Tuesday, September 11, 2007

10வது அரங்காடல் தொடர்பான கட்டுரை

மொழிபெயர்த்தலும், தழுவலும் -ஈழநாடு

(கே.எஸ். பாலச்சந்திரன்)

வேற்று மொழிப்படைப்பை, அது நாவலாக, சிறுகதையாக, நாடகமாக எதுவாக இருந்தாலும், நாம் அதன் தாய் மொழியிலேயே படித்து, புரிந்து கொள்ள வல்லவர்களாக இருந்தாலும் சரி அல்லது ஆங்கிலத்தின் ஊடாக படிக்கும்போதும் சரி, ஏதோ ஒரு அழுத்தத்தை அல்லது பாதிப்பை அப்படைப்பு எம்மில் ஏற்படுத்தும்போது, அதை எமது மொழியின் ஊடாக எம்மவர்களோடு பங்கிட்டுக் கொள்ள விரும்புகிறோம். இவ்விருப்பமே மொழிபெயர்த்தல் செய்யவோ, தழுவல் செய்யவோ நம்மைத் தூண்டுகிறது.

எந்த இலக்கியப்படைப்பும் சொற்களின் கோர்வைதான் என்று இலகுவாகச் சொல்லிவிட்டாலும், அந்தச் சொற்களின் நேரடியான மொழிபெயர்ப்பு அந்த மூலப்படைப்பின் உயிரை அப்படியே கொண்டு வந்து விடாது. இது எந்த மொழிபெயர்ப்பாளனும் எதிர்நோக்கும் பிரச்சினைதான்.

மூலப்படைப்பை எழுதியவர் கூற விரும்பியதை நாம் இனம் கண்டு கொள்வது மிக முக்கியம். ஆனால் ஓரே படைப்பை மொழிபெயர்ப்பு செய்யும் இரண்டு எழுத்தாளர்கள் கூட இந்த இனம் காணும் வேலையில் வேறுபடலாம். இதையே சற்று நீடித்து சொல்வதானால் இப்படைப்பு இறுதியாகச் சென்றடையும் வாசகர்களோ, பார்வையாளர்களோ இன்னும் வேறுபட்ட அனுபவங்களைப் பெறலாம்.

~அச்சொட்டான| மொழிபெயர்த்தலை நேசிப்பவர்கள் ~மூலப்படைப்புக்கு துரோகம் இழைக்கப்பட்டு விட்டது| என்று உடனே கூக்குரல் எழுப்புவார்கள். எவர் என்னதான் சொன்னாலும் ஒரு படைப்பு அதன் பூரணத்துவத்தை, அதன் நோக்கை, அதன் தேவையைக் கூட தனது தாய்மொழியிலேயே முழுமையாகப் பூர்த்தி செய்யும்.

மூலப்படைப்பின் பின்னணி, அதன் காலம், கூறப்பட்ட கதையில் வரும் பாத்திரங்களின் தன்மை, சார்ந்த சமூகத்தின் பண்பாடு;, விழுமியங்கள் எல்லாவற்றையும் ஒரு மொழிபெயர்ப்பாளன் முதலில் தான் புரிந்துகொள்வதென்பது ஒருபுறமிருக்க, மொழிபெயர்க்கப்படும் தனது மொழியிலே அவற்றை எவ்வாறு பெயர்த்துக் கொண்டு வரப்போகிறான் என்ற சிக்கல் நிச்சயமாக இருக்கும்.

இதனால் மொழிபெயர்த்தல் சாத்தியமற்றது என்றும் சற்று மேலே போய் அவசியமற்றது என்றும் யாராவது கூறுவார்களாயின், எமது மொழி மட்டும் தெரிந்த ஒருவனின் சிந்தனை விரிவாக்கமோ, பரந்துபட்ட அனுபவச்செழுமையோ மறுக்கப்படுகிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

இதனால்தான் காலம் காலமாக மொழிபெயர்த்தல் நிகழ்த்தப்பட்டு வந்திருக்கிறது. இல்லாவிடின் வால்மீகி இராமாயணத்தை நாம் அறிந்து கொள்ள முடியாமல் போயிருக்கும். பக்கிம் சந்திரரின், சரத்சந்திரரின் வங்காள நாவல்களை, தாகூரின் கவிதைகளை நமது இளமைக்காலத்தில் வாசித்து பெற்ற அனுபவங்கள் சாத்தியமாகாமல் போயிருக்கும். ~மஞ்சரி| என்ற மாத இதழில் எப்போதோ வெளிவந்த ஏணஸ்ற் ஹேமிங்வேயின் ~கடலும் கிழவனும்| என்ற நாவலின் மொழிபெயர்ப்புதான் ஆங்கில இலக்கியத்தின் கதவுகளை எனக்கு திறந்து வைத்தது என்பது நடக்காமல் போயிருக்கும்.


எந்த இனமென்றாலும், எந்த மொழியைப் பேசுகின்றவர்கள் என்றாலும், எந்த நாட்டில் வாழ்கின்;றவர்கள் என்றாலும் மனித உணர்வுகள் ஒன்றானவை.
பாசம், நேசம், உறவு, தாபம் என்பவை வெளிக்காட்டும் அளவில் பேதமிருக்கலாமே தவிர எல்லாருக்கும் பொதுவானவை. எனவே எந்த மொழிப் படைப்பும் எமக்கு முற்றுமுழுதான அன்னியமானதாக ஆகிவிடாது.

வெறுமனே பாத்திரங்களின் பெயர்கள், நாடகத்தின் நிகழ்களங்களாக வரும் இடங்களின் பெயர்களை தமிழ்ப்படுத்துவதில் எனக்கு நம்பிக்கையில்லை. உதாரணமாக ஒன்றைக் குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன். 80களில் யாழ்ப்பாணத்தில் மேடையேற்றப்பட்டபோது, பாலேந்திராவின் ~கண்ணாடி வார்ப்புகளில் Laura, Amanda,Tom, Jim என்பவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதில் பார்வையாளர்களுக்கு சிரமம் இருக்கவில்லை.

காரணம் Amanda போன்ற தாய்மார்கள், முதிர்கன்னிகளாக திருமணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் Laura போன்ற மகளையும், பொறுப்பற்றவனாகக் கருதும் Tom போன்ற மகனையும் வைத்துக்கொண்டு Jim போன்ற ஒரு மருமகனுக்காக அக்கால யாழ்ப்பாணத்தில் வழிமேல் விழி வைத்து காத்திருக்கத்தான் செய்தார்கள்.

(எங்கள் பிராந்திய மொழிவழக்கில் ~வெப்பிகாரம்| என்று ஒரு வார்த்தைப் பிரயோகம் இருக்கிறது. மிகப் பெரிய ஏமாற்றத்தை, சோகத்தை மனதில் புதைத்து வைத்துக்கொண்டு வெளியில் ஒப்புக்கு சமாளித்துக் கொள்வதை அது குறிக்கும். இந்தச் சொல்லின் முழு அர்த்தத்தை அன்றைய மேடையேற்றத்தில் Amanda வாக நடித்த நிர்மலாவின் நடிப்பில் புரிந்து கொண்டது இப்போது என் ஞாபகத்திற்கு வருகிறது )

பொதுமையான கருத்துக்களைக் கூறுவதை விட்டு சற்று தனிப்பட்டதாக இக்கட்டுரை திசை திரும்பும் அவசியம் இப்போது நேர்கிறது. மொழிபெயர்த்தல் என்பதைவிட தழுவல் செய்வதில் சில அனுகூலங்களை நான் எனது அனுபவத்தில் கண்டிருக்கிறேன். எனது மொழி பேசும் பார்வையாளர்களுக்கு பரிச்சியமான, அவர்கள் தங்களைத் தொடர்பு படுத்தக் கூடிய, ஏதோ ஒரு வகையில் பொறி தட்டக்கூடிய கருத்துக்களைக்கூறும் படைப்புகளையே நான் அனேகமாக தேர்ந்தெடுத்திருக்கிறேன்.

நான் தழுவல் செய்த தள்ளு வண்டிக்காரர்கள் நாடகம், அதன் அண்மைய மேடையேற்றத்தின்போது சில எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டது. Murray Schisgal என்பவர் எழுதி 1979ம் ஆண்டிலிருந்து கனடாவின் சஸ்கச்சுவான் மாநிலத்தில் நிகழ்ந்த மிக அண்மைய மேடையேற்றம் வரை பலதடவைகள் மேடையேறிய இந்த மேடை நாடகத்தை ~வாசிப்பதற்கு மட்டும்| உரித்தானதாக ஒரு விமர்சகர் கருதிய விந்தையும் அரங்கேறியது.

புலம் பெயர்ந்த எந்தச் சமூகத்திலும் நேற்று வந்தவன், இன்று வருபவனுக்கு புத்தி சொல்ல நினைப்பதும், சிலவேளைகளில் பிழையான வழிநடத்தலையே வழங்குவதும், சற்று மேலே போய் புதிதாக வந்தவனை ஏமாளியாக்க முனைவதும் நடக்கத்தான் செய்கின்றன. இந்த குணாதிசயங்கள் புலம் பெயர்ந்த எம்மவர்களுக்கும் பொருத்தமுடையதென்றதினால்தான் இந்த நாடகத்தை தெரிவு செய்தேன்.

சம்பவங்கள் என்று பார்த்தால் கூட வியாபாரப்போட்டிகளும், அதன் ~சுத்து மாத்துகளும்| நமக்கு அன்னியமானவையல்ல. பாத்திரங்கள் என்றால், வாழ்வின் உச்சங்களை தொட்டு விடக் கனவு காணும் மனிதர்களை நாம் எங்கள் சமூகத்திலும் சந்திக்கத்தான் செய்கின்றோம்.

~ஆங்கிலத்தில் பெயரை மாற்றிக் கொள்ளுங்கள்| என்று புத்தி சொல்ல வருகிறீர்களா ? என்று ஒரு விமர்சகர் இந்த நாடகத்தின் ஒரு அம்சத்தை குறிப்பிட்டு ஆதங்கம் தெரிவித்திருந்தார்.

மூலப்பிரதியிலும் சரி, எனது தழுவலிலும் சரி - இப்படி நடக்கிறது என்றுதானே அங்கதமாகச் சொல்லப்பட்டது நடக்கவேண்டும் என்று சொல்லவேயில்லையே!. நமது பத்திரிகைளில் வரும் விளம்பரங்களில், வர்த்தகக் கைநூல்களில் உள்ள பெயர்களை ஒரு முறை கண்ணோட்டம் விட்டுப் பார்த்தால் போதும்.

~தெரிந்தது, தெரியாதது, புரிந்தது, புரியாதது| என்று நீண்டு போகும் சினிமா வசனம் இருக்கிறது. அதற்கு ஒப்பானதாக, தெரியாததை தெரிந்தது போலக் காட்டிக் கொள்வதும், புரிந்ததை புரியாததாகக் காட்டிக்கொள்வதும் எங்களுக்கு தெரியாததல்ல.

புரிவதும், புரியாமல் போவதும் அவரவர் இருப்பு நிலையை, மனநிலையைப் பொறுத்தது.
முதல் மேடையேற்றங்களின்போது பரிகசிக்கப்பட்ட ~Waiting for Godot” என்ற நாடகத்தின் சிறப்பை புரிந்து கொண்டு, காத்திருத்தலின் சோகத்தை நேரடி அனுபவமாக தெரிந்த சிறைக்கைதிகள் கண்ணீர் விட்டார்களாம்.

வாழ்க்கையில் என்றோ நடக்கும் என நம்பப்படும் எதற்காகவோ நாம் எல்லோரும் காத்திருக்கிறோம் என்பதை நாம் உணர்ந்து கொண்டால், Waiting for Godotதமிழில் மேடையேற்றப்படுவதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வோம்.

மொழிபெயர்ப்போ, தழுவலோ சம்பந்தப்பட்டவர்களின் கண்களின் ஊடாக, நமக்கு தெரியாத மனிதர்களை, அவர்கள் வாழ்வைத் தரிசிக்கிறோம். இந்தத் பார்வை மட்டுப்படுத்தப்பட்டது என நாம் அறியாமலில்லை. ஆனால் நமது தேடுகை தொடரப்படத்தான் வேண்டும்.

No comments: