காலஞ்சென்ற சிறுகதை எழுத்தாளர் குமார் மூர்த்தி எழுதியது
பா.அ. ஜயகரன் ஒரு சிறந்த நாடகப்பிரதியாக்கக்காரன் என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கிறார்.
சமூகத்தில் ஒரு வீதம் அல்லது இருவீதம் இருக்கும் மக்களின் பிரச்சனைதான் பேசப்பட்டது என்றாலும் அதை ஒரு தாக்கமான வலுவான முறையில் பார்வையாளர்முன் வெற்றிகரமான
முறையில் வைத்ததில் ஜயகரனின் ஆளுமை நன்கு புலனாகின்றது. ஆனால் இந்திரா பார்த்த சாரதியின் மழை நாடகத்தை நினைவுபடுத்துகிறதை தவிர்க்க முடியாவிட்டாலும் இணைத்துப் பேச முடியாதபடி வேறுபட்டதாகவே இருக்கின்றது.
பங்களா, கார், நிலபுலன்கள், நாய், வேலையாட்கள், என்று தடல்புடலாக செல்வாக்குடன் வாழ்ந்த செல்லையா வாத்தியார் குடும்பம் இன்று கனடாவில், பெருமை பேசல் ஒன்றைத்தவிர மிகுதி எல்லாம் இழந்துவிட்ட நிலை. நோயாளியாக படுத்தபடுக்கையில் செல்லையாவாத்தியார். முதிர் கன்னியாக அவர் மகள், தகப்பனின் பெருமைகளைக் கட்டிக்காப்பதில் அதீத ஈடுபாடு அதனால் வாழ்க்கை முழுவதும கன்னியாக இருக்க வேண்டியநிலை. இந்த வங்குரோத்து தனத்தையும் பெருமைகளையும் வெறுக்கும் இளையமகன். அவன் ரொறன்றோவில் கோப்பை கழுவும் வேலை.
கதை சுருக்கமான கதைதான். ஆனால் கூர்மையான வசனங்கள் பார்வையாளர்களுக்கு எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வசனங்கள் அதைவிட பழகிப்போன வசனங்கள் எனவே பார்வையாளன் மிக இலகுவாக நாடகத்துடன் ஒன்றக்கூடியதாக இருந்தது. ஆனால் கடைசிக் காட்சியில் இளையமகன், குடும்பத்தின் பிற்போக்குத் தனங்களை வெறுப்பவனாக எதிர்ப்பவனாக காட்டப்படுகிறது. அவனுக்கு அந்த விழிப்புணர்வு எங்கிருந்து வந்தது என்பது காட்டப்படவில்லை.
இது ஒரு சினிமாப்பாணி முடிவை ஒத்ததாக கதாநாயகன் பத்துபேரை ஒரே நொடியில் அடித்து சாய்த்துவிட்டு, கதாநாயகியின் கைச்சிராய்ப்புக்கு கட்டுப்போடுவது போன்ற கதையாக எடுத்துக் கொள்ளவதா?
கிண்டலா செய்கிறீர்கள் தற்கால இளைஞர்களுக்கு முற்போக்கு எண்ணங்கள் கூடப்பிறந்தது. அதை விளக்கவேண்டிய அவசியமேயில்லை என்பாரேயானால் , இங்குள்ள முக்காலே மூணுவீதம்பேர் கிலோ என்னவிலை என்று கேட்கும் நிலையில்தான் இருக்கிறார்கள் என்ற பதில்தான் வரும்.
பண்பட்ட நடிகரான கே.எஸ். பாலச்சந்திரன் செல்லையா வாத்தியராக நடித்திருந்தார். மொத்தமாக பத்து சொல்லுக்கூட பேசியிருக்கமாட்டார். சாய்மனைக் கதிரையில் படுத்தபடியே நாற்பது நிமிடமும் பார்வையாளர்களைக் கட்டுக்குள் வைத்திருந்தார். பிள்ளை கேற்றை பூட்டிவை ஆரும் உள்ள வந்திருவினம் இதைதான் திரும்ப திரும்ப சொல்லுகிறார். ஒவ்வொருமுறை சொல்லும் போதும் இன்னொரு முறை சொல்லுவாரா? என்ற எதிர்பார்ப்பு அவர் போத்தியிருந்த போர்வைகூட நடித்தது எனலாம்.
மகளாக நடித்த சுமதிரூபனின் நடிப்பு மிக யதார்த்தமாக திறம்பட நடித்திருந்தார். இதுதான் அவருடைய முதல் மேடையேற்றம் என நினைக்கிறேன். முகபாவம் வசன ஏற்ற இறக்கம் பாவனைகள், போன்றவற்றில் எந்தப் பிசிறும் இல்லாமல் தேர்ந்த நடிகைபோல் நடித்
திருந்தார். ஆல்பத்தைப் பார்ப்பதும் அந்த நினைவுகளில் மூழ்கிப்போவதும் தந்தைமேல் காட்டும் அக்கறையும், கோபம் வரும்போது சீறுவதும் பின் தணிந்துபோவதும் மிக இயல்பாக பாத்திரத்துடன் ஒன்றி செய்திருந்தார். அலங்கார ஒப்பனைவுகள் எதுவுமின்றி சோகத்தை
முகத்தில் அப்பிக் கொண்டு மற்றைய இரண்டு சிறந்த நடிகர்களுக்கு இணையாக ஈடுகொடுத்து நடித்திருந்தது மிகவும் பாராட்டுக்குரிய விடயமாகும்.
அடுத்து பாராட்டைப் பெறுபவர் திலீப்குமார். இதிலும் ஒருவரே இரண்டு பாத்திரங்களைச் செய்வதான ஒரு உத்தியை நெறியாளர் கையாண்டிருந்தார். மிகவும் வரவேற்க வேண்டிய விடயம் அதுவும் அந்தப் பாத்திரத்திற்கு திலீப்குமாரைத்தான் தேர்ந்தெடுத்திருந்தார்.
பொதுவாக திலீப்குமார் மேடையி;ல் தோன்றினால் பார்வையாளர்களுக்கு ஒரு கலகலப்பும் உற்சாகமும் தொற்றிக் கொள்ளும் எல்லா நிகழ்வுகளிலும் தொடர்ந்து தனது நடிப்பாற்றலால் ரசிகர்களை கட்டுக்குள் வைத்திருப்பவர். 'எல்லாப்பக்கமும் வாசல்’ நாடகத்தில் அவரின் நடிப்புப் பலருக்கு இன்னும் கண்முன் நிழலாடிக் கொண்டிருக்கின்றது. இதிலும் அவருடைய துள்ளலும் எள்ளலும் சோகமாக தொய்வைத் தரக்கூடிய இடத்தில் எல்லாம் தூக்கி நிறுத்தி நாடகத்தை சுறுசுறுப்பாக்கி விடுகின்றது. இளைய மகனாக வரும் செந்திலும் சுமாராக நடித்திருந்தார். இளைஞருக்குரிய படபடப்பும் கோபமும் எடுத்தெறிந்து பேசும் சுபாவமும் எரிச்சலும் வெளிக்காட்டி நடித்திருந்தாலும் ஏனோதெரியவில்லை ஒரு செயற்கைத்தனம் வெளிப்பட்டுக் கொண்டேயிருந்தது. இனிவரும் மேடையேற்றத்தில் நெறியாளர் இதில் கவனமெடுத்தால் நன்று.
(நன்றி - AnyIndian.com)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment