின்புலத்தை ஆராய்ந்தால், இந்த கேள்விக்கான காரணம் இலக்கியத்தின் மீதோ அல்லது நோபல் பரிசின் மீதோ உள்ள அக்கறை அல்ல என்பது தெரியவரும். இதற்கான முக்கிய காரணம் விருது அறிவிக்கப்பட்ட 2005ஆம் ஆண்டிலும், அதற்கு முந்திய ஒரு தசாப்தமாகவும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை காட்டமாக விமர்சித்துவந்த முக்கியமானவர்களில் ஒருவராக பின்றர் இருந்திருக்கிறார். 2005ஆம் ஆண்டு காலகட்டத்தில்; ஈராக் மீதான போரை வன்மையாக எதிர்த்துவந்த பின்றர், தனது அரசியல் செயற்பாடுகளில் அதிக கவனம் செலுத்துவதற்காகவே தனது எழுத்துப் பணிகளை குறைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். ஆகவே சர்ச்சை, ஹரல்ட் பின்றர் என்ற நாடகாசிரியருக்கு விருது வழங்கப்பட்டது பற்றியதல்ல. ஹரல்ட் பின்றர் என்ற அரசியல் செயற்பாட்டாளருக்கு விருது வழங்கப்பட்டது பற்றியதே. இதை ஹரல்ட் பின்றரும் கூட ஏற்றுக்கொண்டிருக்கிறார் என கூறலாம். தனக்கு நோபல் விருது வழங்கப்பட்டது பற்றிக் கூறுகையில் அவர் “நான் ஏறக்குறைய ஐம்பது வருடங்களாக நாடகங்களை எழுதுகிறேன். நான் அரசியலிலும் மிகுந்த ஈடுபாடு உள்ளவனாக இருக்கிறேன். நான் அரசியல் ஈடுபாடு உடையவன் என்ற உண்மை எவ்வளவு தூரம் இந்த விருதுக்குக் காரணமாக இருந்தது என என்னால் உறுதியாக கூறமுடியாதுள்ளது” என கூறினார்.

பின்றரின் இடதுசாரி அரசியல் நிலைப்பாட்டை எதிர்ப்பவர்கள், அவருக்கான விருதையும் எதிர்த்து சர்ச்சை கிளப்பினாலும், பின்றரின் எழுத்துக்களில் இருந்து அரசியலையும் சமூக அக்கறையையும் பிரித்துவிட முடியாது என்பதே உண்மை. 1950ஆம் ஆண்டு தனது இருபதாவது வயதில் தனது முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டதோடு அந்த காலகட்டத்திலேயே ஒரு தொழில்முறை நடிகராகவும் தனது வாழ்க்கையை ஆரம்பி;த்த பின்றர், அக்காலத்தில் இருந்தே சமகால அரசியலிலும் ஈடுபாடு கொண்டவராக இருந்திருக்கிறார். இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிந்திய அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கையை விமர்சிப்பவராக, சித்திரவதைக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பவராக, பேச்சுச் சுதந்திரம் எங்கு ஒடுக்கப்பட்டாலும் அதை எதிர்த்துக் குரல் கொடுப்பவராக, துருக்கியினால் ஒடுக்கப்பட்ட குர்திஷ் மக்கள் சார்பாகவும், நேற்றோ படைகளால் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட சேர்பிய மக்களுக்காகவும், அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்குள்ளான ஈராக்கிற்காகவும், மேற்குலக நாடுகளால் சுரண்டப்படும் இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்காகவும் உலக அரங்கில் பரிந்து பேசியவராக பின்றர் இருந்திருக்கிறார். இதை நோபல் விருதுக்குழுவும் அங்கீகரிக்கிறது. பின்றருக்கு வழங்கப்பட்ட நோபல் விருதுக் குறிப்பில் ‘பின்றரின் எழுத்துக்கள் ஒடுக்குமுறைகளின் பூட்டிய அறைகளுக்குள் பலாத்காரமாக நுழைகின்றன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்றரின் நாடகங்கள் எல்லாமே வெளிப்படையான அரசியல் பின்புலம் கொண்டவை என்றும் கூறிவிட முடியாது. “நான் அரசியலில் மிக ஆழமாக ஈடுபட்டுள்ளேன். கலையிலும்; மிக ஆழமாக ஈடுபட்டுள்ளேன். சில வேளைகளில் இவை இரண்டும் சந்திக்கின்றன. சில வேளைகளில் சந்திப்பதில்லை” என பின்றர் கூறுகிறார். பின்றர் நாடகத்துறையுள்; நுழைந்த காலத்தில் பிரபல நாடக ஆசிரியராக விளங்கியவரும், பிற்காலத்தில் பின்றரின் நண்பராக இருந்தவருமான சாமுவல் பெக்கற் (Samuel Beckett) பின்றர் மீது பெரும் தாக்கத்தை உண்டுபண்ணியிருக்கிறார் என்பதை பினறரின் நாடகங்களில் இருந்த அறிந்துகொள்ள முடிகிறது. பெக்கற்றின் நாடகங்களின் அபத்தப் போக்கை பின்றரும் பின்பற்றியிருக்கிறார். மனித வாழ்வி;ன் நிலையின்மை, மனித வாழ்க்கையின் அபத்தத்தன்மை, மனித நினைவுகளின் நம்பகமற்ற தன்மை போன்ற விடயங்கள் பற்றி பெக்கற்றின் நாடகங்கள் பேசியது போலவே பின்றரின் ஆரம்பகால நாடகங்களும் பேசின. அதற்கும் மேலே ஒரு படி சென்று, மொழி அபத்தத்தன்மை உடையது, மனிதர்கள் மொழியை உண்மையான உறவாடலுக்கு அதிகம் பயன்படுத்துவதில்லை, மாறாக உளமார்ந்த உறவாடலை தவிர்த்துக்கொள்ளவே மொழியை அதிகம் பயன்படுத்துகிறார்கள் போன்ற கருத்துக்களும் பின்றரின் நாடகங்களில் பொதுவான கருத்துகளாக வலியுறுத்தப்பட்டன. எனினும் இவை கூட பின்றரின் அரசியல் நிலைப்பாட்டுடன் தொடர்பு கொண்டனவே என கூறுகிறார் நாடக விமர்சகரும், பின்றரின் சரிதையாளருமான மைக்கல் பிலிங்றன் (Michael Billington). “பின்றரின் ஆரம்பகால நாடகங்கள் பால், குடும்பவாழ்வு, திருமணம் போன்றவற்றின் ஒடுக்குமுறை அரசியல் பற்றி பேசுகின்றன. பிற்கால நாடகங்கள் அரசியல் பற்றிய தனிநபர் நிலைப்பாடுகளால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றி பேசுகின்றன” என பிலிங்றன் கூறுகிறார்.

பின்றரின் நாடகங்கள் எழுதப்பட்ட காலத்தை வைத்து அவற்றை ஆரம்பகால நாடகங்கள், பிற்கால நாடகங்கள் என சுலபமாக பிரித்துவிடலாம். ஆனால், அவரின் பல நாடகங்களை வெளிப்படையான அரசியல் நாடகம் என்றோ அல்லது ஆழ்ந்த சமூக விமர்சனம் என்றோ பிரித்துவிடுவது அவ்வளவு சுலபமானது அல்ல. இந்த சிக்கலுக்கும் பிலிங்றனே மிக சுவையான தீர்வு கூறுகிறார். “பின்றரின் நாடகங்களைப் பார்ப்பதில் உள்ள பாதி சுவாரஸ்யம், அவை எதைப்பற்றியவை என உறுதியாக கூறமுடியாது இருப்பதுதான்” என்கிறார் பிலிங்றன்;. இந்த வகையில், தனது நாடகங்களை புரிந்துகொள்ளும் உரிமையை, தனது எழுத்துக்களுக்கு விளக்கம் கற்பிக்கும் உரிமையை பின்றர் மக்களிடம் இருந்து எடு;த்துக்கொள்ளவில்லை. தனது வாழ்வையும் கலையையும் மக்களின் உரிமைகளுக்காக போராடுவதற்கென பெரிதும் செலவிடும் ஹரல்ட் பின்றருக்கு அதுதான் அழகும் கூட.

நாடகங்கள் எழுதுவதை நிறுத்திவிட்டாலும், ஒரு நடிகனாக, இயக்குனனாக, பேச்சாளனாக, எழுத்தாளனாக ஹரல்ட் பின்றரின் அரசியல் பயணமும், நாடகப் பயணமும் கைகோர்த்துத் தொடர்கின்றன.