Wednesday, September 12, 2007

12வது அரங்காடல் தொடர்பான கட்டுரை

12வது அரங்காடல் நாடக நிகழ்வினைக் குறிக்கும் முகமாக இக்கட்டுரை வெளிவருகின்றது - வைகறை

பாப்லோ நெருடா என்ற மக்கள் கவிஞன்

(கே.எஸ். பாலச்சந்திரன்)

இருபதாம் நூற்றாண்டின் சிறந்த கவிஞரென கருதப்படும் பப்லோ நெருடா வின் நூறாவது ஆண்டு நினைவு தினம் சென்ற ஆண்டு கொண்டாடப்பட்டபோது அவரது இறப்புக்கு ஏதோ ஒரு வகையில் காரணமாக இருந்த சிலி நாட்டு அரசாங்கமும், இராணுவமும் கொண்டாட்ட ஒழுங்குகளில் முக்கிய பங்கு வகித்தன என்பது வியப்புக்குரியதுதான். சிலி நாட்டின் சகல தர மக்களினாலும் நேசிக்கப்பட்டதோடு, பப்லோ பிக்காசோ, சார்லி சாப்ளின் போல உலகம் பூராவும் அறியப்பட்டவராக பப்லோ நெருடா விளங்குகிறார்.

ஓரு புகையிரத பாதை செப்பனிடும் ஊழியரின் மகனாக 1904 ல் பிறந்த நெவ்ராலி றிக்காடோ றெயிஸ் பெசுவால்ரொ (இது தான் பப்லோ நெருடாவின் ஆரம்பப் பெயர்) இரண்டு மாத காலத்திற்கிடையில் தனது தாயைப் பறி கொடுத்தவர். இந்த சோகம் அவரது வாழ்நாள் பூராவும் அவரது பல கவிதைகளில் இழையோடியது.

பிறப்பு என்ற கவிதையிலே --
அதிரும் பூமியின் பரல் என்ற இடத்தைச் சார்ந்தவன் நான்
திராட்சைகள நிரம்பி வழியும் அந்நிலத்தில் இறந்த என் தாயிடமிருந்து உயிர் பெற்றவன்

என்று அந்த உணர்வைப் பங்கிட்டுக் கொள்ள முனைகிறார்.

தாயின் இறப்புக்குப் பின் தந்தையோடும் சிற்றன்னையோடும் சிலியின் எல்லைப்புற நகரமொன்றில் அவர் வாழநேர்ந்தது.
தனிமை நிரம்பிய சூழல், பசுமையான இயற்கை, விடாமல் பெய்யும் மழை என்பனவற்றோடு நெருடா அங்கே வாழ்ந்தார்.
உலகிலேயே அதிகமாக மழை பெய்யும் ஒரு மயானத்திலே எனது அப்பா அடக்கம் செய்யப்பட்டார் என்று சோகமாக ஒரு இடத்தில் குறிப்பிட்டிருக்கிறார். தனது 13 வயதிலேயே கவிதைகள் எழுதத்தொடங்கிய அவர் அந்த வயதில் கவிதைகள் என்னைத் தேடி வந்தன என்று சொல்கிறார்.



கவிதை வந்தது என்னைத்தேடி
எங்கிருந்து ?
ஒரு நதியிலிருந்தா ?
அன்றி வாடைக்காலத்திலிருந்தா ?
எப்படியென்றும் எப்போதென்றும் கூட
எனக்குத் தெரியாது
(மொழிபெயர்ப்பு - வினோபா கார்த்திக்)

கவிதை எழுதுவது தன் தந்தைக்கு தெரியக் கூடாதென்பதற்காக செக்கோசிலோவாக்கிய கவிஞர் ஜான் நெருடாவின் பெயரை தனது புனைபெயராகச் சூட்டிக் கொண்டார். அதுவே அவரது சொந்தப்பெயராக காலகெதியில் வந்தது.

13 வயது சிறுவனின் கவிதைகளால் ஈர்க்கப்பட்ட அவ்வூரைச் சேர்ந்த பெண்கள் கல்லூரியின் தலைமை ஆசிரியை (இவரும் பகழ்பெற்ற ஒரு கவிஞர்) அவரது அபிமானியாக மாறி ஆதரவு கொடுத்தார். தனது 20வது வயதில் அவரது காதல் கவிதைகள் - 20 காதல் கவிதைகளும் ஒரு துன்பியல் கவிதையும் என்ற தலைப்பில் தொகுப்பாக வெளிவந்து அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. தொடர்ந்து பிரபலமான இலக்கிய சஞ்சிகைகளில் அவரது கவிகைள் வெளிவந்தன.

சிலி நாட்டு இளைஞர் தங்கள் காதலிகளுக்கு எழுதும் கடிதங்களில் இளங்கவிஞன் பப்லோ நெருடாவின் கவிதை வரிகளை பயன்படுத்தினார்கள். லத்தீன் அமெரிக்க நாடுகளில் கவிஞர்களை மற்ற நாடுகளுக்கு தூதுவர்களாளக அனுப்பும் ஒரு மரபு இருந்திருக்கிறது.. இந்த வகையிலேயே சிலிநாட்டின் தூதுவராக இந்த இளங்கவிஞனை அனுப்ப, சிலி அரசாங்கம் தீர்மானித்தபொழுது தூர கிழக்கு ஆசிய நாடுகளில்; ஒன்றை தேர்ந்து கொள்ளும் பொறுப்பு நெருடாவிடமே விடப்பட்டது. தன்னால் உலகப்படத்தில் எங்கு இருக்கிறதென்று கண்டுபிடிக்கமுடியாத பர்மாவை அவர் தேர்ந்தெடுத்தார்.

புதிய நாடு, புதிய மொழி, புதிய மக்கள் இந்த அனுபவங்களே நெருடா என்ற கவிஞனுக்கு பல கவிதைகளின் அடித்தளமாக இருந்திருக்கலாம். பர்மா, இந்தியா, இலங்கை மீண்டும் இந்தியா, ஜாவா, சிங்கப்பூர் இவ்வாறாக நெருடா ஆசியாவில் தனது தொடர்பை உருவாக்கிக் கொண்டார்.

இந்தியாவில் 1929ல் காங்கிரஸ் மகாநாட்டில் கூட கலந்து கொண்டிருக்கிறார். மகாத்மா காந்தி, நேரு முதலானோர்களோடு நட்பை வளர்த்துக் கொண்டார். காலனித்துவத்திற்கு எதிரான தனது எண்ணங்களை நெருடா இங்குதான் பெற்றார். பலகாலத்திற்கு பின்னர் இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்தியாவிற்கு நெருடா வந்திருக்கிறார்.

தூதுவராக கடமையாற்றிய பின் ஒரு ஓய்வுக்காலத்தில் நெருடா நாடு திரும்பியபோது, சிலி பொருளாதாரச் சிக்கலில் தவித்துக் கொண்டிருந்தது சிலி நாட்டு நாணயம் பெறுமதியற்ற காகிதங்களாக விளங்கிய அந்த காலகட்டத்தில் வேலை கிடைப்பதே அரிதாகவிருந்தது. தொழிலாளர்கள் சோவியத் சார்பான அரசியல் அமைப்புக்களை அமைக்க போராடிக் கொண்டிருந்தார்கள். இந்த நேரத்தில்தான் நெருடாவின் பூமியின் வதிவிடம் என்ற கவிதைத் தொகுப்பு வெளிவந்தது.

தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் தூதுவராக பணியாற்றிய பொழுது, தன்னைப்போன்ற புகழ்பெற்ற இவக்கியவாதிகள், ஓவியர்கள் பிக்காசோ போன்றவர்களோடு நட்புறவு கொண்டிருந்தார். ஸ்பெயின் நாட்டில் பணியாற்றும் போது இவருக்கு நண்பரானவர் காசியா லோகா என்ற கவிஞர். அங்கு புரட்சி வெடித்தபோது அவர் கொல்லப்பட்டார். காசியா லோகாவின் மரணம் நெருடாவை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது.. நான் சில விளக்கங்கள் சொல்கிறேன் என்ற தலைப்பில் இவர் இறந்து போன தன் நண்பனுக்காக கவிதைகளை எழுதியிருக்கிறார்.

காதல் கவிதைகளை ஏராளமாக எழுதிய நெருடா தான் ஏன் அவற்றை பிறகு எழுதவில்லை என்று கூறும் கவிதை மிகச்சிறப்பானது. ஸ்பானிய உள்நாட்டு யுத்தம் அவரை மிகவும் பாதித்த விட்டது.

தெருவெங்கும் இரத்தம், தெருவெங்கும் இரத்தம், இளந்துளிர்களின் இரத்தத்தால் அன்றோ நிரம்பி வழிந்தது. என்று அவரது கவிதைகள் கூறத் தொடங்கின.

ஸ்பெயின் சம்பவங்களுக்குப் பிறகு அவர் சிந்தனைகள் தீவிரவாதப் போக்கடைந்தன. நாடு திரும்பிய நெருடா பின்தங்கிய மாவட்டம் ஒன்றின் பிரதிநிதியாக, செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஆதரித்த விடெலா என்பவரே ஜனாதிபதியாக வந்தவுடன் பணக்காரர்களோடு கை கோர்த்துக்கொண்டு நேர்மாறாகச் செயல்படத்தொடங்கியதை நெருடாவினால் பொறுக்கமுடியவில்லை. விடேலாவின் அரசாங்கத்திறகு எதிரான அவரது பொறி பறக்கும் பேச்சுக்களை சிலிக்கு எதிராக கட்டளை பிறப்பிக்கப்பட்டது என்ற கவிதையிலே பிரதிபலிக்க காணலாம். இக்காலகட்டத்தில் அவர் பொதுவுடமைக்கட்சியில் சேர்ந்து கொண்டார். அரசாங்கத்தினால் தேடப்படும் அளவிற்கு நிலை மாறியது. கட்சியின நண்பர்களின் துணையோடு அவர் நாட்டை விட்டு ஆர்ஜென்ரினாவிற்கு மலைப்பாதைகளின் ஊடாக குதிரையில் தப்பிச் சென்றார். நெருடாவிறகு 1971ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தபோழுது பரிசை ஏற்றுக் கொண்டு, ஸ்வீடன் நாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவில், தான் தப்பியோடிய அனுபவத்தை ஒரு கவிஞனுக்கேயுரித்தான அழகுநடையில் சொல்லியதைக் ஒலிப்பதிவாக கேட்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தத.

" Andes மலைத்தொடர் வழியே எங்கள் பயணம் நடந்தத. மாபெரும் காடுகள் நீண்ட குகைகளின் ஊடே நாங்கள் ரகசியமான பயணம் மேற்கொள்ளும் வகையில் எங்களைச்சூழ்ந்திருந்தது. யாரும் சென்ற அடிகளும் இல்லை. பாதையும் இல்லை. நாங்கள் நால்வரும் குதிரைகளில் மராமரங்கள், கடக்கமுடியாத ஆறுகள், நிமிர்ந்து நிற்கும் மலைச்சிகரங்கள், எல்லையற்ற பனிப்படலங்கள் இவை விதித்த தடைகளையும் மீறி என் சுதந்திரத்தை நோக்கி பயணமானோம்."

மக்களின் அபிமானத்தைப் பெற்ற நெருடா சிலிநாட்டின் ஜனாதிபதி தேர்தலில் போடடியிடும் நிலை வந்தபோது பொதுவான ஒரு அபேட்சகருக்காக விட்டுக் கொடுத்தார். அவர்தான் நெருடாவிற்கு மிக நெருங்கியவரான சல்வடோர் அலண்டே. அலண்டேயின் வெற்றிக்காக நெருடா முழுமூச்சுடன் வேலை செய்தார்.

உலகிலேNயு ஜனநாயக தேர்தல் ஒன்றில் கேரளாவில் நம்பூதிரிபாட் தலைமையில் பொதுவுடமைக்கட்சி ஆட்சிக்கு வந்ததென்றால் ஒரு நாட்டின் ஜனாதிபதியாக ஒரு இடதுசாரி ஆட்சிக்கு வந்தது அமெரிக்காவிற்கு பொறுக்கவில்லை. அலண்டேயின் அரசாங்கம் அடிமட்டத்தில் இருந்த சிலி மக்களுக்கு நன்மையான சட்டங்களை கொண்டு வந்தன. இடதுசாரி அரசாங்கத்தை செயலிழக்கச் செய்வதற்கு அமெரிக்கா தன்னாலான சகல முயற்சிகளையும் எடுத்தது. சிலி நாட்டில் இருந்த அமெரிக்க தூதுவரே நேரடியாக சவால் விட்டார். அமெரிக்கா சகல அழுத்தங்களையும் பிரயோகித்தது. உலகின் ஜனநாயக காவலன் என்று கூறிக்கொள்ளும் அமெரிக்கா, ஜனநாயகரீதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக பொருளாதார தடைகளைக் கொண்டு வந்த விந்தைகள் அரங்கேறின. பொருளாதார தடைகள் மூலம் நாட்டில் சிக்கல்களை உருவாக்கி புரட்சி ஒன்றினை தோற்றுவிப்பதே அமெரிக்காவின் நோக்கமாக இருந்திருக்கிறது. அதற்கு சிலி நாட்டின்; இராணுவத்தின் ஒரு பகுதியினர் துணை போனார்கள்.

அலண்டேயின் ஜனாதிபதி மாளிகை சுற்றிவழைக்கப்பட்டு தாக்கப்பட்டது. தனது நண்பரான பிடல் காஸ்ட்ரொ அன்பளிப்பாகக் கொடுத்த துப்பாக்கியினாலேயே தன்னைச் சுட்டுக்கொண்டு அலண்டே தற்கொலை செய்து கொண்டார். தன் நண்பரின் இந்த முடிவு நெருடாவை மிகவும் பாதித்தது. அவரது நம்பிக்கைகளெல்லாம் சிதைந்து போயின. அவர் நேசித்த தொழிலாளர்கள் ஏராளமாகக் கொலையுண்டனர். விவசாயிகள் சுடப்பட்டனர். நாடெங்கிலும் சர்வாதிகார ஆட்சியின் படுகொலைகள் நிகழ்ந்தன.

மனம் உடைந்த போன நெருடா 1973 செப்ரெம்பர் 23ந்திகதி யன்று, அதாவது சல்வடோர் அலண்டே இறந்து 12 நாட்களில் இறந்து போனார்.. அவரது உடல் அவரது வசிப்பிடத்திலேயே பல நாட்களாக கிடந்தது. திருப்பி நகருக்குள் விடப்பட்ட ஆற்றினால் அவரது வீட்டின் கீழ்ப்பாகம் சேறும் சகதியுமாக இருந்தது. அப்படியிருந்தும் சர்வாதிகார ஆட்சிக்கோ, இராணுவத்துக்கோ பயந்து போகாமல் மக்கள் அங்கு வந்தார்கள். அவரது கவிதைகளை, அவரது இலட்சியங்களை, சித்தாந்தங்களை நேசிததவர்கள் அங்கு வந்தார்கள். அஞ்சலி செலுத்தினார்கள்.

நெருடா என்ற அந்த மாபெரும் கவிஞனின் மரண ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் எந்தவிதமான பயமுமின்றி துணிவுடன் அவரது கவிதை வரிகளையும், அவர் நேசித்த பொதுவுடமைக் கோசங்களையும் சத்தமிட்டுச் சென்றார்களாம்

நெருடா தனது கவிதைகளில் பாடு பொருளாக எதையுமே விட்டு வைக்கவில்லை. முன்னமொரு பொழுதில் உப்பு பற்றிய சில்லையூர் செல்வராசன் அவர்களின் கவிதை என்னைப் பிரமிக்க வைத்திருக்கிறது. அந்தக் கவிதையின்; மொழிபெயர்ப்பு பென்குவின் வெளியீட்டகம் வெளியிட்ட ஆங்கிலத் தொகுப்பொன்றில்; இடம் பெற்றது. வாசித்து மகிழ்ந்திருக்கிறேன். ஆனால் நெருடாவின் கவிதைகளோடு பரிச்சியம் ஏற்பட்டபோது அவரும் உப்பு பற்றிக் கவிதை எழுதியிருக்கிறார் என்றறிந்து வியப்படைந்தேன். நெருடாவின் கவிதை புதியதோர் பரிமாணத்தில் என்னை மிகவும் கவர்ந்தது.

இந்த உப்பை நான் முன்னம் ஒரு தடவை உப்பளத்தில் கண்டிருக்கிறேன்.
நம்ப மாட்டீர்கள்
அது பாடும்.
உப்புத்தான் பாடும்
உப்பளத்தில் பூமியின் அழுத்தத்தினால் முனகுவது போல பாடும்
அந்த மௌனப் பெருவெளியில் உப்பு பாடுவதைக்கேட்க என் உடலே நடுங்கும்.

நெருடா உப்பைப் பற்றி மாத்திரமல்ல. திராட்சை ரசம், தக்காளி, சோளம், மீன் இவற்றைப் பற்றியெல்லாம் பாடியிருக்கிறார்.

இந்த இடத்தில் நமது மகாகவியின் கவிதை ஞாபகத்திற்கு வருகிறது

இன்னதுதான் கவியெழுத
ஏற்ற பொருள் என்று பிறர் சொன்னதை நீர் சொல்லாதீர்
சோலை,கடல், மின்னல், முகில், தென்றலினை மறவுங்கள்
மீந்திருக்கும் இன்னல், உழைப்பு, ஏழ்மை, உயர்வு என்பவற்றைப் பாடுங்கள்

நெருடாவின் இறப்பிற்குப்பின் ஒரு சுவையான சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் தான் இறந்தாலும் ஒரு கழுகாக வருவேன் என்று நண்பர்களுக்கு சொல்லியிருக்கிறார். அவர் இறந்து சில காலத்தின் பின் ஒரு நாள் அவரது Isla Negra என்ற வீட்டின் கதவுகள் பூட்டிக்கிடக்க, பிரம்மாண்டமான கழுகு ஒன்று நடு வீட்டில் வந்திருந்ததாம்.

நெருடா இருந்திருந்தால் இந்த சம்பவத்தையே கவிதையாக வடித்திருப்பாரோ ?

1 comment:

இராவணன் said...

மிக நல்ல பதிவு.
மிகவும் நன்றி.