Saturday, September 22, 2007

14வது அரங்காடல் பற்றிய விமர்சனங்கள் - 2

கனடாவில் ரொரன்ரொவில் மார்க்கம் அரங்கில் 2007 ஜுலை மாதம் 8ந்திகதி (1மணி, 6மணி) இரு காட்சிகளாக நடைபெற்ற 14வது அரங்காடல் பற்றிய ஒரு பார்வையாக இக்கட்டுரை பிரசுரமாகின்றது.


மனவெளியின் 14வது அரங்காடல்
(கே. எஸ். பாலச்சந்திரன்
)

எல்லைகள் கடந்த தேடலும், அதன் அளிக்கையும், பார்வையாளர்கள்; அதை எதிர்கொள்ளும்; பக்குவம் பெறவைப்பதுமான ஒரு ஆரோக்கியமான நாடகச்சூழலை உருவாக்கும் முனைப்புடன் கனடாவில் ரொரன்ரொவில் 1996ல் ஆர்வமுள்ள இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட மனவெளி கலையாற்றுக்குழு கடந்த ஒரு தசாப்தகாலத்தில் பல பிறமொழி நாடகாசிரியர்களையும், நமது படைப்பாளிகளையும் அரங்குக்கு கொண்டு வந்ததோடு, திறமையுள்ள கலைஞர்களை இனம் கண்டு அவர்தம் ஆற்றலை வெளிக்கொணர்ந்ததோடு, உற்சாகமளிக்கும் பரந்துபட்ட பார்வையாளர்களையும் சம்பாதித்திருக்கிறது.

இப்பொழுதும் எப்பொழுதும்

கண்கள் கட்டப்பட்ட ஒரு பெண். (அது ஆணாகவும் இருக்கலாம்). அதுவே பெண்ணாக இருப்பதினால் அவளுக்கு இழைக்கப்படக்கூடியது இன்னமொரு பரிமாணத்தையும் தொடலாம்.
அவளின் இரு மருங்கிலும் இருவர். அதிகாரம் தந்த பலத்தைப் பெற்றவர்கள். என்னவெல்லாமோ அவளுக்கு நடக்கபோகின்றது என்பதை சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். அது என்னவென்று திட்டவட்டமாக சொல்லப்படாதபோதிலும், அவர்கள் சொன்னதையே திருப்பி திருப்பி வேறு சொற்களில் சொன்னாலும் அவர்கள் செய்வது ஒன்றைத்தான். துன்புறுத்தல் நிகழ்கிறது. ஆனால் எதிர்ப்பைக்காட்டும் வலுவை அந்தப்பெண் அல்லது அவள் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகம், மக்கள்கூட்டம் கொண்டிருக்கவில்லை என்பதை நாம் உணர்கிறோம்.

அரசியல் ரீதியாக அது அண்மைக்கால அரசியலாக இருந்தாலும் தெளிவான தீர்க்கமான சுய அபிப்பிராயம் கொண்ட பிரித்தானிய நாடக எழுத்தாளரான ஹரோல்ட் பின்ரரின் The New orld Order என்ற நாடகத்தை து~p ஞானப்பிரகாசம் மொழிபெயர்;த்து “இப்பொழுதும் எப்பொழுதும்” என்ற பெயரில் அரங்கேற்றியபோது, அவரது முந்திய நாடகமான “வதை” யின் ஒரு நீள் தொடர்பாகவே இது எனக்குப்பட்டது.

ஒரு யூகத்தை இயக்குனர் மேல் சுமத்துவது என் நோக்கமல்ல. இருப்பினும் சனநாயகத்தின் காவலர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு ஏகாதிபத்தியத்தின் அடாவடித்தனமான தலையீடுகளே இரண்டு நாடகங்களினதும் ஆதாரப்பொருளாக இருப்பதாக நான் நினைக்கிறேன். இதனால் இவரது நாடகப்பிரதிகளின் தேர்வு தனிப்பட்டரீதியிலும், பொதுவாகவும் மிகவும் தாக்கமுடையதாகவே இருப்பதாகக் கருதுகிறேன்.

“வதை” நாடகம் வரலாற்றின் ஒரு நிகழ்வை, நம்மிடையே வாழ்ந்தவர்களையே பாத்திரங்களாகக்கொண்டு அடக்குமுறையின் வன்மத்தை நிகழ்த்திக் காட்டியது. இந்த நாடகம் அதைக்குறியீடாக பின்ரரின் தனித்துவமான நாடகமொழியில், மௌனங்களுடன், இடைநிறுத்தல்களுடன், இன்னும் தீவிரமாகவே உணர்த்தியது.

மீண்டும், மீண்டும் இங்த இரண்டு நாடகங்களுக்கும் இடையில் நான் உலாவ முயற்சிப்பதை இயக்குனர் மன்னிப்பாராக. ஆனால் என்னால் அதைத் தவிர்க்கமுடியவில்லை. பப்லோ நெருடா என்ற தனிமனிதரும் அவர் சார்ந்த சமூகமும் பாதிக்கப்பட்ட ஒரு வரலாற்று நிகழ்வாகவே பார்வையாளர்கள், “வதை” நாடகத்தை ; பார்க்க முனையலாம். அது இயக்குனரின் நோக்கமாக இல்லாமல் இருந்தாலும் கூட. ஆனால் நாடு, சமூகம், தனிமனிதன் என்று பல தளங்களில் துன்புறுத்தல், அடக்குமுறை, என்பனவற்றை அதிகாரடையவர்கள் - அவர்கள் யாராகவிருந்தாலும், எந்த வடிவத்தில் இருந்தாலும், அவர்களிடமிருந்து எதிர்நோக்குவதையும், அவற்றை எதிர்க்கும் திராணியற்று இருப்பதையும் உணர்த்துகின்ற காரணத்தால் இந்நாடகம் அதிகமான பொதுமைப்பண்பு பெறுகிறது.

இந்நாடகத்தில் வரும் பாத்திரங்களைப்பற்றி, நடிகர்களைப்பற்றிச் சொல்வதற்கு முதல், சென்ற ஆண்டு இத்தாலியில், ருறின் நகரில் ஐரோப்பிய நாடக அரங்க விருதைப் பெற்றபின் ஹரோல்ட் பின்ரர் வழங்கிய நேர்முகத்தில் சொன்ன குறிப்பை சொல்வது சுவையாகவிருக்கும்.

“ உங்கள் பாத்திரங்கள் உங்களையே மறுதலித்து, தங்களுக்கான வாழ்க்கைப்போக்கை நிர்ணயித்துக் கொள்வதாக சொல்லியிருக்கிறீர்கள், பிரக்ஞைபூர்வமாக நாடகத்தில் நிகழ்வதையும், பாத்திரங்களையும் ஒழுங்குபடுத்துவது நீங்கள் இல்லையா? “

“ ஒரு நாடகத்தை எழுதத்தொடங்கும்போது அப்படி பிரக்ஞைபூர்வமாக நான் சிந்திப்பதில்லை. பாத்திரங்கள் சுயமாக செயற்படும். ஆனால் ஏதோ ஒரு தருணத்தில் எனது படைப்பைப்பற்றி பிரக்ஞையுடன் சிந்திக்கத் தலைப்படுவேன். பாத்திரங்களுக்கும் படைப்பாளியான எனக்கும் போராட்டம் நடக்கத்தான் செய்யும். ஆனால் வெற்றி பெறுவது யார்? எழுத்தாளன்தான். என் பேனையை எடுத்து (வெட்டுவது போல சைகை செய்கிறார்) – பாத்திரம் தான் மிக விரும்பும் தனது ஒரு வசனத்தை இழந்துவிடும். (சபையில் சிரிப்பு) ”

இவ்வாறே பின்ரரின் படைப்பை இயக்குனரின் பார்வையில் வெளிக்கொணரும் பாத்திரங்களாக கிங்ஸ்லி செபஸ்தியாம்பிள்ளையும், சேகர் தம்பிராஜாவும், துவாரகாவும் இயங்கினார்கள். வழக்கமாகவே து~pயின் நாடகங்களில் காணும் துல்லியமான அரங்க அசைவுகள், கட்டுக்கோப்பு இந்நாடகத்திலும் இருந்தன.

முடிவாக ஒரு குறிப்பு. சமகால அரசியல் சார்ந்த இந்த நாடகத்தைப் பார்க்கும்போது பின்ரரின் வாதங்களோடு முரண்படுபவராக இருந்தால், பார்வையாளர் வலிந்த ஒரு புரியாப்போர்வையை போர்த்துக்கொள்பவர்களாகி, உள்நுழைய முடியாமல் போகலாம்.


நிறங்களின் நிஜங்கள்

மொழியற்ற, வெறும் இசைக்கோலங்களின் பின்னணியில் நிகழ்த்தப்படும் நடனத்திலிருந்து நாம் பெறுவது என்ன? ஒரு சிலிர்ப்பு. ஒரு அனுபவம். தெரியாப்பொருளை கண்டுபிடிப்பதைவிட தெரிந்ததொன்றை இனங்காணும் சந்தோசம். வெட்டி மறையும் மின்னல் கீற்றை பொந்துக்குள் நுழையும் அணிற்குஞ்சின் வால் நுனிக்கு ஒப்பிடும் ஒரு கவிதை கூறும் விந்தை. புலன்களை கிளர்ச்சி பெறவைக்கும் ஒரு ஆச்சரியம்;. இப்படி சொல்லிக்கொண்டு போகலாம்.

இவற்றை முழுமனே பெறமுடியாமல் போனதில் தப்பொன்றுமில்லை. ஆனால் இசைத்தேர்வும் பெருமளவில் அதற்கு உறுதுணையாக இருக்கவில்லை என்ற காரணமாக இருக்கலாம். பச்சை வர்ணத்திற்கான இசையைத்தவிர.

வர்ணங்களின் குணாதிசயங்கள் அறிமுகவுரையில் குறிப்பிடப்பட்டபோது, மலையாள இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் தனது “எலிபதாயம்” திரைப்படம் சம்பந்தமான கருத்தரங்கில் சொன்னது நினைவுக்கு வந்தது.

“எலிபதாயம்” படத்தில் வரும் மூன்று சகோதரிகளும் அணியும் ஆடைகளின் வர்ணங்களை ஒவ்வொருவருக்கும் தனித்துவமாக, பச்சை, நீலம், சிவப்பு என்று எதற்காக தேர்ந்தெடுத்தீர்கள் ?”

“ நான் கதகளியாடும் கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்தவன். கதகளி ஆட்டத்தில் ஒப்பனை, ஆடை, அணிகலன்கள் இவற்றின் வர்ணங்கள் பாத்திரங்களின் குணாதிசயங்களை ஒத்ததாகப்பார்த்துக் கொள்வார்கள். நானும் எனது படத்தில் - பாசம், பிள்ளைகள், இரக்கம் உள்ள மூத்த பெண்ணுக்கு பசுமையான பச்சை வர்ணத்தையும், கடல், வானம் போன்ற நிச்சலனமான, அமைதியான இரண்டாவது பெண்ணுக்கு நீல வர்ணத்தையும், நெருப்பு, இரத்தம் என்பனவற்றின் சிவப்பு வர்ணத்தை ஆக்ரோசமான தனது எதிர்ப்புணர்வை வெளிக்காட்டும் இளைய பெண்ணுக்கும் தேர்ந்தெடுத்தேன் “ என்று பதில் கூறினார்.

பல நடனவகைகளின், (மேற்கத்தைய நடனங்கள் உட்பட்ட) சாயல்கள் தெரிந்தன, துள்ளல்களும், ஒத்திசைவும் நன்றாகவே இருந்தன. வர்ணங்களின் பேதங்களைக்காட்ட இன்னும் அதிகமான நடனமணிகளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று தொன்றியது.

எது எவ்வாறிருப்பினும், ஆனந்தி சசிதரன் முன்பொருமுறை வழங்கிய “ஐந்திணைகள்” பற்றிய நடன வடிவம் எனக்கு மிகுந்த மகிழ்வைத்தந்தது என்று சொல்வேன்.



சாகாத சரித்திரங்கள்

கரைமீது அலை வந்து அடி பதித்த மணற்சுவடு
காற்றடித்து மணல் வீசும்
கடல் இருந்தோர் அலை வந்து
அலை பதித்த அடிச்சுவட்டை அழித்து அங்கோர் சுவடமைக்கும்

உச்சஸ்தாயியை தொடமுயற்சிக்காத திவ்வியராஜனின் குரலில் இந்த அழகான கவிதை வரிகள் மெல்லிய இசைப்பின்னணியில் மிக இனிமையானதோர் பாடலாக விரிந்து பரவியது.

தொடரப்போகும் சுடுசரங்களுக்கு, வானைக்கிழித்து மேவும் ஒளிகொண்ட வாணவேடிக்கைகளுக்கு, “சுளீர்..சுளீர்” என்ற ஓசையுடன் ஒவ்வொரு முறையும் மடங்கி நிமிரும் சாட்டையின் வீச்சுகளுக்கு, அதாவது சிவசேகரத்தின் ஏனைய கவிதைகளுக்கு முன்னால் வரவேற்பு வாசல் அமைத்ததுபோல முற்குறித்த இசைப்பாடலாக உருவெடுத்த அவரது கவிதை வந்து பொருந்தியது.

கவிதைகளின் தெரிவும் தொகுத்தமுறையும் மிகவும் சிறப்பாகவிருந்தன. அதற்காகவும், ஒரு இளைஞனின் உற்சாகத்துடன். தன் பங்களிப்பை வழங்கியமைக்காகவும் கவிஞர் கந்தவனம் அவர்களை மிகவும் பாராட்டலாம்.

எங்கோ ஒரு வீடு சூறையாடப்படுகிறது
எங்கோ அச் செய்தி வெளிவருகிறது
எங்கோ ஒரு குடிசை தீக்கிரையாகிறது
எங்கோ அச் செய்தி வெளிவருகிறது
எங்கோ ஒரு மனிதன் கடத்தப்படுகிறான்
எங்கோ அச் செய்தி வெளிவருகிறது

என்று தொடங்கும் கவிதை கூறும் சேதிகள் இன்றோடு முடிந்து போகப்போவதில்லை. ஆனால் வல்லாதிக்கங்களைப் போல அவையும் சாஸ்வதமானவையல்ல. உடைந்துவிழும் சிகரங்களைப் போல என்றோ முடிவு பெறும்.;.

மாண்புமிகும் அமெரிக்கச் சனாதிபதி அவர்களே
திடுமென வந்த ஒரு பேரிடி போல
ஒரு விமானம் மோதியதால் அதிர்ந்து
இப்போது எரிகின்ற கோபுரமொன்றுள்
சட்டென மின்சாரம் நின்று போன
அறையொன்றின் உள்ளிருந்து ஒரு
அமெரிக்கக் குடிமகன் பேசுகிறேன்.

சற்றேனும் மிகைத்தன்மை தலைகாட்டாமல் இந்த நீண்ட கவிதையை சிறப்புற வழங்கிய கணபதி ரவீந்திரனும், நிகழ்வில் பங்கு கொண்ட ராஜன், இராஜ்மீரா ராசையா ஆகியோரும் வாழ்த்துக்குரியவர்கள்;.

சிவசேகரத்தின் கவிதைகள் எல்லைகளைக் கடந்து, ஒலிக்கும் மனிதாபிமாளத்தின் குரலாகவும், தேவையான பொழுதுகளில் தட்டிக்கேட்கும் வல்லமை உடையனவாகவும் இருக்கின்றமையால் உயிருள்ள கவிதைகளாக இயங்குகின்றன.

ஆங்காங்கே தலைகாட்டிய தடுமாற்றங்கள் கவிதாநிகழ்வின் வீச்சை சற்றே தளரச்செய்தன. அவ்வளவே.



இரண்டுக்கும் நடுவே

மண(மன)முறிவினால் பிரிந்தபோன ஒரு தம்பதி. அவர்களிடையே தவணை போட்டு பந்தாடப்படும் இரண்டு பிள்ளைகள். அவர்களின் தந்தைவழிப் பாட்டி. எல்லாமே சட்டம் வகுத்த வழியில் சரியாகவே நடக்கின்றதாகத் தோன்றினாலும், சரியாகவே இல்லை என்கின்றனர் பிள்ளைகள். பிழை என்பதாகவே வாதாடும் பாட்டி.

“உங்களுக்கும் அம்மாவுக்கும் ஒத்துப்போகவில்லையென்றதால் பிரிந்து விட்டீர்கள்.. எனக்கும் உங்களுக்கும் ஒத்துப்போகாமல் விட்டால் நான் என்ன செய்வது..?”

இந்த நியாயமான கேள்வியின் முன்வைப்போடு நாடகம் முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன.

அந்தக்கேள்விக்கான விடையை பிரிந்து போனவர்கள் தேடுவது போல பார்வையாளர்களாகிய நாங்களும் தேட முனைந்திருப்போம். சட்டம் என்ற வலைப்பின்னலில் பாட்டியுடன இப்படி தன்னிச்சையாகப போக இடம்கொடுக்கப்படுமா என்ற சந்தேகத்தையும் தவிர்த்திருக்கலாம்.

சிறந்ததோர் நாடகப்பிரதி. Counselling சம்பந்தமான குறிப்புகள் சற்று அதிகமாகப் படவில்லையா? குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்படவேண்டியவர்கள் அவர்களா?

மகனாக நடித்த சிறுவன் சுஜீபன் கலாநாதன் புள்ளிகளை அள்ளிக்கொண்டு போய்விட்டான். அபாரம் என்பது போதாது.

காட்சிக்கான பகைப்புலம் எம் கவனத்தை ஈர்க்காமல் பார்த்துக்கொண்டிருக்கலாம். பலம்தான் சிவமணியின் பிரதியில் இருக்கின்றதே !


அரி ஓம் நம

“ ஒரு குறிப்பிட்ட சமூகம் மாத்திரம் விசித்திரமாகத் எனக்கு தெரியவில்லை. மனித இனமே எனக்கு அப்படித்தான் தெரிகிறது.”

அபத்த நாடகங்களின் முன்னோடிகளில் ஒருவராகக்; கருதப்படும் றொமேனிய- பிரான்சிய நாடகாசிரியரான இயுஜின் அயனஸ்கோவின் மேற்குறித்த பார்வை அவர் எழுதிய நாடகங்களில் பிரதிபலித்தது.

மிகச்சாதாரணமான வழக்கமான நிகழ்வுகளை அபத்தமானவை யாகச் சித்தரிப்பதோடு நின்றுவிடாமல், மனிதர்கள் தனிமைப்பட்டுப்போவதையும் அவர்களது இருத்தலே கேள்விக்குறியாக விளங்குவதையும் அவரது நாடகங்கள் சித்தரித்தன.

வழக்கமான சம்பவக்கோவைகளுடன் ஒரு கதைக்கரு, அக்கதையின் ஓட்டம், உச்சக்கட்டம், தொடர்ந்து வரும் தீர்மானமான முடிவு, இந்த அமைப்பில் நாடகங்களைப்பார்த்து பழகிப்போன ஒரு பார்வையாளர் என்ற இவை சேர்ந்த ஒரு கட்டுக்கோப்பில் இருந்து விடுபட்டு இவையொன்றுமில்லாத ஒரு Anti-theatre என்று சொல்லப்படும் அபத்தநாடக வடிவில் அவரது ஆரம்பநாடகங்கள் அமைந்தன.

20களில், 30களில் நிலவிய பரிட்சார்த்த நாடகங்களை ஒட்டியதாக அபத்த நாடகங்கள் தொடங்கியதாக கருதப்பட்டாலும் இரண்டாவது உலக மகாயுத்தத்தின் பின்னரே இத்தகைய நாடகப்போக்கு தீவிரமடைந்தது. அடிப்படையில் மனிதவாழ்வின் நிலையற்ற தன்மையை உணர்த்துவதோடு, காலம் காலமாக நிலவிய பெறுமதிகள் அர்த்தமற்றவையாக போய்விட்ட, யுத்தத்திற்கு பின்; தொடர்ந்த காலத்தில் எல்லாம் வழக்கமாக நடப்பதுபோலவே நடக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கும் பார்வையாளர்களை உலுக்கி, வெளியே கொண்டு வருவதுதான் இந்நாடகங்களின் நோக்கமாக இருந்தது.

அயனஸ்கோ தனது ஆரம்பகால ஓரங்க நாடகங்களில் பார்ரவையாளர்களை நாடகத்தோடு ஒன்றிப்போகாமல் பார்த்துக்கொள்ளும் வகையில் அன்னியப்படுத்தல் தன்மையுடன், பாத்திரங்கள் தங்களுக்குள் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளல் சிரமமானதும் பயனற்றவையும் என்பதாக காட்டினார். பாத்திரங்களுக்கு மேலாக சொற்களும், ஜடப்பொருட்களும் தங்களுக்கென்ற தனித்துவத்தன்மை பெறும் வகையில் இந்நாடகங்கள் விளங்கின.

அயனஸ்கோவின் ஆரம்பகால நாடகங்களில் ஒன்றான The Lesson மிகுந்த சிக்கலானதும், அரங்கேற்றத்தில் சிரமத்தையளிக்ககூடியது என்றும் நான் கருதியதுண்டு. ஆனால் பென்னேஸ்வரன் என்பவர் இதைத் தழுவி நேரடிநாடகம் என்று நினைக்குமளவிற்கு வெகுசிறப்பான பிரதியை உருவாக்கியிருக்கிறார்.

மிகுந்த உற்சாகத்துடன் புதிய ஆசிரியரைத் தேடிவரும் ஒரு இளம்பெண், ஏதோ நடக்கப்போவதாக அபாய அறிவித்தல் கொடுத்துக் கொண்டிருக்கும் பணிப்பெண், சித்தசுவாதீனமற்றவரான ஒரு பேராசிரியர்.

ஆரம்பத்தில் புத்திசாலியான மாணவி போலத்தோன்றினாலும், போகப்போக அவள் புத்திக்கூர்மையற்றவள் என்று தெரியவருவதும், கொஞ்சம் கொஞ்சமாக பேராசிரியர் மனம் பிறழ்ந்து போய், பணிப்பெண் எதிர்பார்த்த முடிவை அடைவதுமான இந்நாடகத்தை பார்வையாளர்களும் மிகுந்த வரவேற்புடன் ஏற்றுக்கொண்டமைக்கு பல காரணிகள் உண்டு.

பென்னேஸ்வரனின் மிகச்சிறப்பான பிரதி. புராந்தகன் இயக்குனராக அப்பிரதியின் வலுக்களை புரிந்து கொண்டு கலைஞர்களை ஆற்றுப்படுத்திய சீர்ச்சிறப்பு. பேராசிரியராக நடித்த குரும்பசிட்டி ராசரத்தினத்தின் நடிப்பு.

சொல்வதையே திருப்பச்சொன்னாலும் அதை ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு தொனியில் சொல்வதும், சொல்லிக்கொடுப்பதே ஒரு வெறியாக மாறுவதும், இடையிடையே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதும் - அவரது ஆளுமை முழுமையாகப் தெரியவந்த ஒரு அற்புதமான நடிப்புச் சாதனை.

இவற்றைப்போலவே மாணவியாக வந்த ஷாளினி சண்முகநாதன் தன் அறிவுக்குறைவை வெளிப்படுத்தியதும், பேராசிரியரின் மனப்பிறழ்வினால் பாதிக்கப்பட்டு தன் நோய்களைச்சொல்லும் இடங்களிலும், இறுதியில் வெடித்துச் சிதறுவதிலும் தன்பங்கை சிறப்பாகவே ஆற்றியிருக்கிறார்.

பணிப்பெண்ணாக வந்தவரின் நடிப்பு போதுமானதாக இருந்தது.

அரங்காடலின் வரலாற்றில் அரி ஓம் நம மிகநீண்டகாலத்திற்கு நினைவில் வைத்திருக்கக்கூடிய நாடகம்.

அதுமாத்திரமல்ல 14வது அரங்காடலே ஒரு திருப்புமுனைதான்.

No comments: