Friday, September 14, 2007

13வது அரங்காடல் பற்றிய விமர்சனங்கள்

இரண்டு நாட்களில் மூன்று நாடகங்கள்- திருமாவளவன்

(13வது அரங்காடல் பற்றிய பகுதியை மட்டும் இணைத்திருக்கிறோம்)

புராந்தகனின் ‘துயரில் தோயும் தூரிகை’, சுந்தர ராமசாமியின் ‘சீதை மார்க் சீயாக்காயத் தூள்’ என்ற சிறுகதையை மூலமாகக் கொண்ட பிரதி. இதே மூலக்கதையை ஏற்கனவே இரண்டு தடவை தமிழகத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் நாடகமாக மேடையேற்றப் பட்டதாக அறிந்திருக்கிறேன். புராந்தகனிடம் இது தொடர்பாக வினாவிய போது நாடக ஒத்திகையின் இறுதி நாட்களில்தான் தனக்கு இவ்விடையம் அறியக்கிடைத்தது எனக் கூறினார். எனது வியப்பெல்லாம், சுந்தர ராமசாமி நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதை எழுதியிருந்த போதும் குறிப்பிட்ட சிறுகதை எப்படி இருநாடக இயக்குனர்களை கவர்ந்ததென்பதே.

புராந்தகன் மூலச் சிறுகதையை சிறிதளவும் சிதைக்காது, அதேவேளை ஒவியருக்கும் வியாபாரிக்குமான உரையாடைலை சற்று நீட்டியிருந்தார். அது மூலக்கதைக்கு மேலும் மெருக்கூட்டுவதாக அமைந்தது. பின்புற நடு மேடையில் ஓவியம் வரைவதர்க்கான சீலை வைக்கப்பட்டிருந்தது. இதனால் ஒவியம் வரையும் போது, அல்லது அதை இரசிக்கும் போது நடிகர்களின் முக உணர்வுகளை அனுபவிக்க முடியவில்லை. நடிகர்கள் நடிப்பாற்றலால் நாடகத்துக்கு மேலும் சிறப்புத் தந்தனர். ஏற்கனவே மாஹாகவியின் ‘கோடை’, குழந்தை சண்முகலிங்கத்தின் ‘எந்தையும் தாயும்’ போன்ற நல்ல நாடகங்களை இயக்கிய நாடக அனுபவம் உள்ளவர் இவர். புகலிடத் தமிழர்களுக்கு நாடகம் என்பது அமைச்சூர் வகை சார்ந்ததுதான். (இலக்கியமும் கூட) இவர்களுக்கு இவை முழுநேரத் தொழில் அல்ல. அல்லது இலாபந்தருவதும் அல்ல. ஆத்ம திருப்திகாக சிரமங்களிடையே செய்வது. புராந்தகனுக்கு இப்படி நாடகம் செய்ய வாய்பிருப்பது பாராட்டப்பட வேண்டியதே. இருந்தாலும், இவர் மேடை தொடர்பாக இன்னும் கரிசனை கொள்ள வேண்டும் என்பது என் பேரவா.

இளைய பாரதியின் ‘வெட்க வில்லைகள்’ ஏற்கனவே ஓரிரு தடவைகள் மேடையேற்றப்பட்ட நாடகம். இவர் இன்றைய ஈழ அரசியல் நிலையின் படிமமாக ஒரு கனேடிய தமிழ் குடும்பத்தை மேடையில் அமர்த்தியிந்தார். இதை படிமம் என தெரியப்படுத்துவதற்காக ஒப்பனையையும் நாடக மாந்தர்கள் பேசும் மொழியையும் செயற்கைத்தனமாக்கியிருந்தார். இவை மட்டும் நாடகம் கூற வந்த படிமத்தை புரிந்து கொள்வதர்க்கு போதுமானதாக இருக்கவில்லை. இதில் சிக்கல் என்னவெனில் இளையபாரதியிடமிருந்து இந்த அளவுக்கு உத்திகள் நிறைந்த ஒரு நாடகத்தை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. இதனால் பார்வையாளர்களிடம் தேடல்; ஏதும் இருக்கவில்லை. உதாரணமாக, இது சக்கரவர்த்தி அல்லது திருமவளவனின் நாடகம் என்று சொல்லியிருந்தால் பார்வையாளர்கள் அந்த நாடகத்தை முழுமையாக அனுபவித்திருப்பார்கள்.

எனக்கு நாடகம் பேசிய விடையத்துக்கப்பால், அவர் பாவித்த உத்திகள் ஆச்சரியப்பட வைத்தது. ஒரு நல்ல நாடகத்தைப் பார்த்த அனுபவம் கிடைத்தது

(நன்றி - திருமாவளவன் வெளி)

* துயருக்குள் தோயும் தூரிகை - 2வது மேடையேற்ற்ம் பற்றிய கருத்து - வெற்றிமணி

No comments: