ஹரல்ட் பின்றரின் அரசியலும் நாடகங்களும் - (பரபரப்பு)
துஷி ஞானப்பிரகாசம்
2005ம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 15 திகதி, அந்த ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் விருது, இங்கிலாந்தை சேர்ந்த நாடகாசிரியர் ஹரல்ட் பின்றருக்கு வழங்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு வெளியான கணமே அதைப் பற்றிய சர்ச்சையும் ஆரம்பமானது. ஹரல்ட் பின்றர் இலக்கியத்திற்கான நோபல் விருதுபெறுவதற்கு தகுதியானவர் என்பதில் மாற்றுக்கருத்து இருந்துவிட முடியாது. ஆகவே சர்ச்சை அதைப்பற்றியதல்ல. அந்த விருது வழங்கப்பட்ட காலம்தான் சர்ச்சைக்குரியதாக இருந்தது.
விருது அறிவிக்கப்பட்ட 2005ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், தான் நாடகங்களை எழுதுவதை நிறுத்திவிட்டதாக பி.பி.சி.யுடனான நேர்காணல் ஒன்றில் பின்றர் தெரிவித்திருந்தார். “நான் இதுவரை 29 நாடகங்களை எழுதிவிட்டேன் என நினைக்கிறேன். அது போதுமானது” என அவர் கூறினார். “நான் நாடகங்களை எழுதுவதை நிறுத்திவிட்டாலும், கவிதைகள் எழுதுவதை நிறுத்திவிடவில்லை” என்றும் அவர் கூறினார். பின்றர் ஒரு கவிஞராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும், கட்டுரையாளராகவும்கூட அறியப்பட்டிருக்கிறார் என்றாலும், இலக்கியத்திற்கான அவரின் முக்கிய பங்களிப்பு அவரது நாடகங்களாகவே இருக்கிறது. இந்நிலையில், ஒரு நாடக ஆசிரியருக்கு, அவர் நாடகங்கள் எழுதுவதை நிறுத்திவிட்டபின் எதற்காக விருது வழங்கவேண்டும் என்ற கேள்வி எழுந்தது.
இந்த கேள்வியின் பின்புலத்தை ஆராய்ந்தால், இந்த கேள்விக்கான காரணம் இலக்கியத்தின் மீதோ அல்லது நோபல் பரிசின் மீதோ உள்ள அக்கறை அல்ல என்பது தெரியவரும். இதற்கான முக்கிய காரணம் விருது அறிவிக்கப்பட்ட 2005ஆம் ஆண்டிலும், அதற்கு முந்திய ஒரு தசாப்தமாகவும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை காட்டமாக விமர்சித்துவந்த முக்கியமானவர்களில் ஒருவராக பின்றர் இருந்திருக்கிறார். 2005ஆம் ஆண்டு காலகட்டத்தில்; ஈராக் மீதான போரை வன்மையாக எதிர்த்துவந்த பின்றர், தனது அரசியல் செயற்பாடுகளில் அதிக கவனம் செலுத்துவதற்காகவே தனது எழுத்துப் பணிகளை குறைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். ஆகவே சர்ச்சை, ஹரல்ட் பின்றர் என்ற நாடகாசிரியருக்கு விருது வழங்கப்பட்டது பற்றியதல்ல. ஹரல்ட் பின்றர் என்ற அரசியல் செயற்பாட்டாளருக்கு விருது வழங்கப்பட்டது பற்றியதே. இதை ஹரல்ட் பின்றரும் கூட ஏற்றுக்கொண்டிருக்கிறார் என கூறலாம். தனக்கு நோபல் விருது வழங்கப்பட்டது பற்றிக் கூறுகையில் அவர் “நான் ஏறக்குறைய ஐம்பது வருடங்களாக நாடகங்களை எழுதுகிறேன். நான் அரசியலிலும் மிகுந்த ஈடுபாடு உள்ளவனாக இருக்கிறேன். நான் அரசியல் ஈடுபாடு உடையவன் என்ற உண்மை எவ்வளவு தூரம் இந்த விருதுக்குக் காரணமாக இருந்தது என என்னால் உறுதியாக கூறமுடியாதுள்ளது” என கூறினார்.
பின்றரின் இடதுசாரி அரசியல் நிலைப்பாட்டை எதிர்ப்பவர்கள், அவருக்கான விருதையும் எதிர்த்து சர்ச்சை கிளப்பினாலும், பின்றரின் எழுத்துக்களில் இருந்து அரசியலையும் சமூக அக்கறையையும் பிரித்துவிட முடியாது என்பதே உண்மை. 1950ஆம் ஆண்டு தனது இருபதாவது வயதில் தனது முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டதோடு அந்த காலகட்டத்திலேயே ஒரு தொழில்முறை நடிகராகவும் தனது வாழ்க்கையை ஆரம்பி;த்த பின்றர், அக்காலத்தில் இருந்தே சமகால அரசியலிலும் ஈடுபாடு கொண்டவராக இருந்திருக்கிறார். இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிந்திய அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கையை விமர்சிப்பவராக, சித்திரவதைக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பவராக, பேச்சுச் சுதந்திரம் எங்கு ஒடுக்கப்பட்டாலும் அதை எதிர்த்துக் குரல் கொடுப்பவராக, துருக்கியினால் ஒடுக்கப்பட்ட குர்திஷ் மக்கள் சார்பாகவும், நேற்றோ படைகளால் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட சேர்பிய மக்களுக்காகவும், அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்குள்ளான ஈராக்கிற்காகவும், மேற்குலக நாடுகளால் சுரண்டப்படும் இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்காகவும் உலக அரங்கில் பரிந்து பேசியவராக பின்றர் இருந்திருக்கிறார். இதை நோபல் விருதுக்குழுவும் அங்கீகரிக்கிறது. பின்றருக்கு வழங்கப்பட்ட நோபல் விருதுக் குறிப்பில் ‘பின்றரின் எழுத்துக்கள் ஒடுக்குமுறைகளின் பூட்டிய அறைகளுக்குள் பலாத்காரமாக நுழைகின்றன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்றரின் நாடகங்கள் எல்லாமே வெளிப்படையான அரசியல் பின்புலம் கொண்டவை என்றும் கூறிவிட முடியாது. “நான் அரசியலில் மிக ஆழமாக ஈடுபட்டுள்ளேன். கலையிலும்; மிக ஆழமாக ஈடுபட்டுள்ளேன். சில வேளைகளில் இவை இரண்டும் சந்திக்கின்றன. சில வேளைகளில் சந்திப்பதில்லை” என பின்றர் கூறுகிறார். பின்றர் நாடகத்துறையுள்; நுழைந்த காலத்தில் பிரபல நாடக ஆசிரியராக விளங்கியவரும், பிற்காலத்தில் பின்றரின் நண்பராக இருந்தவருமான சாமுவல் பெக்கற் (Samuel Beckett) பின்றர் மீது பெரும் தாக்கத்தை உண்டுபண்ணியிருக்கிறார் என்பதை பினறரின் நாடகங்களில் இருந்த அறிந்துகொள்ள முடிகிறது. பெக்கற்றின் நாடகங்களின் அபத்தப் போக்கை பின்றரும் பின்பற்றியிருக்கிறார். மனித வாழ்வி;ன் நிலையின்மை, மனித வாழ்க்கையின் அபத்தத்தன்மை, மனித நினைவுகளின் நம்பகமற்ற தன்மை போன்ற விடயங்கள் பற்றி பெக்கற்றின் நாடகங்கள் பேசியது போலவே பின்றரின் ஆரம்பகால நாடகங்களும் பேசின. அதற்கும் மேலே ஒரு படி சென்று, மொழி அபத்தத்தன்மை உடையது, மனிதர்கள் மொழியை உண்மையான உறவாடலுக்கு அதிகம் பயன்படுத்துவதில்லை, மாறாக உளமார்ந்த உறவாடலை தவிர்த்துக்கொள்ளவே மொழியை அதிகம் பயன்படுத்துகிறார்கள் போன்ற கருத்துக்களும் பின்றரின் நாடகங்களில் பொதுவான கருத்துகளாக வலியுறுத்தப்பட்டன. எனினும் இவை கூட பின்றரின் அரசியல் நிலைப்பாட்டுடன் தொடர்பு கொண்டனவே என கூறுகிறார் நாடக விமர்சகரும், பின்றரின் சரிதையாளருமான மைக்கல் பிலிங்றன் (Michael Billington). “பின்றரின் ஆரம்பகால நாடகங்கள் பால், குடும்பவாழ்வு, திருமணம் போன்றவற்றின் ஒடுக்குமுறை அரசியல் பற்றி பேசுகின்றன. பிற்கால நாடகங்கள் அரசியல் பற்றிய தனிநபர் நிலைப்பாடுகளால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றி பேசுகின்றன” என பிலிங்றன் கூறுகிறார்.
பின்றரின் நாடகங்கள் எழுதப்பட்ட காலத்தை வைத்து அவற்றை ஆரம்பகால நாடகங்கள், பிற்கால நாடகங்கள் என சுலபமாக பிரித்துவிடலாம். ஆனால், அவரின் பல நாடகங்களை வெளிப்படையான அரசியல் நாடகம் என்றோ அல்லது ஆழ்ந்த சமூக விமர்சனம் என்றோ பிரித்துவிடுவது அவ்வளவு சுலபமானது அல்ல. இந்த சிக்கலுக்கும் பிலிங்றனே மிக சுவையான தீர்வு கூறுகிறார். “பின்றரின் நாடகங்களைப் பார்ப்பதில் உள்ள பாதி சுவாரஸ்யம், அவை எதைப்பற்றியவை என உறுதியாக கூறமுடியாது இருப்பதுதான்” என்கிறார் பிலிங்றன்;. இந்த வகையில், தனது நாடகங்களை புரிந்துகொள்ளும் உரிமையை, தனது எழுத்துக்களுக்கு விளக்கம் கற்பிக்கும் உரிமையை பின்றர் மக்களிடம் இருந்து எடு;த்துக்கொள்ளவில்லை. தனது வாழ்வையும் கலையையும் மக்களின் உரிமைகளுக்காக போராடுவதற்கென பெரிதும் செலவிடும் ஹரல்ட் பின்றருக்கு அதுதான் அழகும் கூட.
நாடகங்கள் எழுதுவதை நிறுத்திவிட்டாலும், ஒரு நடிகனாக, இயக்குனனாக, பேச்சாளனாக, எழுத்தாளனாக ஹரல்ட் பின்றரின் அரசியல் பயணமும், நாடகப் பயணமும் கைகோர்த்துத் தொடர்கின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment